பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்!

அன்னை பராசக்தியின் இன்னொரு வடிவே மாரியம்மன். இவளே மழையின் சக்தி, கிராமத்தின்...
பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருமாரியம்மன்!
Published on
Updated on
1 min read

அன்னை பராசக்தியின் இன்னொரு வடிவே மாரியம்மன். இவளே மழையின் சக்தி, கிராமத்தின் காவல் தெய்வம். இத்தகைய சிறப்புடைய மாரியம்மன் தமிழ்நாடு முழுவதும் வீற்றிருக்கிறார். அம்மன் சக்தி அதிகரிக்கும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மனை மனம் உருக வழிபட்டால், நிச்சயமாக கூடுதல் பலன்கள் கிடைக்கும். பலன்களை வாரி வாரி வழங்கும் மாரியம்மனின் சிறப்பு தலங்களில் ஒன்று தான் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில். 

சென்னையில் எல்லோரையும் பரவசப்பட வைக்கும் திருக்கோயில் திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் ஆலயம். இது புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். 

முதலில் இது சிறிய கோயிலாக இருந்து, பின்னர் பக்தர்களின் முயற்சியால் இது பெரியகோயிலாக அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வணங்கும் திருத்தலமாக காட்சி அளிக்கின்றது. இக்கோயிலுக்கு அருகே புற்று ஒன்று உள்ளது. மகமாயி கருமாரி இங்கே பாம்புருவாக இருந்து மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறாள். இது பாடல்பெற்ற ஸ்தலமாகும். 

இந்த இடம் 63 நாயன்மார்களில் ஒருவராக மூர்க்க நாயனார் அவதரித்த இடமாகும். இங்கே தேவி வேற்கண்ணியான கருமாரியம்மன் தான் ஈசானிய பாகத்தில் அமர்ந்து இச்சா சக்தியில் ஏழு உருவாகி இங்கே நிற்கிறாள். அதாவது அந்தரக்கண்ணியாக, ஆகாயத் கண்ணியாக, பிராமணக் கண்ணியாக காடு, மலை, நதி இவற்றில் எழுந்தருளி, பின்னர் மூன்று பேர் மீன்கண்ணிகளாக மாறி, காமக்கண்ணி, விசாலக்கண்ணியாக ஏழுருக் கொண்டு திருவேற்காட்டில் உருமாறி கருமாரியாக வீற்றுள்ளாள் என்பது  தல வரலாறு. 

இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளை மரச்சிலை அம்மன் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர். இவளிடம் வேண்டிக்கொண்டால் வீட்டிற்கும் குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே, இவளிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இக்கோயிலில் இருக்கின்றது. 

கருமாரியம்மன் மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இவளுக்குப் பின்புறம் அம்பாள் சிலை ஒன்றுள்ளது. இந்த அம்பிகை அக்னி ஜுவாலையுடன் கைகளில் கத்தி கபாலம், டமருகம், சூலம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள். திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com