

வடலூர் அருகே உள்ள வள்ளலார் சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 146-ஆவது தைப்பூச ஜோதி தரிசன விழா, வியாழக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் சனிக்
கிழமை நடைபெற்றது.
முன்னதாக, வள்ளலார் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, காலை 10 மணியளவில் பல்லக்கில் வைக்கப்பட்டது. பல்லக்கை மீனவர்கள் சுமந்தபடி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு சென்றனர்.
வள்ளலார் சென்ற வழித்தடத்தில் பேழையானது கொண்டு செல்லப்பட்டது.
கருங்குழியில் வள்ளலார் தங்கிய இல்லம், பெருமாள், பிள்ளையார் கோயில்கள், தீஞ்சுவை நீரோடை ஆகிய இடங்களில் பொதுமக்கள் பேழைக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்பு, மேட்டுக்குப்பம் திருமாளிகைக்கு பேழை கொண்டு செல்லப்பட்டு, வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைக்கப்பட்டதும் அந்த அறை திறக்கப்பட்டது. சன்மார்க்க அன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து திருஅறையை தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை, வள்ளலார் தெய்வ நிலைய அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.