அந்தகாசுரனை வதம் செய்த பைரவர்

சிவபெருமானின் அஷ்ட வீரச் செயல்களில் ஏழாவதாகத் திகழ்வது அந்தகாசுரன் வதம் எனக் கூறப்படுகிறது.
அந்தகாசுரனை வதம் செய்த பைரவர்
Published on
Updated on
3 min read


சிவபெருமானின் அஷ்ட வீரச் செயல்களில் ஏழாவதாகத் திகழ்வது அந்தகாசுரன் வதம் எனக் கூறப்படுகிறது.

ஒரு சமயம் சிவபெருமான் உமாதேவியுடன் தமது கணங்களோடு மந்திர மலை மீது வீற்றிருந்தார். விளையாட்டாகப் பார்வதி தேவி ஈசனின் கண்களைக் கைகளால் மூடினாள். உலகம் இருளில் மூழ்கியது. இதைக் கண்டு அச்சத்தால் தேவியின் கரங்களில் வியர்வை அரும்பியது. கோபமுற்ற சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து கடும் வெப்பம் தோன்றியது. அந்த வெப்பமும் அம்பிகையின் வியர்வைத்துளிகளும் சேர்ந்து ஒரு உயிர் உண்டாயிற்று. அந்த உயிர்தான் அந்தகாசுரன்.

பார்வதி தேவியால் வளர்க்கப்பட்டு வந்த அந்தகாசுரனை, குழந்தை வரம் வேண்டி கடும்தவம் புரிந்த இரண்யாட்சனுக்கு, மகனாக வாரித்துக் கொடுத்தார் ஈசன். இரண்யாட்சனின் பாதுகாப்பில் வளர்ந்த அந்தகாசுரனுக்கு கண்பார்வை இல்லாததால், தந்தையின் இறப்புக்குப் பிறகு, அவரது சகோதரன் இரண்யகசிபுவின் மகன்களே அரசனாக முடி சூட்டிக் கொண்டனர்.

இதனால் வருத்தமுற்ற அந்தகன், பிரம்ம தேவரை நோக்கி உக்ரமான தவத்தை மேற்கொண்டான். தனது உடலைக் கூரான அம்பால் துளைத்து அறுத்து யாகத்தீயில் இட்டான். அவனுடைய கடுந்தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர் அவன் முன் தோன்றினார். தன் நிலையை விளக்கினான் அந்தகாசுரன். 

அழகிய உடலையும் ஒளிபொருந்திய கண்களையும் பல ஆயுதங்களையும் அந்தகாசுரனுக்கு வழங்கிய பிரம்மதேவர், மரணமற்ற நிலையை வரமாக தர இயலாது எனவும், அதற்கு ஈடான வரத்தைக் கேட்கும்படியும் கூற, "நான், என்று பேரழகியும், தனக்கு தாயுமாக இருக்கும் ஒரு பெண்ணை கண்டு மோகிக்கிறேனோ அப்போது மரணம் உண்டாக வேண்டும்" என்ற வரத்தைக்கோரி பெறுகிறான்.

ஒவ்வொரு உயிருக்கும் தன் தாயைப் பார்க்கும் போது பாசம் உண்டாகும், தாயைக் கண்டு மோகிப்பவர் எவருமில்லை என்பதால் அந்தகன் இந்த வரத்தைக் கேட்டான். ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால் பார்வதிதான் தன் தாய் என்பதை அவன் உணராமல் போனதுதான்.

காட்டை விட்டு தன் நாட்டை அடைந்து ஆட்சியைக் கைப்பற்றினான். மூன்று உலகங்களையும் வென்றான். எட்டு கோடி வருடங்கள் அவனுடைய ஆட்சிகாலம் நடந்தது. நாட்டில் உள்ள பெண்களை எல்லாம் துய்த்து இன்பம் பெற்றான். அவனுக்கு மந்திரிகளும் உதவினர். பல பெண்கள் வாழ்விழந்தனர். இந்த செய்தி தேவலோகத்துக்கும் தெரிய வந்தது. அந்தகனின் ஆட்சிக்கு முடிவுகாலம் நெருங்கியது.

அந்தகரனை வதம் செய்ய சிவபெருமான் புறப்பட்டார். அந்நாட்டுக்கு அருகில் இருக்கும் குகையில் வயதான தோற்றத்துடன் சிவ பெருமான், பார்வதி தேவியோடு தங்கினார்.

அந்நாட்டுக்குள் ஒரு குகையில் தவம் புரியும் முனிவருக்கு ஒரு அழகான பெண் சேவகம் செய்வது குறித்து மந்திரிகள் அந்தகனிடம் தெரிவிக்க, மோகம் தலைக்கேறிய அந்தகன், தானே நேரில் சென்று முனிவரைக் கொன்று அப்பெண்ணைக் கைப்பற்றுவதாகக் கூறிப் புறப்பட்டான்.

சிவபெருமானுடைய கணங்களுக்கும், அசுர சேனைகளுக்கும் போர் மூண்டது. அசுர சேனைகள் சின்னாபின்னமாயின. போரில் பின் வாங்கி மந்திரமலையை விட்டு ஓடி சமுத்திரக் கரையில் நிருதி திக்கில் பாதாள நகரம் அமைத்து அங்கே தங்கினான் அந்தகன். அவனது தவறை எடுத்துக் கூறி கொடும் பாவத்தில் இருந்து விடுவிக்க உடன் பிறவாத சகோதரன் பிரகலாதன் எடுத்த முயற்சிகள் வீண் போயின. 

எதையும் கேட்க மறுத்த அந்தகாசுரன், மந்தாரமலைக்கு தன்னுடைய தளபதியை அனுப்பி பார்வதியை தனக்குத்தந்து விடுமாறு ஈசனிடம் கூறச் சொன்னான். தன் கணவனுடன் போர் செய்து வெல்லும்படி பார்வதி சொல்லி அனுப்பினாள்.

போர் மூண்டது. அத்தனை அசுரப்படைகளையும் தேவர்கள் மற்றும் ருத்ர கணங்கள் வெட்டி வீழ்த்தினர் . அனைத்து வீரர்களையும் இழந்தும் அந்தகன் போரை நிறுத்தவில்லை. அந்தகன் ஈசனைத் தாக்கினான். சிவபெருமான் அந்தகனைத் தனது சூலத்தால் நெஞ்சில் குத்தினார். ஆனால் அந்தகன் இறக்கவில்லை. பதிலுக்கு அவன் அவரை நெற்றியில் கதையால் அடித்தான். அவரது நெற்றியில் இருந்து வழிந்த இரத்தம் நான்கு புறமும் சிதறி பைரவர்களை தோற்றுவித்தது.

சிவபெருமான் அந்தகனின் நெஞ்சை தனது சூலத்தால் பிளந்து தலைக்கு மேலே அந்தகனின் உடலை சூலத்திலேயே ஆயிரம் தேவ வருடங்கள் இருத்தினார்.

அந்தகனின் காயத்திலிருந்து பெருகி வந்த குருதி ஈசனின் உடலை சிவப்பாக்கியது. அந்தகனைக் கொல்ல சிவன் மிகவும் போராடினார். அதனால் அவரது நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள் ஒரு தெய்வீக கன்னியாகவும், அவரது முகத்திலிருந்து பூமியில் விழுந்த வியர்வைத் துளிகள் ஒரு தெய்வீக ஆணாகவும் உருமாறி நின்றார்கள். இரண்டு பேரும் அந்தகனின் காயத்திலிருந்து பெருகிய ரத்தத்தைப் பருகினார்கள். ஈசன் அந்த பெண்ணுக்கு சர்ச்சிகா என்றும், ஆணுக்கு மங்கள் (இவர்தான் செவ்வாய்க்கிரகமானார்) என்றும் பெயரிட்டார். இறுதியில் அந்தகன் தனது தவறை உணர்ந்து சிவ-பார்வதியை தன் தாய் தந்தையாக ஏற்றான்.

மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் சூலத்தை கீழே இறக்கினார். அவனது காயங்களை நீக்கிய ஈசன், பிரிங்கி என்று பெயரிடப்பட்டு அவனை சிவ கணங்களுக்கு தலைவனாக்கினார். அந்தகாசுரனை வதம் செய்ய ஈசன் எடுத்த ரூபமே பைரவர் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்தகாசுரனுடனான போரின் போது அவன் தாக்கியதால் ஈசனின் நெற்றியில் இருந்து விழுந்த இரத்தம் நான்கு புறமும் தெளித்ததால் எட்டு பைரவர்கள் உற்பத்தியாகி அவர்களிலிருந்து 64 பைரவர்கள் உருவானதாக வரலாறு கூறுகிறது.

காஞ்சிக்கருகே திருப்புட்குழி என்னு ஊர் பெயர் மாறி மணிகண்டீஸ்வரர் கோயில் என்னும் பெயரால் வழங்கப் படுகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போன்ற ஊர்களில் அந்தகாசுர வதம் பற்றியும் அவனை அழித்த பைரவர் பற்றியும் காணலாம். அருணகிரிநாதரின் திருவேற்காடு திருப்புகழிலும் அந்தகாசுர வதம் பற்றிய குறிப்பைக் காணலாம்.

இந்த சிறப்பான நிகழ்வு, அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில், நிகழும் ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு கார்த்திகை 8ம் தேதி (24.11.2017) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சிவபெருமானே மஹா பைரவராய் தோன்றி அந்தகாசூரனை சம்ஹாரம் செய்யும் சம்பா சஷ்டி எனப்படும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும். எனவே பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com