சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு பெருவழிப் பாதையில் நடந்து சென்று சன்னிதானத்தில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு வரிசையை (கியூ) அமைக்க திருவாங்கூர் தேவஸம் போர்டு திட்டமிட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இரு வழிகளை தேர்வு செய்வர். எருமேலியில் தொடங்கி சபரிமலை சன்னிதானம் வரை சுமார் 75 கி.மீ. தூரத்துக்கான காட்டு வழிப்பாதை முதலாவதாகும். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் 7 கி.மீ. சிறுவழிப் பாதை நடைப்பயணம் இரண்டாவதாகும்.
சிறுவழிப் பாதையில் வசதிகள்: பம்பையில் தொடங்கி சன்னிதானம் வரையிலான 7 கி.மீ. தொலைவு கொண்ட சிறிய பாதையில், நீலிமலை, அப்பாச்சிமேடு என்ற இரு ஏற்றங்கள் உள்ளன. இவை சற்று சிரமமான பாதைகளாகும். முன்பு இப்பாதையில் பாறைகள், மேடு பள்ளங்கள் இருக்கும். தற்போது சிமென்ட் தளம், படிகள், கம்பியைப் பிடித்து நடக்கும் வகையிலான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் ஓரளவு சிரமம் இன்றி இப்பாதையைக் கடக்க முடியும்.
பெருவழிப் பாதையில்: எருமேலியில் தொடங்கி பம்பை, சன்னிதானம் வரையிலான 48 மைல்கள் (சுமார் 75 கி.மீ.) கொண்ட பெருவழிப்பாதை அடர்ந்த காடு, மலைகளைக் கடந்து செல்வதாகும். எருமேலியில் இருந்து பேரூர்தோடு வரை தார்ச்சாலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஐயப்பனின் பூங்காவனம் தொடங்குகிறது. அங்கிருந்து சிவன் கோயில் வரையான பாதையை கடப்பதில் சிரமம் இருக்காது. அதன் பிறகு செல்லும் பாதை ஒற்றையடிப் பாதையாக உள்ள காட்டுவழிப் பாதையாகும்.
காளைகட்டி, அழுதா நதி, அழுதா மலை, கல்லிடும் குன்று, இஞ்சிப்பாறை கோட்டை, முக்குழி தாவளம், கரிவலந்தோடு, கரிமலை ஏற்றம், கரிமலை இறக்கம், பெரியானை வட்டம், சிறியானை வட்டம் என இவற்றைக் கடந்து சென்று பம்பையை அடைய வேண்டும். பாதங்களை பதக்கும் பார்க்கும் அளவில் சிறு கற்கள், மரங்களின் வேர்கள் ஆகியன அடங்கிய கரடுமுரடான இப்பாதையை பக்தர்கள் கவனமாகக் கடந்து செல்ல வேண்டும். ஒரு காலத்தில் மகரவிளக்கு காலத்தில் மட்டுமே இப்பாதையில் பக்தர்கள் வந்து கொண்டிருந்தனர். ஜனவரி 1- ஆம் தேதி முதல் இந்தப் பாதை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மண்டலப் பூஜை தொடங்கிய நாள் முதலே பக்தர்கள் இவ்வழியாக ஆயிரக்கணக்கில் வரத் தொடங்கியுள்ளனர்.
மணிக்கணக்கில் காத்திருப்பு: இப்பாதையில் இரு தினங்கள் பயணித்து சன்னிதானம் நோக்கி செல்லும் பக்தர்கள், சாதாரண வரிசையில் மணிக்கணக்கில் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. இதையடுத்து, பெருவழிப் பாதையில் வரும் பக்தர்களுக்கு தனியே அனுமதிச் சீட்டு அளித்து, அவர்களுக்கு சிறப்பு வரிசை ஒன்றை ஏற்படுத்த தேவஸம் போர்டு திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் 2016 -ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது. பெருவழிப்பாதையில் கொடுக்கப்படும் இந்த அனுமதிச் சீட்டைக் கொண்டுச் செல்லும் பக்தர்கள், பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் மரக்கூட்டம் என்ற இடத்தில் நிறுத்தப்படுவர். அங்கு அனுமதிச் சீட்டு பரிசோதிக்கப்பட்டு தனி வரிசையில் அனுமதிக்கப்படுவர். தற்போது, இணைய வழி முன்பதிவும் நிறைவடைந்துவிட்டதை அடுத்து, கரடுமுரடான பாதைகளைக் கடந்து வரும் பெருவழிப் பாதை பக்தர்களுக்கு சிறப்பு தனிவரிசையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாங்கூர் தேவஸம் போர்டு உறுப்பினர் ஒருவர் கூறியது: பெருவழிப்பாதையில் வரும் கரிமலை ஏற்றம் மிகவும் கடினமானது. இதன் வழியாக வரும் பக்தர்கள் மீண்டும் பம்பையில் இருந்து நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக வந்து சன்னிதானம் வர நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில், கரிமலை வழியாக வருபவர்களுக்கு அங்கு நுழைவுச் சீட்டு வழங்கி, மரக்கூட்டத்தில் ஏற்கெனவே பின்பற்றப்படும் தனி வரிசை முறைக்கு இணையாக சிறப்புத் தனி வரிசையை ஏற்படுத்தி, அவர்கள் சன்னிதானத்துக்கு விரைவாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.