புராணப் பின்னணி கொண்ட வழக்கறுத்தீஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம்

தற்பொழுது காணப்படும் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பித்துக் கட்டப்பட்ட ஒன்று என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

சென்னையில் இருந்து 76 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காஞ்சிபுரம். சைவ, வைணவத் தலங்களை கொண்ட பழமையான நகரம். பல்லவர்கள் இங்கு தங்கள் தலைநகரை அமைத்து ஆட்சி புரிந்துள்ளனர். இந்நகருடன் ரோமானியர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததை, ரோமானியக் குடுவைகள் மற்றும் பிற சான்றுகள் கிடைத்துள்ளதை வைத்து அகழாய்வுகள் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. அத்தகு சிறப்பு பெற்ற காஞ்சிபுரத்தின் மையப் பகுதியில் அமைந்ததுதான் வழக்கறுத்தீஸ்வரர் கோயில். பச்சையப்ப முதலியார் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ள  இத்திருக்கோயில், பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோயில் அமைப்பு

தற்பொழுது காணப்படும் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் புதுப்பித்துக் கட்டப்பட்ட ஒன்று என்பதை அங்குள்ள கல்வெட்டுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இங்கு காணப்படும் கருவறை தாழ்ந்து அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம், நந்தி மண்டபம், கோயிலின் வடக்கே உற்சவமூர்த்திகள், செப்புத் திருமேனிகள் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கர்ப்பகிருகத்தில் எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரன், 16 பட்டை கொண்ட லிங்கமும் ஆவுடையாருடனும் காட்சியளிக்கின்றார். இதன் தென் பகுதியின் அருகில் பராசரஈஸ்வரர் என்றழைக்கப்படும் லிங்கமும் ஆவுடையாருடன் காணப்படுகிறது. இதுவே பராசர முனிவர் வழிபட்ட ஈஸ்வரன் என்றும், அவருக்குக் காட்சி அளித்து அவரது வழக்கை முடித்துவைத்தார் என்றும் புராணம் கூறுகிறது. இந்தக் கோயிலின் இப்பகுதியே மிகவும் பழமையானது என்று கருதலாம்.

வழக்கறுத்தீஸ்வரர் புராணம்

வசிட்ட முனிவரிடம் என்றும் பகை கொண்டுள்ள விசுவாமித்திர முனிவர், வசிட்டருடைய சாபத்தால் அரக்கனாகத் திரிந்துகொண்டிருக்கும் சுதாசன் என்ற அரக்கனை அழைத்து, வசிட்ட முனிவரின் புதல்வர்கள் மேல் ஏவ, அவர்களை சுதாசன் விழுங்கிவிடுகிறான். இதை அறிந்த வசிட்ட முனிவர் பெருந்துயர் கொண்டு உயிரை விட ஒரு மலை மேல் ஏறி கீழே விழுந்தார். அங்கு வந்த பூமாதேவி, வசிட்ட முனிவரைக் காப்பாற்றி பிழைக்க வைத்தார். வசிட்ட முனிவர் புத்திர சோகத்தால் வருந்தியதுடன், தனது மூத்த பிள்ளையான சக்தி முனிவரின் கர்ப்பிணி மனைவி வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவதைக் கண்டார். அதைப் பார்த்து அவர் பதற, திடீரென்று ஒரு குழந்தை அழும் குரல் கேட்டது.

என்ன ஏது என்று சுற்றி முற்றும் பார்க்க, சக்தி முனிவர் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தைதான் அழுவது தெரிந்தது. அப்போது திடீரென்று திருமால் தோன்றி, சிவபெருமானிடத்தில் அன்புகொண்டவனும், எல்லா நூல்களையும் கற்று அறிந்து என்னை ஒத்தவனாகவும் உள்ள ஒருவன் உன் மகனுக்குப் பிறப்பான் என்று சொல்லி மறைந்தார். இதைக்கேட்டு மனவருத்தம் நீங்கி மனம் மகிழ்ச்சி கொண்டார்.

சில நாள்களுக்குப் பிறகு, வசிட்டரின் மருமகளுக்கு பராசர முனிவர் பிறந்தார். பிறந்த உடனே பேசிய அக்குழந்தை, தனது தந்தையைப் பற்றி விசாரிக்க, உன் தந்தையை ஓர் அரக்கன் விழுங்கிவிட்டான் என்று தாய் சொல்ல, அதைக் கேட்ட பராசர முனிவர், சிவபெருமான் அருளால் இப்பொழுதே இந்த உலகத்தையே விழுங்கிவிடுகிறேன் என்றார்.

குறிக்கிட்ட வசிட்டர், அரக்கன் செய்த தவறுக்கு உலகம் என்ன செய்யும். அரக்கர் குலத்தை வேரறுக்க சிவபூஜை செய் என்று சொன்னார். பராசர முனிவர் தவம் இருக்க சிறந்த இடம் காஞ்சி என்று வசிட்ட முனிவர் சொல்ல, காஞ்சி நகருக்கு பராசர முனிவர் புறப்பட்டார். 

பராசர முனிவர் தினமும் கம்மை ஆற்றில் மூழ்கி, ஏகாம்பரநாதரை வணங்கி, மஞ்சள் நதிக்கரையில் மணிகண்டேசுவரருக்கு வடமேற்குத் திசையில் தனது பெயரால் ஒரு லிங்கம் ஸ்தாபித்து பூசித்து தவத்தை மேற்கொண்டார். சிவபெருமான் அவருக்கு காட்சி தந்து அருளினார். அது சமயம், என் தந்தையை ஓர் அரக்கன் விழுங்கிவிட்டான். எனவே, அந்த அரக்கர் குலத்தை அழித்து இந்த உலகைக் காக்க விரும்புகிறேன். அதற்கு ஒரு நல்ல பதிலை வழங்க வேண்டும் என்று சிவபெருமானிடம் பராசர முனிவர் வேண்டினார்.

தனது தவ வலிமையால் என்னை வந்தடைந்துள்ள உன் தந்தையைப் பார்க்க, நீ மேலும் ஒரு வேள்வி செய்து, அதில் அரக்கர்களைக் கொன்று தர்மத்தை நிலைநிறுத்துவாயாக என்று சொல்லி சிவபெருமான் மறைந்தார்.

பராசரரும் வேள்வி செய்து அசுரர்களைக் கொன்று, கோபம் தணிந்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அவரது பெயராலேயே இன்றும் வழக்கறுத்தீஸ்வரர் என்ற பெயரால் காஞ்சியில் உள்ள கோயில் அழைக்கப்பட்டு வருகிறது. அவர் வணங்கிய லிங்கம் பராசரஈஸ்வரர் என்ற பெயரிலேயே வணங்கப்பட்டு வருகிறது.

விநாயகர் சிற்பம்

இங்கு காணப்படும் விநாயகர் சிற்பம் மிகவும் அழகாகவும், நேத்தியாகவும் செதுக்கப்பட்ட ஒன்று. இளஞ்சிவப்பு நிறக் கல்லால் ஆனது. சுமார் 1 அடி உயரம் உள்ளது. பலகைக் கல்லால் அமைக்கப்பட்ட இந்த விநாயகர் சிற்பம் யோக நிலையில் காணப்படுகிறது. தாமரை மலரையே கிரீடமாகத் தலைப் பகுதியில் காட்டப்பட்டுள்ளது. சிவப்பு நிறக் கல்லால் வடிக்கப்பட்ட இந்த கலைச் சிறப்புமிக்க விநாயகர் சிலை, வட இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாம். பொதுவாக, அண்டைய நாடுகளுடன் போர் புரிந்து வெற்றிபெற்று வரும் சமயம், அங்குள்ள கலைப் பொருட்களை எடுத்துவருவது இயல்பு. அதுபோன்று இவ்விநாயகர் சிற்பமும் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும், இதன் காலம் கி.பி. 9 - 10-ம் நூற்றாண்டு எனவும் கருதலாம். 

இக்கோயிலில் பண்டைய காலக் கல்வெட்டுகள் ஏதும் இல்லை. சுற்றுப்புறச் சுவர்கள் அண்மைக்காலத்தில் கட்டப்பட்டவை. இவற்றில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 

ஒரு கல்வெட்டின் காலம் சாலி வாகன சகாபம் 1782 என குறிக்கப்பட்டுள்ளது. 

சுமார் 1860-ம் ஆண்டில் வாழ்ந்த அருணாசல செட்டியிடத்தில் பணம் கொடுத்து விளக்கு எரிக்கவும் தொடர்ந்த சபா காரியங்களை கவனிக்கவும், அதில் இருந்து வரும் வட்டிப் பணத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கு இடையூறு செய்பவர்கள் இம்மையில் வறுமையையும், மறுமையில் முக்தியின்மையையும் அடைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் வைசியர்கள் பரம்பரையைச் சார்ந்த கோயில் என்பதும் அவர்களே பராமரித்து வருவதும் புலனாகிறது.

இரண்டாவது கல்வெட்டின் மூலம், நவக்கிரகங்களை அமைத்து அதற்கு மண்டபம் எழுப்பியதையும், அடுத்து ஆற்காட்டு முதலியார் ஒரு மண்டபம் எழுப்பியதையும், அறியமுடிகிறது.

இத்தகு சிறப்புமிக்க கோயில் வைசிய பெருமக்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அத்துடன், இன்று (பிப்ரவரி 9-ம் தேதி) இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(ச. செல்வராஜ், மண்டல உதவி இயக்குநர், தொல்லியல் துறை, தஞ்சாவூர்)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com