திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹார திருவிழா

நாகை மாவட்டம், திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, காலசம்ஹாரம் நிகழ்வு புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் காலசம்ஹார திருவிழா
Updated on
1 min read

நாகை மாவட்டம், திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, காலசம்ஹாரம் நிகழ்வு புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
 எமனை காலால் சுவாமி எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில் என்பது ஐதீகம். இதையொட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகம் நட்சத்திரத்தன்று இரவில் இக்கோயிலில் எமசம்ஹார திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
 அதன்படி, நிகழாண்டுக்கான எமசம்ஹார திருவிழா ஏப். 20-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான எமசம்ஹாரம் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி, காலசம்ஹார மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இரவு 12 மணிக்கு தருமபுரம் இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில், காலனை வதம் செய்யும் எமசம்ஹாரம் நடைபெற்றது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பொறையாறு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 புராண வரலாறு: தீவிர சிவ பக்தரான மார்க்கண்டேயரின் ஆயுள் 16 வயதில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவரது உயிரை பறிக்க எமன் வந்தார்.
 அப்போது, மார்க்கண்டேயர் 107 சிவாலயங்களை வணங்கி விட்டு, 108-ஆவது கோயிலாக திருக்கடையூர் வந்தடைந்தார். அங்கு, மார்க்கண்டேயர் சிவலிங்கத்தை தழுவி மந்திரங்கள் உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது, மார்க்கண்டேயரை நோக்கி எமதர்மன் பாசக்கயிறை வீசவும், அது அவர் மீது மட்டும் விழாமல், சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது.
 இதனால், கடும் கோபத்துடன் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான், எமனை எட்டி உதைத்து, தன் சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். மேலும், மார்க்கண்டேயர் என்றும் சிரஞ்சீவியாக இருக்க அருள்பாலித்தார். இதனால், இத்தலத்து சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என அழைக்கப்படுகிறார்.
 இங்குள்ள காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால், எமபயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மார்க்கண்டேயர் சாகாவரம் பெற்ற ஊர் இது என்பதால் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்றவை அனுதினமும் இங்கு நடைபெறுகிறது.
 அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் பாடல் பெற்ற தலமாகவும் இது திகழ்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com