சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 5) - சக்கரமங்கை

சப்தஸ்தானத்தில் திருச்சக்கராப்பள்ளி முதன்மையான தலமாகும். தேவாரப்பதிகம்..
சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 5) - சக்கரமங்கை
Updated on
3 min read

சப்தஸ்தானத்தில் திருச்சக்கராப்பள்ளி முதன்மையான தலமாகும். தேவாரப்பதிகம் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் 121-வது தலம். ஞானசம்பந்தர் பதிகம் பெற்றது.  தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து 15 கிமீ தூரத்தில் உள்ளது சக்கரப்பள்ளி. பிரதான சாலையில் இடது புறம் அலங்காரவளைவினை கடந்து  சிறிது தூரம் வந்தால் ஆலயத்தினை அடையலாம்.  

சோழர்காலத்தில் வணிகப்பெருவழியில் அமைந்த பெரும் வணிக நகரம் செம்பியன்மாதேவி காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது. செம்பியன்மாதேவி இவ்வூர்  இறைவனை மலர்கொண்டு வழிபடும் புடைப்புச்சிற்பம் இதனை உறுதிப்படுத்தும். இறைவன் - சக்கரவாகீசர் இறைவி - தேவநாயகி. 

முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் நித்தவிநோத வளநாட்டு கிழார்  கூற்றத்து அகழிமங்கலத்து பிரம்மதேயம் திருசக்கராப்பள்ளி எனக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. 

இறைவனது உச்சியை கண்டதாக பொய் சொன்ன பிரம்மன், இறைவனால் சபிக்கப் பெற்று சக்கரவாகப் பறவை வடிவிலேயே பூமிக்கும் வரமுடியாமல், பிரம்ம  லோகத்திற்கும் திரும்ப  முடியாமல், சதாசர்வ காலமும் சக்கரவாகேஸ்வரரையும் தேவநாயகியையும் வானில் வலம் வந்தபடி வணங்கி தன்னை மன்னித்தருள   வேண்டினார். கணவர் படும் துன்பத்தை தாங்க முடியாத பிராமியும், குங்கிலிய குண்டம் அமைத்து அதில் யாகம் வளர்த்து, தன் கணவருக்கு சாப விமோசனம் பெற்றுத்  தருமாறு தேவநாயகி அம்மனை வழிபட்டு வரம் கேட்டாள். இந்த யாக குண்டம் இறைவியின் சன்னதி எதிரில் உள்ளது காணலாம். 

சப்த மாதர்களில் ஒருவளும், தங்களது இணை தேவியுமான பிராமியின் வேண்டுதல் நிறைவேற வேண்டி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, ஐந்த்ரீ, சாமுண்டி  ஆகிய அறுவரும், இறைவி தேவநாயகியை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர். இறைவியின் வேண்டுகோளால்,பிரம்மனுக்கு இறைவனிடமிருந்து சாப விமோசனம் பெற்றுத்  தந்ததுடன், சப்த மாதர்களையும் தனது சக்கரத்தில் பரிவார தேவிகளாக ஏற்றுக் கொண்டாள். எனவே, இத்தலத்தில் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தன்று சப்தஸ்தான  திருவிழா கொண்டாடப்படுகின்றது. 

காசியிலிருந்து யாத்திரையாக வந்த நாதசன்மா – அனவித்தை தம்பதியர்க்கு வேதநாயகி என்ற பெயர் கொண்ட இத்தலத்து அம்பிகை, சிறுமியாகக் காட்சி அளித்தாள்  பெண்களின் ஏழு பருவங்களில் முதலாவது பேதைப் பருவம். இது சிறுமி வடிவைக் குறிப்பது. பக்தர்களைக் காக்க விரைந்து வருபவளாகத் தனது வலது திருப்பாதத்தைச்  சற்று முன் நோக்கி வைத்திருக்கிறாள் அம்பிகை.

இப்பொழுதும் பிரம்மன் மனைவி பிராமி தோற்றுவித்த குங்கிலியகுண்ட யாகம் இத்தலத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. பெண்கள் தங்கள் கணவருக்காக நீண்ட  ஆயுள் வேண்டியும், தாலி பலம் பெறவும், எமபயம் நீங்கவும் இந்த யாகத்தில் கலந்து கொள்ளலாம். குபேரன் இத்தலத்து இறைவனை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதியைப்  பெற்று குபேரலோகம் சென்றடைந்தான். 

கோயில் வளாகம் பெரிய அளவில் உள்ளது எனினும், மையத்தில் சோழர்கால கற்றளி சிறியதாக காட்சி தருகிறது, அதில் செம்பியன் மாதேவி இறைவனை வணங்கும்  காட்சி சிற்பமாக உள்ளது. சக்கரவாகேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்மன் தேவநாயகி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர். சூரியபகவான் தனது வழிபாட்டினை  பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று செய்து வருவதாக ஐதீகம்.

நவக்கிரக சந்நதி இத்திருக்கோயிலில் இடம் பெறவில்லை. கோஷ்ட தெய்வங்கள் பேரழகு படைத்தவை. விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோரின் எழிற் கோலச்  சிற்பம் சிற்பக் கலையின் உச்சமாகும். திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாகவும், திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகமும் பெற்ற சக்கராப்பள்ளி, காவிரியின் தென்கரைத்  தலங்களில் 17வது ஆகும். இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியருளியுள்ளார்

முதலாம் இராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், ராஜாதிராஜன், சுந்தரபாண்டியன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூர் நித்தவிநோத வளநாட்டு கிழார்  கூற்றத்து அகழிமங்கலத்து பிரம்மதேயம் திருசக்கராப்பள்ளி எனக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. 

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com