நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு, திருச்சிலுவை ஆராதனை, சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கீழைநாடுகளின் லூர்து என அழைக்கப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, புனித வெள்ளி நாளான வெள்ளிக்கிழமை மாலை வேளாங்கண்ணி பேராலயத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
முதலில் இறைவார்த்தை வழிபாடு, பொது மன்றாட்டு ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, திருச் சிலுவை ஆராதனை நடைபெற்றது. இதில் சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை வழங்குதல், சிலுவைப் பாதை நிறைவேற்றுதல், சிறப்பு மறையுரை ஆகியன நடைபெற்றன.
நிகழ்ச்சியில், திருத்தலக் கலையரங்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்தது. சிறப்பு திருப்பலிக்குப் பின்னர், பேராலய அதிபர் மற்றும் பங்குத் தந்தைகள் இயேசுவின் பாதத்துக்கு முத்தி செய்தனர். இதையடுத்து, இயேசுவின் சிலை வைக்கப்பட்டிருந்த சிலுவை, திருத்தலக் கலையரங்கத்திலிருந்து பேராலயத்தைச் சுற்றி பவனி வந்து, கீழ் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள் இயேசுவின் பாதத்தை பக்தியுடன் முத்தி செய்தனர். பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார் தலைமை வகித்து, வழிபாடுகளை நிறைவேற்றினார்.
இதில் பங்குத் தந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜெயராஜ் அருள் சகோதரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈஸ்டர் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் குவிந்திருப்பதால், வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.