

இன்று (10/5/2018) உலக வலசை போதல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. வலசை போதல் என்றால் புலம் பெயர்தல் எனப் பொருள். பறவைகள் தங்களின் வாழ்விடத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக வலசை போகின்றன. வலசை போகும் பறவைகள் பூமியின் காந்த விசையில் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்து தாங்கள் சேருமிடத்தைக் கண்டறிகின்றன. வலசை போகும் பறவைகளைப் பாதுகாப்பது, அதன் இருப்பிடத்தைப் பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த 2006-ம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உயிரினங்களுக்கு தாங்கள் வாழும் நிலங்களிலுள்ள இருப்பிட சிக்கல், கடுமையான தட்பவெப்ப நிலை, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, தங்கள் தாய் நிலங்களிலிருந்து, வாழும் சூழல் நிறைந்த இடங்களுக்குச் சென்று, திரும்பி வருவதை, ‘வலசை போதல்’ என்று பறவையியலாளர்கள் அழைக்கின்றனர். பெரும்பாலான மேற்கு உலக நாடுகள் குளிர்காலத்தில் பனியினால் மூடப்படும் போது, உணவு பற்றாக்குறையை தவிர்க்க, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு பறவைகள் இடம் பெயர்கின்றன. இவைகளை, ‘வலசை பறவைகள்’ எனச் சுட்டுகின்றனர். வலசை சென்றாலும், இனப்பெருக்கத்தை தங்கள் தாய் நிலங்களிலேயே மேற்கொள்கின்றன. இதனை தமிழகத்தின் பசுமை இலக்கிய முன்னத்தி ஏரான தியடோர் பாசுகரன், ‘முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இடமே, ஒரு பறவைக்கு ‘தாய் நிலம்’ என குறிப்பிடுவார்.
தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கரிக்கிளி, பழவேற்காடு போன்ற பறவைகள் காப்பிடங்களுக்கு வருகை தரும் மஞ்சள் மூக்கு நாரை, அரிவாள் மூக்கன், சின்ன கொக்கு, கூழைக்கடா, நததைக் குத்தி நாரை, வக்கா அல்லது இராக் கொக்கு, நீர்க்காகம் போன்ற பறவைகள் கூடமைத்து, இனப்பெருக்கம் செய்வதால், இவற்றுக்கு தமிழகமே ‘தாய் நிலம்’ எனலாம். இவைகள் தமிழகத்தில் இனப்பெருக்கம் செய்து விட்டு கோடையில் உணவு தேடி மற்ற இடங்களுக்குச் சென்று விட்டு, குளிர்காலத்தில் தாய் நிலங்களுக்கு திரும்புகின்றன.
தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்பு வாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது. வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது. அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பைப் பெற்றிருக்கிறது. சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்கிறது.
இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது. வேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக மாறியது.
பல்வேறு வகையான பறவை இனங்களுக்குப் புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது. வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள் சரணாலயம். சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுக்கொள்ளலாம்.
பறவைகளுக்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு
பறவைகளுக்கும் ஜோதிடத்திற்கும் அப்படி என்ன பெரிய தொடர்பு இருக்குன்னு அலட்சியமா கேட்பவர்களுக்கு பல ஆச்சரியமான விஷயங்கள் இருக்கின்றன. பறவைகளுக்கும் ஜோதிடத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஜோதிடத்தில் பறவைகளின் காரகராக புத பகவானை கூறப்படுகிறது. அதிலும் புலம் பெயரும் பறவைகள் அதாங்க! வலசை போகும் பறவைகளுக்கு புதன் தான் காரகராம்! வலசை போகும் பறவைகளுக்கு காரக பாவம் கும்பம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் ஜோதிட சாஸ்திரத்திற்கும் புதன் தாங்க காரகர். புதன் கிரஹத்திற்க்கு அதிதேவதையான ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்க்கே பறவையான கருடன் தான் வாகனம் என்பதும் அந்தக் கருடனுக்கு புதன் காரகர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பறவைகளுக்கு காரகர் புதன் என்றாலும் அதன் தன்மைகளுக்கு ஏற்ப மற்ற கிரஹங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. இரவில் நடமாடும் பறவைகளுக்கு சந்திரன் காரகர் என்றும், அளவில் சிறியது மற்றும் பேசும் தன்மையுள்ள பறவைகளுக்கு புதன் காரகர் என்றும், இசையை வெளிப்படுத்தும் மற்றும் பாடும் தன்மையுள்ள பறவைகளுக்கு சுக்கிரன் காரகர் என்றும் இரைக்காக மற்ற உயிர்களைக் கவர்ந்து செல்லும் பறவைகளுக்கு சனி காரகர் என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்குமான பறவைகளையும் குறிப்பிட்டிருக்கிறது.
ஜோதிடத்தில் பஞ்ச பட்சிகளைக் கொண்டு எதிர்காலம் அறியும் முறைக்குப் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்று பெயர். பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதிலிருந்து ஜோதிடத்திற்கும் பறவைகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்துகொள்ளலாம்.
எது எப்படியோ, இந்தக் கோடை விடுமுறையில் நாம் குடும்பத்தோடு பறவைகள் சரணாலயங்களுக்கு சென்று வருவதும் நமக்கு நடக்கும் தசா புத்திகளுக்குக் காரக கிரஹங்களின் பறவைகளுக்கு உணவு வழங்குவதும் நவகிரஹங்களின் அருள் கிடைப்பதோடு வாழ்வில் வளம் பல சேரும் என்பது நிதர்சனம்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
தொலைபேசி - 9498098786
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.