
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் வெள்ளிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரமபதவாசல் திறப்பில் பங்கேற்று, ரங்கா - கோவிந்தா கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 18 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. டிசம்பர் 19 ஆம் தேதி பகல்பத்து உற்ஸவம் தொடங்கிய நிலையில், நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகல்பத்தின் பத்தாம் நாளான வியாழக்கிழமை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பரமபதவாசல் திறப்பையொட்டி பெரியபெருமாளுக்கும் (மூலவர்) , நம்பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
வெள்ளிக்கிழமை அதிகாலை திருப்பள்ளியெழுச்சி நடைபெற்ற பின்னர், விலை மதிப்பில்லா ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து விருச்சிக லக்னத்தில் அதிகாலை 3.45 மணிக்கு சிம்ம கதியில் புறப்பட்ட நம்பெருமாள், வலதுபுற மதில்படி வழியாக ராஜமகேந்திரன் திருச்சுற்றை வந்தடைந்தார்.
அங்கு, ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளுக்கு மரியாதைகள் செய்யப்பட்ட பின்னர், ராஜமகேந்திரன் திருச்சுற்று பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயிலைக் கடந்த நம்பெருமாள், மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக்கொடிமரம் வழியாக துரைப் பிரதட்சணம் செய்து குலசேகரன் திருச்சுற்று வழியாக, அதிகாலை 4.20 மணிக்கு விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
அங்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் வேத விற்பன்னர்களால் விண்ணப்பிக்கப்பட்டன. தொடர்ந்து தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது. வேத விற்பன்னர்களின் வேதங்களைக் கேட்ட நம்பெருமாள், அதிகாலை 4.45 மணிக்கு விரஜாநதி மண்டபத்திலிருந்து புறப்பட்டார். அங்கு கூடியிருந்த பக்தர்களின் ரங்கா... ரங்கா..., கோவிந்தா... கோவிந்தா... கோஷங்களுக்கு இடையே அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக கடந்து நம்பெருமாள் பிரவேசித்தார்.
இதன் பின்னர், சந்திரபுஷ்கரிணி, ராமர் சன்னதி, நடைப்பந்தல், தவுட்ரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்துக்கு வெளியே உள்ள திருக்கொட்டகை பகுதிக்கு காலை 5.15 மணிக்கு நம்பெருமாள் வந்தடைந்தார்.
ஆண்டு முழுவதும் தன்னைத் தேடி வந்து தரிசித்து செல்லும் பக்தர்களைத் தேடி தேடி காட்சியளிப்பது போல, திருக்கொட்டகை முழுவதும் வலம் வந்து நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் ரங்கராஜா... ரங்கராஜா... என கோஷமிட்டு நம்பெருமாளை மனமுருகி வழிபட்டனர்.
இதையடுத்து திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பகுதியில் ஆழ்வார்களுக்கு காட்சியளித்த பின்னர், நம்பெருமாள் காலை 9 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். அலங்காரம், அமுது செய்யப்பட்ட பின்னர், காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ரத்தினங்கியில் நம்பெருமாளைத் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பொதுமக்கள் சேவையுடன் அரையர் சேவையும் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு திருமாமணி மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் கருவறையைச் சென்றடைந்தார்.
பரமபதவாசல் திறப்பில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, மக்களவை உறுப்பினர் ப.குமார், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆர். ஜெயா, செய்தி - மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் எஸ்.பி. எழிலழகன், ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.