சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 4) - புள்ள மங்கை

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள புள்ளமங்கை, சக்கரப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஏழாவது தலம்.
சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 4) - புள்ள மங்கை
Updated on
3 min read

தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் உள்ள புள்ளமங்கை, சக்கரப்பள்ளி சப்தஸ்தானத்தின் ஏழாவது தலம். தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ள அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் தாண்டி சாலை இருகூறாகப் பிரிகிறது இதில் மேற்கு நோக்கிய திருவையாற்று சாலையில் சென்றால் அரை கிமி தூரத்தில் உள்ளது புள்ளமங்கை கோயில்.

கோயில் திருப்புள்ளமங்கை முதற்பராந்தகசோழன் காலத்து அற்புதமான கலைப்படைப்பு. புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த தலமென்பது ஐதிகம். தென்கரை தேவார பாடல் பெற்ற தலங்களில் இது 16-வது தலமாகும்.  

ஊரின் பெயர் 'புள்ள மங்கை' என்றும், கோயில் பெயர் 'ஆலந்துறை' என்றும் வழங்கப்பெற்றது. இன்று ஊர்ப் பெயர் மாறி 'பசுபதி கோயில்' என்று வழங்குகின்றது. புள் என்றால் கழுகு 'புள்ளமங்கை' என்றதற்கேற்ப இப்போதும் கோபுரத்தில் கழுகுகள் வசிப்பதாகக் கூறுகின்றனர். குடமுருட்டி ஆற்றின் கரையில் திருக்கோயில் உள்ளது. ஆலமரத்தைத் தலமரமாகக் கொண்டு விளங்கிய தலம் ஆதலின் 'ஆலந்துறை' என்று பெயர் பெற்றிருத்தல் வேண்டும். அமுதத்தைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை இறைவன் அமுது செய்த இடம் இது என்பது தலபுராணம். பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.

மூன்று நிலை ராஜ கோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் - ஆலந்துறைநாதர், இறைவி - அல்லியங்கோதை, கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இக்கோயில் வழிபாட்டில் இருந்துள்ளது. திருஞானசம்பந்தரால் தேவார பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. புள்ளமங்கை ஒரு பிரமதேயம் ஆகும். நான்குவேதங்கள் ஓதும் பிராமணருக்கு வழங்கப்படும் நிலம் பிரமதேயமாகும். புள்ளமங்கையில் மகாசபை செயல்பட்டு வந்துள்ளது. முதலாம் பராந்தகன் காலத்தில் (கி.பி. 907 - 955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்பெற்ற கருவறை, இதனைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது.

இறைவன் ஆலந்துறை மகாதேவர் என்று இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறார். காவிரியின் தென்கரைத் தலங்களுள் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் தாங்குதளம் முதல் கலசம் வரை கற்றளியாக கட்டப்பட்டுள்ளது. வெற்றியின் நினைவாக எழுப்பப்படும் ஜயத விமானம் இக்கோயிலுடையதாகும். கோயிலின் விமானம் 3 தளங்களுடன் நாகரபாணியில் அமைந்துள்ளது. கருவறை விமானம் சுவர்களில் உள்ள தேவக்கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறை, அர்த்தமண்டபம் சோழர் கலைப்பாணியில் உள்ளது. கருவறை சதுர வடிவமானது. இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். அர்த்தமண்டபத்தில் வாயிற்காவலர்களும், நந்தியும் உள்ளன.

புள்ளமங்கை கோயிலில் 21 கல்வெட்டுகள் உள்ளன. 18 கல்வெட்டுகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. புள்ளமங்கலம் கோயிலில் முதலாம் பராந்தகனின் 3-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு காலத்தால் முந்தியது. இதன் மூலம் அந்த அரசனே இக்கோயிலைக் கட்டியுள்ளான் என்பதும் உறுதிப்படுகிறது. புள்ளமங்கை கோயிலுக்கு அளிக்கப்பட்ட விளக்குக் கொடைகள் அனைத்தும் நிலக்கொடைகளாகவே வழங்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்தில் கோயில்கள் நிலவுடைமை சமுதாயத்தை சார்ந்திருந்தது என்பதை இது காட்டுகிறது. ஆதித்த கரிகாலன் காலத்துக் கல்வெட்டொன்று இக்கோயிலில் உள்ள காளாபிடாரிக்கு கொடையளித்த விவரத்தைக் கூறுகிறது. இதற்குக் கொடையளித்தவர்கள் யாவரும் பிராமணரல்லாதவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளமங்கை ஒரு மகாசபையாகச் செயல்பட்டு வந்துள்ளது. இந்த மகாசபையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிராமணர் அல்லாதவர்களாக இருந்தனர். முதலாம் இராசராசனின் 12-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு சந்திரகிரகணத்தன்று சபை கூடியதைக் குறிப்பிடுகிறது. 

கருவறை புறசுவற்றில், 108 நாட்டிய கரணங்கள், இராமாயண காட்சிகள் ஆகியன சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள கோஷ்ட துர்க்கை - மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கிறது. கருங்கல் குடை நிழலில், எருமைத் தலைமீது நின்று, சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க; இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சிதர; திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாத்தூணி விளங்க, துர்க்காம்பிகை விளங்கும் கோலம் - இக்கோலம் தனிச் சிறப்பு. (திருநாகேச்சுரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை என்றும்; இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com