திருவள்ளூர் வைத்திய வீரராகவர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோயில் 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்றதாக விளங்கி வருகிறது. இங்கு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் வீரராகவ பெருமாள் கர்ப்பக்கிரகத்திலிருந்து புறப்பட்டு சொர்க்க வாசல் என்ற பரமபத வாசலை கடந்து வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
இதில், ஆட்சியர் எ.சுந்தரவல்லி உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
காக்களூரில்...
திருவள்ளூர் அருகே காக்களூரில் உள்ள சிவா விஷ்ணு ஆலயத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் தண்ணீரில் படுத்த நிலையில் ஜலநாராயணி தாயாரும் சமேத ஜலநாராயண பெருமாள் காட்சியளிக்கின்றனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய ஒரே இடமான இங்கு வெள்ளிக்கிழமை சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்து, சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன்பின்னர், சொர்க்கவாசல் திறப்பின்போது, கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
கும்மிடிப்பூண்டியில்...
புது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெருவாயலில்...
கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் வைகுண்டஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பெருவாயல் பகுதி வீதிகளில் கரிகிருஷ்ண பெருமாளின் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.
பெரியபாளையத்தில்...
மரகதவல்லி சமேத ஸ்ரீ நம்பாலீஸ்வரர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் உற்சவர் கருடசேவை நடைபெற்றது.
திருத்தணியில்...
திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள விஜயராகவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில், ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நெமிலியில்...
இதேபோல், நெமிலியில் உள்ள வைகுண்ட பெருமாள் கோயில், கொல்லகுப்பம் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில், அருங்குளம் பெருமாள் கோயில், ராமாபுரம் தசரூப லட்சுமி நாராயணசுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஸ்ரீஅஷ்டபுஜ பெருமாள் கோயிலில்...
வைகுண்ட ஏகாதசியை யொட்டி காஞ்சிபுரம் ஸ்ரீஅஷ்டபுஜ பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு முதல் திரளான பக்தர்கள் வடக்கு வாசல் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர், கோயில் வடக்கு வாசலின் வலது புறம் அமைந்துள்ள ஆண்டாள் சந்நிதிக்கு வந்து பக்தர்களுக்கு இரவு 10 மணிவரை ஸ்ரீபுஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜம் பெருமாள் அருள்பாலித்தார். இதற்காக, அஷ்ட புஜம் கோயில் தெரு, யதோத்காரி சந்நிதி தெரு, சின்னகாஞ்சிபுரம் சாலை என சுமார் ஒரு கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதேபோன்று காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயில், உலகளந்தபெருமாள் கோயில், விளக்கொளி, பாண்டவர் பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுராந்தகத்தில்...
மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகாலைநடைபெற்றது.
காலை 4 மணிக்கு உற்சவமூர்த்திகள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கருணாகரப் பெருமாள்சிலைகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் அதிகாலை 5.30 மணிக்கு மேளதாளம் முழங்க, திருக்கோயில் முன்புற வாயில் வழியாக வெளியே வந்தனர். அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கருட வாகன சேவை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள மாமல்லபுரம், திருவிடந்தை, திருவடிசூலம் பகுதி பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு கோதண்டராமர் கோயில், திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் சந்நிதி, திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் ,சிங்கப் பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிங்கபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோயில், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில், திருமலை வையூர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு, கருட வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.