

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, பத்மாவதி தாயாரை அலங்கரித்து கொடி மரத்தின் அருகில் எழுந்தருளச் செய்தனர். இதையடுத்து, அர்ச்சகர்கள் கொடிமரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, அதில் திருநாமம் வரைந்து, அதற்கு தர்பை புல், பட்டு வஸ்திரம், மா விலை உள்ளிட்டவற்றைக் கட்டி அலங்கரித்தனர். பின்னர், தூப தீப நைவேத்தியம் சமர்ப்பித்து, பஞ்சராத்திர ஆகம விதிப்படி, தேவாதி தேவர்களை பிரம்மோற்சவம் காண வரும்படி அவர்களுக்கென உள்ள தாளத்தில் பாடி வரவேற்றனர்.
அதன்பின், கொடிமரத்தில் பெரிய மலர்மாலைகளைக் கட்டி, அதில் மஞ்சள் துணியில் வரைந்த யானை கொடியைக் கட்டி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவத்தையொட்டி, கோயில் முழுவதும் மலர் மாலைகளாலும், வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
சின்ன சேஷ வாகனத்தில்...
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலை தாயார் சகஸ்ரதீபங்களுக்கு இடையில் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவையில் அருள்பாலித்தார். இரவு 8 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகன சேவை நடைபெற்றது.
இதில் பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் நின்று கொண்டு, தாயாருக்கு பழம், நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். வாகன சேவையின் முன்னும் பின்னும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை பெரிய சேஷ வாகன சேவையும், இரவு அன்னப் பறவை வாகன சேவையும் நடைபெற உள்ளது.
பட்டு வஸ்திரம் சர்ப்பணம்
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் ஆந்திர அரசு சார்பில், தாயாருக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படுவது வழி வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை மாலை ஆந்திர அரசு சார்பில், பத்மாவதி தாயாருக்கு அமைச்சர் அமர்நாத் ரெட்டி பட்டு வஸ்திரத்தை சமர்ப்பித்தார். கோயில் வாசலில் இருந்து பட்டு வஸ்திரத்தை சுமந்து வந்த அவர், திருமலை ஜீயரிடம் அதனை சமர்ப்பித்தார்.
வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் மலர் பூங்கா:
பிரம்மோற்சவத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் கோயில் அருகில் உள்ள நந்தவனத்தில் மலர் பூங்கா ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
இதில், உள்நாட்டு வெளிநாட்டு மலர்களுடன் கூடிய பல வடிவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோலாபூர் மகாலட்சுமி, கோவர்த்தனகிரியை குடையாகப் பிடிக்கும் ஸ்ரீகிருஷ்ணர், பத்மாவதி தாயாரை காட்டில் விரட்டும் யானையிடமிருந்து, ஏழுமலையான் காப்பாற்றும் நிகழ்வு, பத்மசரோவரத்தில் மகாலட்சுமி தாமரை மலரில் அவதரித்தது உள்ளிட்டவை மலர்களுக்கிடையில் சிலைகளாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் இரு பெண்கள் ஏற்படுத்திய மணல்சிற்பம் காண்போரின் கண்களைக் கவர்ந்தன. அதனுடன் அரிசியில் வரைந்த ஓவியங்கள், பழங்கால நாணயங்களும் மலர் பூங்கா அருகில் வைக்கப்பட்டுள்ளன. இதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.