திருவண்ணாமலையில் இன்று கார்த்திகை மகா தீபம்: தீபக் கொப்பரை மலைக்குப் பயணம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது சனிக்கிழமை (டிச. 2) மாலை 6 மணியளவில் மகா
சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு மகா தீப கொப்பரையை வணங்கும் கோயில் யானை ருக்கு.
சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு மகா தீப கொப்பரையை வணங்கும் கோயில் யானை ருக்கு.
Published on
Updated on
2 min read

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது சனிக்கிழமை (டிச. 2) மாலை 6 மணியளவில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்ட மகா தீப கொப்பரை மலைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. நிகழாண்டுக்கான தீபத் திருவிழா சனிக்கிழமை நடைபெறுகிறது. தீபத் திருவிழாவைக் காணவும், மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காணவும், 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வரவும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகா தீபக் கொப்பரை: 13 ஆண்டுகளுக்குப் பிறகு திருவண்ணாமலை நகர ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவில் புதிய மகா தீப கொப்பரையை செய்து அளித்தனர். இந்த கொப்பரையில் 2-ஆவது ஆண்டாக நிகழாண்டு தீபம் ஏற்றப்படுகிறது.
5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட இந்த மகா தீப கொப்பரைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
பின்னர், கோயில் யானை ருக்கு, கோயில் கோமாதா ஆகியவை மகா தீப கொப்பரையை வணங்கின. இந்த பூஜையில் கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் மற்றும் ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கொப்பரை மலைக்குப் பயணம்: பின்னர், கோயிலில் இருந்து அம்மனி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீப கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொட்டும் மழையையும் பொருள்படுத்தாமல் சுமார் 6 மணி நேரத்துக்குப் பிறகு 2,668 அடி உயர மலை மீது மகா தீப கொப்பரை கொண்டு சென்று பத்திரமாக வைக்கப்பட்டது.
பர்வத ராஜ குல வம்சத்தினர் 10-க்கும் மேற்பட்டோர் கொப்பரையை மலைக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டனர். கொப்பரையுடன் தீபம் ஏற்றப் பயன்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் கொண்டு செல்லப்பட்டது. மகா தீப கொப்பரை வைக்கப்பட்டுள்ள மலைப் பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலையில் பரணி தீபம்
சனிக்கிழமை (டிச.2) அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபத்தை சிவாச்சாரியார்கள் தங்கள் கைகளில் சுமந்தபடி கோயில் இரண்டாம், மூன்றாம் பிரகாரங்கள், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளை வலம் வருவர். பக்தர்கள் வணங்கிய பிறகு பரணி தீபம் மீண்டும் கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்படும்.
மாலை 6 மணிக்கு ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் சிவனே மலையாக விளங்கும் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.


கொட்டும் மழையில், 2,668 அடி உயர மலை மீது கொண்டு செல்லப்படும் மகா தீபக் கொப்பரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com