
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை புருஷா முனி வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலின் உலகப் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து, தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலாவும், இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
குதிரை வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள்: தீபத் திருவிழாவின் 8-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு 12.45 மணிக்கு குதிரை வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
புருஷா முனி வாகனத்தில் சந்திரசேகரர்: தீபத் திருவிழாவின் 9-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், புருஷா முனி வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா வந்தனர்.
திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் திரண்டு ஸ்ரீசந்திரசேகரரை வணங்கினர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் வீதியுலா: வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், கைலாச வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், சண்டிகேஸ்வரர் என பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.
கோயில் ராஜகோபுரம் எதிரில் உள்ள தேரடி தெருவில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெருக்களில் வலம் வந்த பிறகு நள்ளிரவில் மீண்டும் நிலையை வந்தடைந்தனர். சுவாமி வீதியுலா வந்த வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.