அலர்ஜியா? தோல் நோயா? யோகினி ஏகாதசியில் பெருமாளை தரிசனம் பண்ணுங்க!

சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்பக் காலம் ஆடி மாதம். இந்த மாதம் ஆன்மிக மாதமாக எங்கெங்கு பார்த்தாலும்
அலர்ஜியா? தோல் நோயா? யோகினி ஏகாதசியில் பெருமாளை தரிசனம் பண்ணுங்க!
Published on
Updated on
6 min read

சூரியன் திசைமாறி சஞ்சரிக்கும் ஆரம்பக் காலம் ஆடி மாதம். இந்த மாதம் ஆன்மிக மாதமாக எங்கெங்கு பார்த்தாலும் திருவிழாக்கோலமாக இருக்கும். அம்மன் கோவில்களில் பல்வேறு விசேஷ  வைபவங்கள் நடைபெறும். இன்று அனைத்து வைஷ்ணவ தலங்களிலும் யோகினி ஏகாதசி விரதமும் ஸ்ரீ மகா விஷ்ணுவிற்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

பஞ்சாங்கத்தில் ஏகாதசி

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது  சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது. 

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை, த்விதியை என்று ஒவ்வொரு நாளாக சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம்,  கொஞ்சமாக விலகி பௌர்ணமி நாளன்று நேர் எதிர்ப் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து சரியாக 180-வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார். 

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக்காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள்  பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளையும், பௌர்ணமி நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். ஏகாதசி எனும் வடமொழிச்சொல்  பதினொன்று எனப் பொருள்படும். பதினைந்து நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 

முப்பது நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பௌர்ணமி வரை உள்ள சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் பதினோராம் நாளும், பௌர்ணமி  அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள கிருஷ்ணபட்சம் எனப்படும் தேய்பிறைக்காலத்தின் பதினோராம் நாளுமாக இரண்டு முறை ஏகாதசித் திதி வரும். அமாவாசையை அடுத்துவரும்  ஏகாதசியைச் சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்த ஏகாதசியைக் கிருட்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.

வானியல் விளக்கம்

சூரியப் பாதையின் தளத்தில், புவியில் இருந்து பார்க்கும்போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையிலான கோணம் ஒரு அமாவாசையில் 0 பாகையில் தொடங்கி அடுத்த பூரணையில் 180 பாகை ஆகிறது.  அடுத்த அமாவாசைக்கு இது 360 பாகை சுற்றி மீண்டும் 0 பாகை ஆகும். இது சந்திரன் பூமியைச் சுற்றுவதால் ஏற்படுகிறது. ஒரு முழுச் சுற்றுக்காலத்தில் 30 திதிகள் அடங்குவதால் ஒரு திதி 12 பாகை  (360/30) அதிகரிப்புக்கான கால அளவைக் குறிக்கும்.

ஏகாதசி திதி பதினோராவது திதியும் 26-வது திதியும் என்பதால், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான கோணம் 120 பாகையில் இருந்து 132 பாகை  ஆகும் வரை உள்ள காலம் சுக்கிலபட்ச ஏகாதசி திதியும், 300 பாகையிலிருந்து 312 பாகை வரை செல்வதற்கான காலம் கிருஷ்ணபட்ச ஏகாதசியும் ஆகும்.

ஏகாதசி தோன்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனைத் துதித்தனர். அவர்களை  மகாவிஷ்ணுவைச் சரணடைய கூறினார் சிவபெருமான். அதன்படி அனைவரும் விஷ்ணுவைச் சரணடைந்தனர். அவர்களைக் காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். போர்  1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்தவராய் மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார்.

அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, 'முரன்' பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன்  நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது.

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள்  மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். எனவே, ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைப்பிடித்தால் அவரின்  அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

யோகினி ஏகாதசி தோன்றிய கதை

ஒருமுறை குபேரன் சிவ பூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு  நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை. பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான்.  "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும்" என்று சபித்தான். 

ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த  மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள். அவர் "யோகினி ஏகாதசி''யை அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவைப் பூஜித்த ஹேமமாலி நோய் நீங்கப் பெற்றான்.  குபேரபுரிக்கே திரும்பினான். 

தொழுநோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்

தொழுநோய்க்கான காரக கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையைக் கொண்டு அறியலாம். தொழுநோய் தோல் நோய் வகையைச் சார்ந்தது என்பதால் புதனை காரக கிரகமாக  கருதினாலும் தொழுநோய்க்கு முக்கிய காரக கிரகமாகக் கூறப்படுவது ராஜ கிரகமான சூரியனே ஆகும். என்றாலும் தொழுநோயின் அடிப்படை காரணங்கள், அறிகுறிகள் விளைவுகள் இவை அனைத்தையும்  கருத்தில் கொண்டு பார்த்தால் அனைத்துக் கிரகங்களுமே காரகமாகிவிடுகின்றனர்.

தொழுநோய்க்கான காரக கிரகங்கள்

சூரியன்:
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல்  நோயிக்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் D-க்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது  குறிப்பிடத்தக்கது.

சந்திரன்: 
நமது ஜாதகத்தில் லக்னத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநோய்  சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்:
காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோயான தொழுநோய்க்கு இன்றைய தின காரகரான செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும்  முக்கியமாகும். 

புதன்:

அனைத்துத் தோல் மற்றும் நரம்பு கோளாறுகளுக்கு புதனே காரகமாவார். தொழுநோயாளிகளுக்குத் தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவது  குறிப்பிடத்தக்கது. 

குரு:
குருவினால் நேரடியாகப் பாதிப்புகள் இல்லையென்றாலும் தொழுநோயை கர்ம வினையினால் ஏற்படும் நோய் என்றே ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எனவே ஒருவரின் ஜாதகத்தில் குருவின் நிலையைக்  கொண்டு கர்ம வினையை அறிந்துகொள்ள முடியும். மேலும், லக்ன பாவம் மற்றும் குருவின் நிலை ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை தெரிவிக்கிறது. நோய் எதிர்ப்பு குறைந்தவர்களையே தொழுநோய்  பீடிக்கிறது என மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

சுக்கிரன்:
தொழுநோய் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிறார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது  சரும நோயாக உருவெடுத்துத் தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிரங்கு, கொப்புளங்கள் எனப் பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு  முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்துச் சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

சனி:
உடம்பின் கட்டமைப்பின் காரகர் சனியாவார். மேலும் தொழுநோய் ஏற்படும்போது உடலுருப்புகள் செயலிழப்பு, வாதத்தன்மை, அங்கஹீனம் ஆகியவை ஏற்படுவது சனியின் காரகத்தன்மை ஆகும்.

ராகு/கேது:
சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தொழுநோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள  அனஸ்தீஷியாவை செயலிழக்கச் செய்வதால் தொழுநொய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால்  காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்தில் தெரிவித்து அதை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே!

தொழுநோய் மற்றும் தோல் நோய்க்கான கிரக சேர்க்கைகள்:

1.  சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2. சந்திரன் மிதுன, கடக, மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

3. லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4. செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5. சனி, செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்கும் சூரியன், செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்புகொள்வது.

7. சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன் ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதன் அல்லது   சந்திரனும் செவ்வாயுடன்  எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வெண்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏற்படும். 

9. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10, லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரண்டாம் வீட்டில் நிற்பது.

11. குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12. சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13. ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இணைந்து நிற்பது.
 
14. பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15. சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது.

16. பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். தொழுநோய் ஏற்பட இந்தக் கிரக சேர்க்கைகளில் அதிகப்படியான சேர்க்கைகளுடன் லக்னம்,  லக்னாதிபதி, ஆத்மகாரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம் எனப்படும்  தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஏகாதசி விரதமும் விஷ்ணு சஹஸரநாம பாராயணமும்:

பெரும்பாலான ஆஸ்திக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டு அதைத் தினமும் ஸ்தோத்திரம் செய்வதின் மூலம் அவரைத் தினமும் ஆயிரம் முறை பூஜித்தற்கான பலனைத் தரும் என்பார்கள். சஹஸ்ர என்றால் ஆயிரம் என்று அர்த்தம். ஆகவேதான் ஆயிரம் நாமங்களைக் கொண்ட இதன் பெயர் சஹஸ்ரநாமம் என்றாயிற்று.

இந்த நாமாவளியே அத்தனை சக்தி வாய்ந்தது என்பதான நம்பிக்கை இன்றல்ல, பல ஆயிரம் வருடங்களாகவே இருந்துள்ளது என்பதின் காரணம் விஷ்ணு சஹஸ்ரநாமத்துக்கும் மகாபாரதத்துக்கும்  நெருங்கிய சம்மந்தம் உள்ளது. சரியாகக் கூறினால் இந்த சஹஸ்ரநாமத்தை சனக குமாரர்களில் ஒருவரே பிதா மகனான பீஷ்மருக்கு உபதேசித்ததாகவும், பீஷ்மர் மூலமே இது மகாபாரத யுத்த முடிவில் அனைவருக்கும் தெரியக் காரணமாக இருந்தது என்பதுமே சரியானதாகும். ஆனால் இந்த சஹஸ்ரநாமத்தை எழுத்து வடிவில் முதலில் படைத்தது வேத வியாசர் ஆகும். வேத வியாசரே  மகாபாரதத்தை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது மிகவும் விசேஷமாகும். ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை நீக்கும் ஏகாதசி  இது. யோகினி ஏகாதசி விரதத்தை நாம் மற்ற ஏகாதசி விரதம் அனுசரிப்பதைப் போலவே அனுசரிக்க வேண்டும். முழுமையாக விரதமிருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். அரிசி,  கோதுமையால் செய்த உணவை உண்ணக் கூடாது. நாமும் யோகினி ஏகாதசி விரதமிருந்து நோய் இல்லா வாழ்வை அடைந்து மகாவிஷ்ணுவின் துதிபாடி பரமபதத்தை அடைவோமே!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.