அதிசய கோயில்: சூரியக்கதிர்கள் தினமும் சிவலிங்கத்தின் மேல் விழும் அதிசயம்..!

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது! புராதன கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிசயங்கள் நடந்துள்ளது.
அதிசய கோயில்: சூரியக்கதிர்கள் தினமும் சிவலிங்கத்தின் மேல் விழும் அதிசயம்..!
Updated on
2 min read


இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது! புராதன கோயில்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அதிசயங்கள் நடந்துள்ளது. அந்தவகையில் அதிசய கோயில்களைத் தேடி நாம் எங்கேங்கோ அலைகிறோமே தவிர நமக்கு அருகில் இருக்கும் கோயில்களில் என்ன அதிசயம் நிகழ்ந்திருக்கின்றது என்பதை நாம் அறிந்திருக்கமாட்டோம். 

ஒரு சில குறிப்பிட்ட சிவன் கோயில்களில் வருடத்திற்கு ஒருமுறை இருமுறை என சூரியக்கதிர்கள் சிவன்மீது விழும் அதிசயத்தை கேள்விப்பட்டிக்கின்றோம். ஆனால், நாம் இன்று பார்க்கப்போகும் கோயிலில் தினமும் சூரியக்கதிர்கள் சிவலிங்கத்தின் மேல் விழுகின்றதாம். என்னே அதிசயம் பாருங்கள். 

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரவீஸ்வரர் கோயில் தான் அந்த அதிசய கோயில் ஆகும். சுமார் 500 வருடங்களுக்கும் பழமையானதாகும். இந்தக் கோயிலில் உள்ள சிவன் சன்னதிக்கு மேலேயுள்ள இந்திர விமானம், நடுவில் எவ்வித பிடிமானமும் இல்லாமல் கூடு போன்று கட்டப்பட்டிருக்கிறது. சிவன் மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால் இந்த அமைப்பு தெரியும். தினமும் சூரியபூஜை நடைபெறுகிறது. இக்கோயிலில் சிவபெருமான் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றார். இவரது சன்னதி எதிரில் வாசல் கிடையாது. 

தென்திசையில் உள்ள வாசல் வழியாக நழைந்துதான் இவரைத் தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில் சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை அமைந்துள்ளனர். இதற்கு நேரே நந்தி இருக்கிறது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக சுவாமியின் மீது விழுகிறது. தினமும் இங்கு சூரியனே முதலில் சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். இதன்பின்புதான் காலசந்தி பூஜை செய்கின்றனர். 

சிவன் சன்னதி முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை உத்தராயண தட்சிணாயன புண்ணிய கால துவக்கம், மகரசங்கராந்தி, ரதசப்தமி ஆகிய நாட்களில் சிவன் மற்றும் சூரியன் இருவருக்கும் விசேஷ அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. 

சிவபெருமானுக்கு எதற்காக இந்தப் பெயர் வந்ததது தெரிந்துகொள்ள வேண்டாமா....

சூரியபகவானின் மனைவியான சமுக்ஞாதேவி, அவரது உக்கிரம் தாங்காமல் தனது நிழல் வடிவைப் பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்றுவிட்டால், சாயா தேவி எனப்பட்ட அவள், சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சமுக்ஞாதேவி தன்னை 

பிரிந்துசென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சமுக்ஞாதேவியைத் தேடிச்சென்றார். வழியில் யாகம் நடத்திக்கொண்டிருந்த பிரம்மாவை சூரியன் கவனிக்காததால், பிரம்மாவிடம் மானிடனாகக் கடவது என்று சாபம் பெற்றார் சூரியன். 

இந்த சாபம் நீங்க நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்க பிரஷ்டை செய்து, சிவனை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் சாபவிமோசனம் கொடுத்தருளினார். சூரியனின் வேண்டுதலுக்காக சிவன் அந்த லிங்கத்தில் ஐக்கியமானர். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால் அவரது பெயரிலேயே ரவீஸ்வரர் (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார். 

இங்குள்ள அம்பாளிடம் வேண்டிக்கொள்ளத் திருமணத்தடை நீங்கும். நாகதோஷம் நிவர்த்தித்தலம். ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சிவன், சூரியனுக்கு விசேஷ பூஜை செய்து வேண்டிக்கொண்டால், தோஷம் விலகுவதாக ஐதீகம். 

இக்கோயில் சென்னை, பெரம்பூர் வியாசர்பாடியில் மூர்த்தி அய்யங்கார் தெருவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com