
அனைத்து வாசகர்களுக்கும் "இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!" இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாகக் கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான்.
லக்ஷமி குபேர பூஜை செய்யத் தீபாவளி திருநாள் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் ஐந்து வியாழக்கிழமை மாலையில் குபேர தீபம் ஏற்றி லக்ஷமி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.
லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இந்தப் பூஜை ஐப்பசி மாதத்தின் அமாவாசை நாளின் பிரதோஷ வேளையிலும் கோதூளி லக்ன காலத்திலும் செய்யப்படுகிறது. பூஜைக்கான நேரம் அமாவாசை திதியை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. சூரியன் துலா மாதத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சந்திரனை சந்திக்கும் அமாவாசை நாளில் லக்ஷ்மியை ஆராதனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஐப்பசி மாதத்தை துலா மாதம் எனப்படுகிறது. துலாம் என்பது சமத்தைக் குறிக்கும். வணிகர்களுக்கு வரவு செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர். வட இந்தியாவில் இந்நாளில் வியாபாரிகள் பழைய கணக்குகளை முடித்துவிட்டு புதிய கணக்குகளைத் துவங்குவர்.
சூரியன் துலா அமாவாசை நாளில் தன்னுடைய இரண்டாவது சஞ்சாரத்தை துவங்குவதாக நம்பப்படுகிறது. சாதாரணமாக அமாவாசை நாள் நல்ல நாளாகக் கருதப்படுவது இல்லை. ஆனால் லக்ஷ்மி பூஜை வருவதாலும், சூரியன் தன் சஞ்சாரத்தை மாற்றுவதாலும் இந்நாள் சுப நாளாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிரம், குஜராத் போன்ற வட இந்திய மாநிலங்களில் லக்ஷமி பூஜை மிகுந்த விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலும் இந்நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது செல்வம் பெருக்கும் லக்ஷமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் அடையாளம்! இந்தப் பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.
மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள்பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லக்ஷமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலக்ஷமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலக்ஷமியின் திருவருளால் அனைத்துச் செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.
தங்கள் வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல் சுத்தம் செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லக்ஷமியை வீட்டுக்கு வரவழைக்கிறார்கள். அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய இந்த வீட்டிலுள்ள பெண்கள் லக்ஷமி தேவியாகக் கருதப்படுவதால், அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும் பொன் ஆரங்களையும் அணிந்து லக்ஷமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.
பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லக்ஷமி குபேர பூஜை செய்யலாம். அமாவாசை அன்று லக்ஷமி பூஜையானது கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் விநாயக பூஜை செய்த பின், லக்ஷமி தேவியை ஆராதிக்க வேண்டும். லக்ஷமி தேவியை பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும் .பூஜையின் போது ஸ்ரீ ஸூக்தம், லக்ஷமி அஷ்டகம், வேத மந்திரங்கள் ஆகியவற்றை ஜெபிக்கலாம் .
பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். வடக்கே இப்பூஜை மிகப் பிரபலம். குஜராத் மாநிலத்தில் இதை சோப்டா பூஜை என்பர். இவ்வாறு எளியப் பூஜையால் அன்னை மகிழ்ந்து நாம் வேண்டியதைத் தருவாள் என்பது நம்பிக்கை.
செல்வம் கொழிக்கும் குபேர பூஜை
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, வாழையிலையின் வலது பக்கமாக வைக்க வேண்டும். அவருக்கு குங்குமம் இட்டு அலங்கரிக்க வேண்டும். அதன்பிறகு, முழுமுதற் கடவுள் விநாயகர் வழிபாட்டோடு பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிள்ளையார் மந்திரம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். விநாயகரை வழிபட்ட பிறகு, மகாலட்சுமியின் ஸ்தோத்திரப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும். தொடர்ந்து, குபேர ஸ்துதியைச் சொல்லி வழிபட வேண்டும். ஸ்துதி தெரியாதவர்கள், குபேராய நமஹ… தனபதியே நமஹ.. என்று துதித்து, உதிரிப் பூக்களை கலசத்தின் மீது போட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்ததும் வாழைப்பழம், காய்ச்சிய பசும்பால், பாயசம் ஆகியவற்றை லட்சுமி குபேரருக்கு நைவேத்யம் செய்து, கற்பூர தீபாராதனையோடு பூஜையை நிறைவு செய்யவேண்டும். தாம்பூலத்தில் வைத்திருந்த தட்சணையை ஏழை சுமங்கலிகளுக்கு கொடுப்பது சிறப்பு. தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால், சங்கடங்கள், காரியத்தடைகள் நீங்கும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்; நம் இல்லத்தில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேர யந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம் செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். சுவாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து, அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து, தண்ணீரில் சிறிது மஞ்சள் சேர்க்க வேண்டும். பிறகு, சொம்பின் வாயில் மாவிலைக் கொத்தைச் செருகி, அதன் நடுவில் ஒரு தேங்காயை மஞ்சள் பூசி, நிறுத்தின வாக்கில் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் முதலான நிவேதனப் பொருட்களோடு, தட்சணையாக பணம் மற்றும் சில்லறை நாணயங்களையும் சேர்த்து, கலசத்துக்கு முன்பாக வைக்க வேண்டும்.
நாணய வழிபாடு
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக விசேஷம்! குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து என்பதால், 108 ஐந்து ரூபாய் நாணயங்களை சுத்தம் செய்து அதனைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமாகும். இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லி வழிபட வேண்டும். 108 போற்றிகளையும் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி பூஜையை நிறைவு செய்ய வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் இந்த வழிபாட்டைச் செய்வது சிறப்பு. தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் சிறப்பு. குபேர பகவான் அரிதாகச் சில கோயில்களில் தனிச் சன்னதிகளில் எழுந்தருளியிருப்பார்.
ஜோதிடத்தில் செல்வ செழிப்பைத் தரும் லக்ஷமி குபேர யோகங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாம் அதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லக்ஷமி யோகத்தைத் தரும்.
ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லக்ஷமி யோகம் ஏற்படும் எனப் புராதன ஜோதிட நூலான பாவார்த போதினி எனும் பலதீபிகை கூறுகிறது. செல்வத்தின் அதிபதியான லக்ஷமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையைக் கொண்டு இந்த யோகம் விவரிக்கப்படுகிறது.
நவீன விஞ்ஞான ஜோதிடத்தின் தந்தை எனப்படும் தெய்வதிரு. டாக்டர் B V ராமன் ஐயா அவர்கள் தனது 300 யோகங்களைப் பற்றிய புத்தகத்தில் லக்ஷமி யோகம் தரும் கிரஹ இணைவுகளைப் பற்றி கூறுகையில்,
1. ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்ற லக்னாதிபதியும் ஒன்பதமதிபதியும் இணைவு பெறுவது,
2.. பலம் வாய்ந்த லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நின்று லக்னாதிபதியுடன் சேர்க்கை பெறுவது.
3. ஒன்பதாமதிபதியும் சுக்கிரனும் ஆட்சியோ உச்சமோ அடைந்து கேந்திர திரிகோணங்களில் நிற்பது லஷ்மி யோகம் தரும் கிரஹ அமைவு எனக் குறிப்பிட்டுள்ளார்.
குபேர துல்ய ராஜ யோகம்
ஒருவருடைய ஜாதகத்தில் தன காரக குருவும் செல்வச் செழிப்பை அளிக்கும் சுக்கிரனும் உச்சமடைந்து திரிகோணங்களில் நின்று விட்டால் அவர் அரசராகவோ அல்லது அரசரைப் போன்ற செல்வச் செழிப்புடன் இருப்பார் எனப் பாவ குதுஹலம் எனும் பழம் பெரும் ஜோதிட சாஸ்திர நூலில் கூறப்பட்டிருக்கிறது.
லக்ஷமி யோகம் பலன்கள்
இந்த யோகத்தை ஜெனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும், அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார். செல்வ நிலையில் உயர்வு தரும். லக்ஷ்மி குபேர பூஜை செய்தால் லக்ஷ்மி யோகத்தைப் பெற்று வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெறமுடியும் என சாஸ்திரம் கூறுகிறது.
இந்த வருடம் மகாலக்ஷ்மியை அதிபதியாகக் கொண்ட செல்வச் செழிப்பை தரும் சுக்கிரன் தனது வீட்டில் நின்று ராஜ கிரஹங்களான சூரியனும் சந்திரனும் அவர்களோடு சேர்ந்து நிற்கும் காலத்தில் லக்ஷ்மி குபேர பூஜை செய்பவர்களுக்கு வாழ்வில் சகல வளங்களும் சேரும் என்பது நிதர்சனம்.
மேலும் தன காரக குரு பகவான் கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிக ராசியில் தனது பயணத்தை தொடர்ந்தபடி கால புருஷனுக்கு தன ஸ்தானமான ரிஷபத்தைப் பார்ப்பதால் இந்தக் குபேர பூஜை செய்பவர்களுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கே செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம். அதற்கு ஏற்றார்போல் சுதந்திர இந்தியாவின் லக்னமாக ரிஷபம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.