ஆடி மாதத்துக்கு இவ்வளவு சிறப்புகளா?

தை முதல் ஆனி வரை உத்திராயன (வடதிசை) பயணம் செய்த சூரியன், தன் பயண...
ஆடி மாதத்துக்கு இவ்வளவு சிறப்புகளா?
Published on
Updated on
1 min read

தை முதல் ஆனி வரை உத்திராயன (வடதிசை) பயணம் செய்த சூரியன், தன் பயண திசையை தென்திசையில் துவக்கும் தட்சிணாயன புண்ணிய காலம் "ஆடி' மாதம்!   

ஆடி மாதத்தில்தான் பூமாதேவி, ஆண்டாளாக பூமியில் அவதரித்தாள் என்று புராணம் கூறுகிறது. ஸ்ரீ வில்லிபுத்தூரில் துளசி வனத்தில் ஆடிப்பூரத்தில் ஆண்டாள் அவதரித்தாள். ஆண்டாள் அவதரித்ததால் வைணவத் திருக்கோயிலில் ஆடிப்பூரம் ஒரு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அம்மனுக்குரிய மாதம் என்று போற்றப்படும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு, கூழ்படைத்து தானம் தருவது சிறந்த வழிபாடாகும். அம்மனுக்குப் படைக்கும் கூழ் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. 

ஆடிக்கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. அன்று முருகன் கோயில்கள் விழாக் கோலம் காணும். 

ஆடி அமாவாசையானது முன்னோர்களுக்கு உரிய நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று புனித நதிக்கரைகளில் முன்னோர்களுக்கான வழிபாட்டினை கடைப்பிடித்தால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். வாரிசுகளும் நலம் அடைவார்கள்.  

ஆடி மாதத்தின் 18-ஆம் நாள் காவிரி அன்னையை வழிபடும் நாள். காவிரி அன்னை மசக்கையாக இருப்பதாகவும் ஐதீகம்!. அதனால் காவிரிக்கரையோரங்களில் பெண்கள் சித்தரான்னங்கள் படைத்து வழிபடுவார்கள். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காவிரி அன்னைக்கு அன்றைய தினம் சீர்வரிசைகள் அளிக்கும் நிகழ்ச்சி ஒவ்வோரு வருடமும் அம்மா மண்டபம் படித்துறையில் நடைபெறும். 

ஆடிமாத வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நாகசதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால் நாகதோஷம் விலகும் என்பது நம்பிக்கை. நாகசதுர்த்தி அடுத்த நாள் கருட பஞ்சமி. அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடபகவானை வழிபடுகின்றனர். கருடபகவானை கும்பிடுவதால் மாங்கல்ய பலம் கூடும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. 

ஆடி வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்குப்பால் தெளித்து, பூஜை செய்வதால் நாகதோஷம் நிவர்த்தியாகும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும். 

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவன் ஆயுள் நீடிக்கவும் குழந்தைச் செல்வம் இல்லாதவர்கள் குழந்தைவரம் வேண்டியும் இந்த விரதத்தை மேற்கொள்வர். இதில் ஆண்கள் பங்குபெற மாட்டார்கள். இரவில் நடைபெறும் இந்த நோன்பில் உப்பு இல்லாத கொழுக்கட்டை சமர்ப்பிப்பித்து வழிபடுவர்.

அதேபோன்று, ஆடி செவ்வாய்க்கிழமைகளில் "மங்கள கௌரி' விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலமாக பராசக்தியின் அருள்கிட்டும். ஆடித் தபசு விழா, சங்கரன் கோயிலில் நடைபெறும் புகழ்பெற்ற விழாவாகும். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com