ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 1)

இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் ஆன்மிக வழியில் மிக மிகப் பிரபலம் சித்தர்கள். சுமார் ஐந்தாறு..
ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 1)


இன்றைய வாழ்க்கை ஓட்டத்தில் ஆன்மிக வழியில் மிக மிகப் பிரபலம் சித்தர்கள். சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், அங்கொன்றும் இங்கொன்றுமாய் சித்தர்கள் பற்றி பேசுவார்கள். ஆனால் இன்று எங்கும் சித்தர்கள் பற்றி பேச்சாக இருக்கின்றது. இன்று ஏகப்பட்ட பூட்டிக் கிடந்த ஆலயங்கள் திறக்கப்பட்டது சித்தர்களால் தான். பல ஆலயங்களில் சித்தர்கள் இருப்பை உணர முடிகின்றது.

அகத்தியர் அனந்த சயனத்திலும் (கேரளா பத்பநாதபுரம்), அகப்பேய் சித்தர் எட்டுக்குடியிலும், திருமூலர் சிதம்பரத்திலும், நந்தீசர் திருவாவடுதுறை ஆதினத்திலும், போகர் பழனியிலும், ராமதேவர் அழகர்மலையிலும், இடைக்காடர் திருவண்ணாமலையிலும், சட்டமுனி சீர்காழியிலும், கமலமுனி திருவாரூரிலும், மச்சமுனி திருப்பரங்குன்றத்திலும், கொங்கணவர் திருப்பதியிலும், பதஞ்சலி ராமேஸ்வரத்திலும், பாம்பாட்டிச்சித்தர் திருக்கடவூரிலும், சுந்தரானந்தர் மதுரையிலும், குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையிலும், கரூவூரார் தஞ்சாவூரிலும், கோரக்கர் திருக்கழுக்குன்றத்திலும், தன்வந்திரி வைத்தீஸ்வரன் கோவிலிலும் ஐக்கியமாகியுள்ளனர். எனவே தான் அந்தத் தலங்கள் எல்லாம் சிறப்புபெற்றவையாகிறது. இவர்களின் இருப்பால் தான் மேற்சொன்ன கோயில்கள் பிரபலமாகி, மக்களின் துயர் துடைக்கும் ஆலயங்களாக மாறிவிட்டன.

இந்த நிலையில் நாம் ஒவ்வொரு இடத்திலும் தனித்தனித்தாயாக தான் சித்தர்களின் திருவுருவங்கள் கண்டிருக்கின்றோம். 18 சித்தர்களின் தரிசனத்தை நாம் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் பெற்றுள்ளோம். இதேபோல் 18 சித்தர்களின் ஆலயம் ஒன்றை தற்போதைய திருவண்ணாமலை கிரிவலத்தில் காணலாம். இதற்கு 18 சித்தர்கள் குடில் என்று பெயர் வைத்துள்ளார்கள். புற்றீசல் போல் புதிதாய் முளைக்கும் ஆலயங்களைப் பலரும் விரும்புவதில்லை. இந்தப் பதினெட்டு சித்தர்கள் குடிலில் என்ன செய்யப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அங்கிருந்த சித்தர்கள் தரிசனம் பலரையும் ஈர்க்கிறது.

இன்னும் பதினெட்டு சித்தர்கள் குடில் கட்டி முடிக்கப்படவில்லை. வெட்ட வெளியில் தான் சித்தர்கள் தரிசனம் தருகின்றார்கள். ஜீவனில் உள்ள சிவத்தை உணர்ந்தவர்களை ஓரிடத்தில் நாம் ஒடுக்க இயலுமா என்ன? சித்து வேலை செய்பவர்கள் சித்தர்கள் அல்ல; இந்தப் பூவுலகில் மனிதனைப் பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து.

சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்திச் செல்லும் ஆற்றல் பெற்றவர்கள். ஜீவ சமாதி, உயிர்நிலை கோயில்கள் என்று நாம் அடிக்கடி கூறுகின்றோம். அப்படி என்றால் என்ன?

சாதாரணமாகக் கோவில்களில் யந்திரங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மேல் விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். அதன் சக்தி குறைந்தால் மீண்டும் ஆகம நெறிப்படி குடமுழுக்குச் செய்வர். ஆனால் சித்தர்கள் ஐக்கியமாயிருக்கும் கோவில்களுக்கு குடமுழுக்குத் தேவையில்லை. ஜீவன் முக்தர்களின் உயிர்சக்தியின் இயக்கம் எப்போதும் அலை இயக்கமாக அங்கே பரவி நிற்கிறது. இதனை நாம் பெருங்களத்தூர் -சதானந்த சுவாமிகள், மயிலாப்பூர் -குழந்தைவேல் சுவாமிகள், மருதேரி - பிருகு மகரிஷி குடிலம் போன்ற கோயில்களில் உணரலாம்.

அகத்தியர் ஆயில்ய பூசையின் போது அகத்தியர் துதி மட்டும் பாடாது, சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் படிக்கின்றோம். ஏனெனில் உலகத்தவரின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சத்தியத்தோடு ஆதியுடன் சமம் பெற்றவர்கள். அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள். இவர்கள் வினை காரணமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. உலகை உய்விக்க வந்து தோன்றியவர்கள். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும் அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும். அதனால் தான் ஒவ்வொரு ஆயில்ய பூஜையிலும் சித்தர்கள் போற்றித் தொகுப்பை படித்து வருகின்றோம்.

போற்றினால் நமது வினை அகலுமப்பா.. சித்தர்களை, மகான்களை, குருமார்களைப் போற்றுங்கள். கடவுளைக் காண முயல்கின்றவர்களைப் பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நமக்குத் தரிசனம் தரும் சித்தர் பெருமக்களைப் பற்றி குறிப்பால் காண்போம். முதலில் 18 சித்தர்களையும் ஒருங்கே கண்டோம். 18 சித்தர்கள் யார்? என்று பட்டிமன்றமே நடத்தலாம் போலிருக்கின்றது. பதினெண் சித்தர்கள் பட்டியல் பற்றி ஆராய்வதை விடுத்து, சித்தர்களைப் பிடியுங்கள். அழகாய் ஒரு தலைகீழ் "U" வடிவில் தரிசனம் பெறலாம்.

முதன் முதலாய் தரிசிப்பது, சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் "அகத்தியர் பெருமான்". திருநீற்றுச் சின்னங்களுடன் ருத்திராட்சம் அணிந்து, கமண்டலத்துடன் ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் இருக்கிறார். அகத்தியர் பற்றி நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். அன்பின் ஆழம் அவர். கருணையின் காந்தம் அவர். அவரது பரிபூரண ஆற்றல் நம்மை இன்னும் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. 

அடுத்து திருப்பரங்குன்றத்தில் அருள் பாலிக்கும் "மச்ச முனி". மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் "காலஞானத்தை" உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தைத் தெரிந்து கொள்ளப் பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப்படுகிறது. மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம் மதுரை திருப்பரங்குன்றத்தில் இருக்கின்றது. மச்சமுனி சூத்திரம் 21 தொடங்கி சுமார் இருபது நூல்கள் உள்ளது. மேலே சில நூல்கள் தான் கூறப்பட்டுள்ளது.

"பதஞ்சலி" நம்மை அடுத்து ஆட்கொண்டார். பதஞ்சலி இன்று உலகெங்கும் பிரபலமாகப் பின்பற்றப்படும் யோகக் கலையினை முறையாக வகுத்துக் கொடுத்தவர் ஆவார். இவரது யோக சூத்திரங்கள் இந்திய வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.
 
அடுத்து "சட்டைமுனி" என்றும், சட்டைநாதர் என்றும் அழைக்கப்படும் சித்தரின் அருளை பெறலாம். சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்.
 
சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய் தந்தையருக்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வட நாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
 
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களைக் கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடை சாத்துவதற்குள் அரங்கனைத் தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூஜை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாகக் கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.
 

அடுத்து "கமலமுனி" தரிசனம். இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது. காப்பான கருவூரார் என்று தொடங்கும் காப்புப்பாடல் கமலமுனி அருளியது.
 

தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள். திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தமிழகத்தின் புகழ்பெற்ற தலம். இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும். என்ன? திடீரென திருவாரூர் என்கின்றீர்களா? கமலமுனி ஐயா திருவாரூரில் தான் அருள் புரிந்து கொண்டிருக்கின்றார். சித்தர்களின் தரிசனம் நம்மைப் பக்தியில் ஆழ்த்தும். 

அடுத்து நம்மை அழைத்தவர் "சிவவாக்கியர்". பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.

அவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். "இல்லையில்லை; அவர், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன? அவர் சமயம் என்ன? இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.

சமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒருவித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும் (வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார் சிவவாக்கியார்.

"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே."

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே!

தொடரும்..

- ராகேஸ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com