இந்திரனைப் போல உயர்ந்த பதவி வேண்டுமா? ஸ்ரீரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம் பாருங்க!

நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், ஏழு பிராகாரங்கள் கொண்டதும்,
இந்திரனைப் போல உயர்ந்த பதவி வேண்டுமா? ஸ்ரீரங்கநாதர் ஜேஷ்டாபிஷேகம் பாருங்க!

நூற்றெட்டு வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், ஏழு பிராகாரங்கள் கொண்டதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கத்தில் நாளை (27/6/2018) "ஜேஷ்டாபிஷேக' விழா நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அனைத்து திவ்ய தேசங்கள் மற்றும் விஷ்ணு ஸ்தலங்களிலும் நாளை ஸ்ரீமன் நாராயணனுக்கு ஜேஷ்டாபிஷேஹம் நடைபெறுகிறது.

ஜேஷ்டாபிஷேகம் மற்றும் ஆனித்திருமஞ்சனம்

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில் தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமான மார்கழி தக்‌ஷிணாயனத்தின் கடைசி மாதம். 

தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம் காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை. மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்தசாமம் புரட்டாசி என்பர். தேவர்களின் பகல்பொழுதான உத்தராயணத்தின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் ஜேஷ்டா நட்சத்திரம் எனப்படும் கேட்டை நட்சத்திரத்தில்  சிவனுக்கும், ஸ்ரீ மகா விஷ்ணுவிற்கும் மாலை நேரப் பூஜை செய்வதாகச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.

திருமஞ்சனம்

அலங்கார பிரியரான ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்கு வருடத்திற்கு ஒருமுறை ஆனிமாத கேட்டை நக்ஷத்திரத்தன்று திருமஞ்சனம் செய்வது மரபு. திருமஞ்சனம் என்றால் அபிஷேகம் அல்லது மங்கள ஸ்நானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் வைஷ்ணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் திருமஞ்சனத்தை ஜேஷ்டாபிஷேகம் என்றும் கூறுவது சிவன்-விஷ்ணு இருவரும் வேறு வேறு அல்ல என்பதைக் குறிப்பிடும்விதமாக அமைந்துள்ளது.

தேவர்கள் அமைத்தவை "திவ்ய க்ஷேத்திரங்கள்' என்றும்; சித்தர்கள் ஸ்தாபித்தவை "ஸைத்தம க்ஷேத்திரங்கள்' என்றும்; மனிதர்கள் அமைத்தவை "மானுஷ க்ஷேத்திரங்கள்' என்றும் சொல்லப்படுகின்றன. இந்த நால்வகை க்ஷேத்திரக் கலவைதான் ஸ்ரீமந் நாராயணனின் நூற்றெட்டு திவ்ய தேசங்களாகும். இதில் முதன்மையானது ஸ்ரீரங்கம்.

ஜேஷ்டா என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். பெயருக்கு ஏற்றாற் போல் தமிழ் மாதங்களில் பெரிய மாதமும் இதுவே. ஆம், இந்த மாதத்தில் மட்டுமே பிற  மாதங்களுக்கு இல்லாதபடி 32 நாட்களைக் காண முடியும். மிதுன ராசியானது அளவில் சற்று பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்குக் கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்பதே இதற்குக் காரணம்.

பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய கருடன், பெரியவசரம், பெரிய திருமதில், பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். இந்தப் பெரிய பெருமாளுக்கே ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தன்று ஜேஷ்டாபிஷேக விழா மிகச்சிறப்பாக நடக்கிறது. 

நூற்றெட்டு மூலிகைப் பொருட்களுடன், வைரப்பொடியும் கலந்து உருவான மூலவரின் திருப்பாதங்களுக்குத் தான் தினசரி அபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கொருமுறை நடைபெறும் பூர்ணாபிஷேகத்தையே ஜேஷ்டாபிஷேகம் என்பர்.

இந்த ஆனித் திருமஞ்சனத்தின்போது பெருமாளது திருக்கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு, ஆகம விதிப்படி ஏகாந்த திருமஞ்சனம் நடைபெறும். வழக்கமாக ஆலயத்தின் வடக்குப் பக்கம் ஓடும் கொள்ளிடம் நதியிலிருந்துதான் செப்புக்குடங்களில் நீர் கொண்டு வருவார்கள். ஜேஷ்டாபிஷேத்தின்போது மட்டும், ஆலயத்துக்கு தெற்கில் ஓடும் காவேரியிலிருந்து தங்கக் குடங்களிலும் வெள்ளிக்குடங்களிலும் தீர்த்தத்தினை சேகரித்து யானைமீது கொண்டு வருவார்கள். தீர்த்தம் சேகரிக்கும்போது, பாசுரங்கள் மற்றும் வேத பாராயணம் ஓதுவார்கள்.

யானையின்மேல் தீர்த்தம் வரும்போது, யானையின் முன்புறத்தில் கோவில் அடியார்கள் மூன்று வெள்ளிக்குடங்களிலும்; ஸ்ரீபாதம் தாங்குவோர், சுற்றுக்கோவிலார் முதலானோர் 108 செப்புக்குடங்களிலும் தீர்த்தம் கொண்டுவருவார்கள். இவ்வாறு ஊர்வலம் வரும்போது, யானையின் முன்புறம் வாத்தியங்கள் முழங்க, பின்புறம் வேதபாராயண கோஷங்கள் ஒலிக்கும். இந்தக் காட்சியை தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பது ஐதீகம். 

இதற்காகவே சாலையின் இருபுறமும் பக்தர்கள் கூடியிருப்பார்கள். மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம் முடிந்ததும், கோவில் ஊழியர்களால் அரிய மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட மணமிக்க தைலக்காப்பை இடுவார்கள். இந்தநாளில் திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை சேவிக்க முடியாதபடி திரையிட்டிருப்பார்கள். அதாவது மெல்லிய வஸ்திரம் அணிவித்திருப்பார்கள்.

பெருமாளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடந்த அடுத்த வெள்ளிக் கிழமை அல்லது அடுத்தவரா வெள்ளிக்கிழமையில் நாச்சியாருக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். மறுநாள் திருப்பாவாடை வைபவ நிகழ்ச்சியும் பெருமாளுக்கு நடைபெற்றதுபோலவே நடைபெறும். தாயார் சந்நிதி உற்சவர் ஸ்ரீரங்கநாயகித் தாயார், மூலவர்கள் பூமாதேவித் தாயார், ஸ்ரீதேவித் தாயார் ஆகியோருக்கும் திருவாபரணங்கள் களையப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பெருமாளுக்கு எடுத்து வந்ததுபோல் காவேரி அம்மா மண்டபத்தில் தங்கக்குடங்களில் புனிதத்தீர்த்தம் சேகரித்து யானை மேல் வைத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். பிறகு தைலக்காப்பும் இடுவார்கள்.

ஜோதிடத்தில் ஜேஷ்டாபிஷேகம்

கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்று பெயர். இந்த நட்சத்திரத்திற்கு உரிய தேவதை இந்திரன் என்கிறது வேதம். தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை தக்க வைத்துக் கொள்ளவும், தலைமைப் பொறுப்பினை நிர்வகிக்கின்ற திறனை புதுப்பித்துக் கொள்ளவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள், இந்த ஆனி மாதத்தில் வருகின்ற கேட்டை நட்சத்திர நாள் ஆகும்.

ஆனித் திருமஞ்சன நாள் அன்று சூரியன் மிதுன ராசியிலும், சூரியனின் நட்சத்திரமான உத்திரத்தில், அதாவது, கன்னி ராசியில் சந்திரனும் சஞ்சரிப்பர். பஞ்சாங்கத்தை நிர்ணயிக்கின்ற இவ்விரு கோள்களும் மிதுனம், கன்னி ராசிகளில் சஞ்சரிக்கும் நேரமே ஆனித் திருமஞ்சன நாள். மிதுனம், கன்னி ஆகிய இரண்டு ராசிகளுமே வித்யா காரகன் எனப்படும் புதன் கிரகத்தின் ஆளுமை பெற்ற ராசிகள். கல்விக்கு அதிபதி புதன். அதிலும் ஜோதிடம் மற்றும் வானவியல் அறிவினைத் தருவது புதன் பகவான் ஆவார்.

சாதாரணமாகக் குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனைப் பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். சனி பகவானும் புத பகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்குப் புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் 

சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். சுக்கிர ஸ்தலத்தில் புதன் கிரகத்தின் அதிதேவதையான மஹாவிஷ்னு ஸ்ரீ ரங்க நாதருக்கும் சுக்கிர கிரகத்தின் அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கும் நடைபெறும் தைலாபிஷேகத்தினை தரிசித்தால் நீண்ட நாட்களாகக் குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

ஜேஷ்டாபிஷேகம் பார்ப்பதால் நீங்கும் தோஷங்கள்

1. நல்லெண்ணெய் கொண்டு தைலக் காப்பு மற்றும் ஜேஷ்டாபிஷேகம் செய்வதால் சனி தோஷம் விலகும்.

2. சனியினால் ஏற்படும் வாத மற்றும் எலும்பு நோய்களான ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோபோராஸிஸ் போன்ற நோய்கள் நீங்கும்.

3. புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.

4. சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.

5. சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும் மற்றும் கண் பார்வை பலம் பெறும்.

6.  தோல் நோய்களுக்குச் சனீஸ்வர பகவானும் காரகர் என மருத்துவ ஜோதிடம்  கூறுகிறது.  வெயிலினால் தோலில் ஏற்படும் வறட்சியை போக்கி மினுமினுப்பு ஏற்படும்.

7. ஆயுள் காரகன் சனியின் ஆசி பெறுவதால் ஆயுள் கூடும். எம பயம் விலகும்

8.  இந்திரனைப் போன்ற அழகும் தலைமை பதவி மற்றும் நீங்காத செல்வவளமும் சேரும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com