தீபாவளி கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்!

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டாடுவதா என்ன? திருவரங்கத்தில்..
தீபாவளி கொண்டாடும் மாப்பிள்ளை ரங்கநாதர்!
Published on
Updated on
1 min read

புதுமணத் தம்பதியர் மட்டும்தான் தலை தீபாவளி கொண்டாடுவதா என்ன? திருவரங்கத்தில் திவ்ய தம்பதியான அரங்கநாதன் தாமும் சிறப்புற மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுகிறாரே! ஆம், ஸ்ரீரங்கநாதர், பெரியாழ்வாரின் மாப்பிள்ளை அல்லவா! ஆண்டாளை மணம் செய்து கொடுத்த பெரியாழ்வார் அரங்கனின் மாமனார் ஆயிற்றே!

வருடந்தோறும் அரங்கன் தீபாவளி கொண்டாடும் விதமே அலாதியானது தான். முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேள தாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவர். மேலும் கோவில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள் ஆகியவையும் வழங்கப்படும்.

தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு நம்பெருமாளுக்கும், தொடர்ந்து ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சிகைக்காய்த் தூள், விரலி மஞ்சள் ஆகியவை நம்பெருமாள் சார்பில் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளி அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆச்சாரியர் சந்நிதிகளில் எண்ணெய் சார்த்தப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் மூலவர், உற்ஸவருக்குப் புத்தாடை, மலர் மாலை அலங்காரம் முடிந்ததும், ஆழ்வார், ஆச்சாரிய உற்ஸவர்கள் பெரிய சந்நிதிக்குக் கிழக்கே உள்ள கிளிமண்டபத்தில் பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பர். அப்போது பெரியாழ்வாரும் மாப்பிள்ளை ரங்கநாதருக்காக தீபாவளி சீர் தரக் காத்திருப்பார்.

அப்போது நம்பெருமாள் சந்தனு மண்டபம் எழுந்தருள்வார். அங்கே திருமஞ்சனம் அலங்காரம் முடிந்தபின் பெரியாழ்வார் அரங்கனுக்கு தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்குவர்.

நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர் வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். வேத பாராயணம், மங்கள வாத்தியம் முழங்க, சீர் தரப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். நம்பெருமாளின் இந்த தீபாவளி தரிசனம், பக்தரின் வறுமை போக்கும். ஆடைகளுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு இராது என்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com