வாழ்க வளமுடன் என்ற மந்திரச் சொல்!

வேதாத்திரி மகரிஷி வாழும் கலையை மனவளக்கலை மூலம் போதித்த மகான். திருமூலர், திருவள்ளூவர்...
வாழ்க வளமுடன் என்ற மந்திரச் சொல்!
Published on
Updated on
4 min read

வேதாத்திரி மகரிஷி வாழும் கலையை மனவளக்கலை மூலம் போதித்த மகான். திருமூலர், திருவள்ளூவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமூதாயப்பணி ஆற்றியவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்!’ 

இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம் என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்! நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடிய நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். 

வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். உடல் நலம் காக்க உடற்பயிற்சி, மனவளம் காக்க தியான பயிற்சி, உயிர் வளம் காக்க காயகல்ப பயிற்சி, குடும்ப நலம் காக்க அகத்தாய்வுப் பயிற்சி என வகுத்துக் கொடுத்தவர். 14/08/2018-வேதாத்திரி மகரிஷி அவர்களின் 108-வது பிறந்த நாள். சித்தர்கள் என்றால் காவி அணிந்து காட்டிலும் மேட்டிலும் துறவு வாழ்க்கை வாழ வேண்டும் என்றில்லை. இல்லறத்தில் துறவு மேற்கொள்ளலாம், இல்லறத்தில் இறைவனை காணலாம் என்று கூறி, அதன்படி வாழ்ந்து காட்டிய மகானின் அவதார திருநாளில் அவரைப் பற்றி இந்த பதிவில் தொடர்கின்றோம்.

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி கூடுவாஞ்சேரி என்னும் கிராமத்தில் நெசவுத் தொழில் செய்யும் வரதப்பமுதலி, முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியர்களுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயது முதலே வேதாத்திரி மகரிஷி அவரது தாயார் சின்னம்மாளிடம் நிறைய பக்திக் கதைகளையும், புராணக்கதைகளையும் அறிந்து கொண்டார்.

இவரது குடும்பச்சூழலில் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. தன்னுடைய சொந்த ஊரில் மூன்றாவது வகுப்பு வரை படித்த இவர், பின்னர் தங்கள் குடும்பத் தொழிலான தறி நெய்தலைச் செய்யத் தொடங்கினார்.

18-வது வயதில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு ஏற்பட்டது. சென்னையில் இவருக்கு ஆயுர்வேத மருத்துவர் எஸ்.கிருஷ்ணாராவின் நட்பு கிடைக்க, அவர் மூலமாக தியானம், யோகா போன்றவைகளைக் கற்றார் மகரிஷி.

தனது வாழ்க்கையின் குறிக்கோளாகிய முழுமையை உணரும் நோக்கத்தால் உந்தப்பட்டு; சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி போன்ற மருத்துவ துறைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். மேலும் இரண்டாவது உலகப்போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். பின்பு பொருளாதாரத் தன்னிறைவு பெற வேண்டும் என்று, தனது சுய முயற்சியினால் பல்லாயிரம் நபர்களுக்கு வேலை அளிக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய நெசவுத் தொழிற்சாலையை உருவாக்கினார்.

அச்சமயத்தில் அரசாங்கத் தொழிற்கொள்கை மாற்றம் காரணமாக வியாபாரம் திடீர் சரிவு நிலையை அடைந்தது. இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றுவதற்காக ஈட்டிய பொருள் அனைத்தையும் அவர்களுக்கே செலவழித்து அனைத்துப் பொருள் வளத்தையும் இழந்தார். அப்படியிருந்தும் மனத்தைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்து படிப்படியாக பொருளாதாரத்தில் தன்னை மேம்படுத்திக்கொள்ள அரிசி வியாபாரம் போன்ற பல்வேறுபட்ட தொழில்களைச் செய்து தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் துன்பத்தைப் போக்கவும் பாடுபட்டார். தன் இரண்டு மனைவியருடைய மனத்தையும் நன்கு புரிந்தவராய் இருவரிடமும் பிணக்கின்றி அன்புடன் வாழ்ந்து காட்டினார்.

வறுமையிலேயே வாழ அடியெடுத்து வைத்த அவரது உள்ளத்தில் வறுமை என்றால் என்ன? கடவுள் என்பது எது? அதை ஏன் காண முடியவில்லை? மனித வாழ்க்கையிலேயே ஏன் துன்பங்கள் தோன்றுகின்றன போன்ற கேள்விகள் அவ்வப்போது ஒலித்துக் கொண்டே இருந்தன. இவற்றிற்கு காரணங்கள் கண்டு தெளிவு பெறுவதற்காக ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விளைவாக தனது 35-வது வயதில் தன்னிலை விளக்கமாக இறைநிலையை உணர்ந்தார். அதன் அடிப்படையில் உலக மக்களுக்காக அவர் அளித்த வாழ்க்கை நெறியே மனவளக்கலை ஆகும்

தனது சகோதரியின் மகளை (லோகாம்பாள்) மணந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கினார். இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு அதிகமிருந்த போதிலும் தனது ஆன்மீகத்தேடலில் மிகுந்த ஆர்வத்துடன் நாட்டம் கொண்டிருந்தார். சித்தர்களின் நூல்களைக் கற்று, தியானத்தில் வெகுவாக ஈடுபட்டு தன்னை அறிதல் என்ற அகத்தாய்வு முறையில் விடாமுயற்சியுடன் ஈடுபட்டார்.

இவரது ஆழ்ந்த ஆன்மீகத் தேடலின் விளைவாக தனது 35-வது வயதில் ஞானம் பெற்றார். அதிலிருந்து அடுத்த 15 ஆண்டுகளில் பல உன்னதமான ஆன்மீகக் கருத்துக்களைத் தனது எழுத்துக்களின் மூலமாகவும், உரைகளின் மூலமாகவும் மக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் தனது நெசவு தொழிலை முற்றிலும் விட்டு விட்டு தன்னை முழுமையாக ஆன்மீகத் துறையில் ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்தப்பிரபஞ்சத்தைப் பற்றியும் மனித வாழ்க்கையைப் பற்றியும் தவநிலையில் தான்பெற்ற கருத்துக்களைப் பல கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் புத்தக வடிவங்களில் இந்த உலகுக்கு மகரிஷி அவர்கள் அளித்துள்ளார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய தமிழில் தனது தத்துவங்களை எடுத்துரைத்தார். எல்லா மதங்களின் சாரம் ஒன்றே என்பதை மகரிஷி அவர்கள் வலியுறுத்துகிறார்.

1957-ல் மகரிஷி 'உலக சமாதானம்' என்னும் நூல் ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு இவருக்குக் கிட்ட அங்கெல்லாம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவிலும், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

வேதாத்திரி மகரிஷி ஏறக்குறைய தமிழிலும் ஆங்கிலத்திலும் சேர்த்து எண்பது நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில:

• வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
• வாழ்வியல் விழுமியங்கள்
• பிரம்மஞான சாரம்
• நான் யார் ?
• ஞானக்களஞ்சியம்

தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜயோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.

மகரிஷி அவர்கள் வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்கோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது. வேதாத்திரி மகரிஷி, தனது தத்துவங்கள் மூலமாக, ஆன்மிக தேடலுக்கும், அமைதியான, நிம்மதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறார். இவரது ஆன்மிக தத்துவங்கள் அறிவியலையும் உள்ளடக்கி இருப்பது தனிச்சிறப்பு.

கடல் அலை எழுவதை பார்க்கிறோம். அலை என்பது நீரின் அசைவு. அலை என்னும் இயக்கத்தை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே மூலம். அலை என்பது தோற்றம். கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலையே அலை. இதைப்போலவே இந்த பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால், எஞ்சி இருப்பது இறைநிலை மட்டுமே என எளிய உதாரணத்தோடு விளக்குகிறார். அண்டவெளியே இறைவன் என்கிறார்.

மனித உறவுகள் மேம்பட  மகரிஷி கூறிய தத்துவங்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.

1. பேச்சிலும் நடத்தையிலும், பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையற்ற மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

2. பிரச்னைகள் ஏற்படும்போது மற்றவர்கள் முதலில் இறங்கி வர வேண்டும் என காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள். யாரையும் ஒப்பிடாதீர்கள்.

3. எல்லோரிடமும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

4. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை கூறவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

5. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.

6. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்.

8. மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். தயக்கத்துடனும் பயத்துடனும் பேசாமலும் இருக்காதீர்கள்.

9. மற்றவர் கருத்துகளை, செயல்களை, நிகழ்ச்சிகளையும் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

10. உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கு கேட்டதை அங்கு சொல்வதையும் அங்கு கேட்டதை இங்கு சொல்வதையும் விடுங்கள். உங்களை நோக்கி அது ஒருநாள் திரும்பும்.

11. நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதிடாதீர்கள். நீங்கள் முடியவே முடியாது என்று நினைத்ததை உலகில் ஒருவன் செய்து கொண்டிருப்பான்.

12.. உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். பிடிவாதத்தை கைவிடுங்கள்.

13.  அளவுக்கு அதிகமாய், தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். திருப்தி என்பது எல்லாவற்றிலும் மிக முக்கியம்.

14. அர்த்தம் இல்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டே இருப்பதை விடுங்கள்.

15. எந்த விஷயத்தையும் பிரச்னையையும் நாசூக்காக கையாளுங்கள்.

16. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆக வேண்டும் என்பதை மனதார உணருங்கள்.

17. 'நானே பெரியவன் நானே சிறந்தவன்' என்ற அகந்தையை விடுங்கள். வல்லவனுக்கு வல்லவன் இருக்கிறான்.

18. மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் என்கிறார் மகரிஷி.

வாழ்க வளமுடன் என ஒருவருக்கொருவர் வாழ்த்தும்போது பலவீனம் நீங்குவதோடு, வளர்ச்சிக்கான கதவும் திறக்கப்படுகிறது என்கிறார் மகரிஷி. மேற்சொன்ன 18 கருத்துக்களில் ஏதேனும் ஒன்றையாவது இன்று கடைப்பிடித்திட முயற்சி செய்வோம்.

குரு வாழ்க ! குருவே துணை!!

குரு உயர்வு மதிப்பவர் தம்மை தரத்தினை உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

- ராகேஸ் TUT

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com