புத்திர தோஷம் ஏற்படுவதற்கான காரணமும், அதற்கான பரிகாரமும்..

புத்திர தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன, எந்தக் கோயிலுக்கு செல்லலாம், என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.
புத்திர தோஷம் ஏற்படுவதற்கான காரணமும், அதற்கான பரிகாரமும்..
Published on
Updated on
3 min read

புத்திர தோஷம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன, எந்தக் கோயிலுக்கு செல்லலாம், என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.

புத்திர தோஷம் என்பது ஒவ்வொரு லக்னத்திற்கும் வேறுபடும். பொதுவாக எந்த லக்னமாக இருந்தாலும் 5-ம் இடம்தான் புத்திர ஸ்தானத்தைக் குறிக்கும். எனவே, அந்த 5-ம் இடத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டியது அவசியம். 

நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நமக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் எனக் கூறுகிறார்கள். அந்தவகையில் 5-ம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகத் திகழ்கிறது. 

ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாகும். 

ஒருவேளை 5-ம் இடத்தில் உள்ள பாவகிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

அதேபோன்று, ஆணின் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து, பெண்ணின் ஜாதகத்தில் 7-ம் இடம் நன்றாக இல்லாமல் இருந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஒருவரிடம் கடன் பெற்றால் அதை முறையாக திருப்பிச் செலுத்த வேண்டும். அப்படி கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினால், அதனால் சந்ததி பாதிப்பு உண்டாகும் என்று ஜோதிட விதி கூறுகிறது. 

அமாவாசை விரதம் கடைப்பிடிப்பது நமது பெற்றோர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும். தாய், தந்தையை இழந்தவர்கள், கணவனை இழந்த மங்கையர்கள், அமாவாசை விரதம் முறையாக இருந்து இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். 

முறையாக தர்ப்பணம் செய்து அமாவாசை விரதம் கடைபிடிக்காதவர்களுக்கும் புத்திர தோஷம் உண்டாகிறது. பிள்ளைகளின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. ஆண் சந்ததி உண்டாகத் தடை ஏற்படுகிறது. 

புத்திர தோஷம் எப்படி அறியலாம்? 

தம்பதியரின் ஜாதக அமைப்பில் ஒருவருக்குப் புத்திர ஸ்தானம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஒருவருக்கு வலிமையுடன் இருந்தால் பெண் குழந்தைக்கான வாய்ப்பு நிச்சயம் உள்ளது. புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருப்பினும், தம்பதியருக்கு ஆண் குழந்தை இல்லாததற்கு அவர்கள் வசிக்கும் வீட்டின் உகந்த திசை வாயிற்படி இல்லாததும் முக்கிய காரணமாகும். 

தொடர்ந்து ஆண் குழந்தைகளுக்கான காரணம்

தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் நூறு சதவீதம் நல்ல நிலையில் இருந்தால், அதாவது புத்திரஸ்தானம் சர ராசியுடன் சேர்ந்து நல்ல நிலையில் இருந்தாலும், ஜாதகருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கும். 

தொடர்ந்து பெண் குழந்தைக்கான காரணம்
தம்பதியரின் ஜாதக அமைப்பில் புத்திர ஸ்தானம் நூறு சதவிகிதம் நல்ல நிலையில் இருந்து, அதாவது புத்திர ஸ்தானம் உபய ராசியுடன் சம்பந்தம் பெற்று நல்ல நிலையில் இருந்தால் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. 

இரட்டைக் குழந்தைக்கான காரணம்..

தம்பதியருக்குப் புத்திர ஸ்தானம் நல்ல நிலையில் இருந்து கருத்தரித்த நேரமும், இடமும் இரட்டைக் குழந்தைகளுக்கான அமைப்பை நிர்ணயம் செய்வதும் இதற்குக் காரணமாக அமையும். 

புத்திர தோஷம் போக்கும் கோயில்கள்

• திருநெல்வேலி பேராத்துச்செல்வி திருக்கோயில்

• திருநெல்வேலி தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் 

• கைலாசநாதர் திருக்கோயில், ராசிபுரம், நாமக்கல்

• கோயம்புத்தூர் கைலாசநாதர் திருக்கோயில்

• வேம்பத்தூர், சிவகங்கை மாசாணியம்மன் திருக்கோயில் 

• மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில்

• ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம், 

• செல்லாண்டியம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் 

• உறையூர், திருச்சி சிவந்தியப்பர் திருக்கோயில், 

பரிகாரம்

உங்கள் நட்சத்திரமும் அமாவாசையும் கூடும் ஒரு நாளில் தம்பதியராக இராமேஸ்வரம் கடலில் 21 முறை மூழ்க வேண்டும். பின்பு, கோயில் பிரகாரத்திற்கு சென்று அங்குள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமியை தரிசனம் செய்யலாம். 

ஸ்ரீகாளஹஸ்தி, திருவெண்காடு, திருக்கருகாவூர், திருநாகேஸ்வரம் போன்ற தலங்களுக்குச் சென்று உரிய வழிபாடு, பூஜைகள் செய்து வந்தால் சந்தான பாக்கியம் கிட்டும். 

பௌர்ணமி, தமிழ் மாதப் பிறப்பில் அன்னதானம் செய்துவர வம்சம் விருத்தியாகும். 

உங்கள் வீட்டில் நாக படம் உள்ள தெய்வத்தின் முன்பு 51 தீபங்கள் ஏற்றி வரலாம். நவதானிய சுண்டல் செய்து சிறுவர்களுக்கு விநியோகம் செய்யலாம். 

வெள்ளியில் ஒரு தலையுள்ள நாகம் வைத்து வீட்டில் தினசரி வழிபாடு செய்ய வேண்டும். இதனால் நாகத்தால் ஏற்பட்ட தோஷம் நீக்கும். 

ஹரிவம்சம் என்ற இதிகாசத்தை படித்தாலோ, மற்றவர்கள் படிக்கும் போது கேட்டாலோ புத்திர தோஷம் விலகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com