மத்யாஷ்டமி: துர்மரணத்தால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தில ஹோமம் செய்ய ஏற்ற நாள்!

நாளை (02.10.2018) தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷ புண்ணியகாலத்தின் முக்கிய தினமான...
மத்யாஷ்டமி: துர்மரணத்தால் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய தில ஹோமம் செய்ய ஏற்ற நாள்!
Updated on
4 min read

இன்று (02.10.2018) தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷ புண்ணியகாலத்தின் முக்கிய தினமான மத்யாஷ்டமியாகும். கடந்த ஏழு நாட்களாக மஹாளய பக்ஷம் ஆரம்பித்து  நடைபெற்று வரும் நிலையில் இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும்.  ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

இந்த மஹாளய பக்ஷ காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம்,  திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார்  சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், திருவள்ளூர் வீரராகவர் ஆலயம் மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் ஸிரார்தங்கள் செய்வது சிறப்பு.

மத்யாஷ்டமி

மாளயத்தின் நடுவில் வருகின்ற அஷ்டமி திதியை மத்யாஷ்டமி என்பர். விபத்து, தற்கொலை போன்ற துர்மரணத்தால் மறைந்தவர்களுக்கும் தொடர்ந்து பித்ரு கடன்களை செய்யாதவர்களுக்கும் தில  ஹோமம் செய்து நற்கதி ஏற்படுத்த இந்த நாள் ஏற்றதாகச் சொல்லப்படுகிறது. 

தில ஹோமம்

தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது. இறந்தபின் ப்ரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு  ப்ரேதத்திற்க்கு சரியான முறையில் அந்திம கிரியை எனும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் எலும்பை சுற்றி வரும்.

விபத்துகளில் மரணம் நேரும்போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையே அடைந்துவிடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. அத்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றிவருகின்றன. மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும்  (நியமனங்களை கடைபிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், விபத்து போன்ற செயற்கை மரணத்தால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) த்ருப்தி ஏற்படாமல்  பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாக சிராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் சிராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம்  ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.

இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு

சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தான்யமான எள்ளை பித்ரு சிரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். மேலும் எள்ளை மகாவிஷ்னுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம்.

பிரேதத்தின் கடைசி நிலை அஸ்தி எனும் எலும்பாகும். எலும்பின் காரகர் சனைஸ்வர பகவானாவார். எலும்பில் இருக்கும் சுண்ணாம்பு சத்து எனும் கால்ஷியத்திற்கும் காரகர் சனைஸ்வர பகவானாவார். எள்ளில் 95% கால்ஷியம் நிறைந்திருப்பதாக அறிவியல் கூறுகிறது. எள்ளின் காரகரும் சனைஸ்வர பகவானாவர். எனவே பிரேத சம்ஸ்காரம் செய்து அஸ்தி விஸர்ஜனம் செய்ய இயலாமல் போகும்போது  தில ஹோமம் செய்வது அந்த தோஷத்தை போக்குகிறது. 

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில்  ப்ரேத ஸ்வரூபியாக "ஆயாது பிதர்" என கூறி ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்ய கூடாது. ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம்,  பவானி, ஸ்ரீரங்க பட்டினம் திருச்சி அம்மா மண்டபம் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்களில் பஜனை மடம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும்.

ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும்  புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்நானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள்.

மாளைய பக்ஷம் அதிலும் குறிப்பாக மத்யாஷ்டமி, கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாஸை பரணி மற்றும் மகம் நக்ஷத்திரங்கள் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமத்துக்குச் சிறந்தவை. ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும். தில ஹோமம் செய்ய வேண்டியத்  தேவை உள்ளதா? என்பதை தக்க நபரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும். மேலும் தில  ஹோமத்தை யார் வேண்டுமாணாலும் யாருக்கு வேண்டுமானாலும் செய்ய கூடாது. பித்ரு கடன் செய்ய தகுதி உடைய ஆண் வர்க உறவினர்கள் மட்டுமே செய்யவேண்டும். பெண்கள் கண்டிப்பாக செய்ய  கூடாது.

ஜோதிட ரீதியாக தில ஹோமம் யார் செய்ய வேண்டும்?

1. ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை சூரியன் மற்றும் சந்திரனோடு ராகு கேது சேர்க்கை, 1-5-9 ஆகிய வீடுகளில் ராகு மற்றும் கேது நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை குறிக்கும்.

2. ஜெனன ஜாதகத்திலோ அல்லது ப்ரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து ப்ரேத தோஷத்தை அறியமுடியும். மேலும் மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்மந்த உறவினால் ப்ரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும்.

3. ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை -  இருந்தாலோ குழந்தை பாக்யம் இருக்காது. அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் செய்வது சிறந்ததாகும்.

4. தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாஸை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷா வருஷம் சிராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும்,  அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும்.

5. சிலர் தில ஹோமம் செய்த பிறகு ஒழிவு பார்த்தல் எனும் வழக்கப்படி தோஷம் நீங்கியதாக விட்டுவிடுவர். ஒழிவு பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ப்ரேதம் முக்தி அடைந்ததை மட்டுமே அறியமுடியும்.

6. தில ஹோமம் என்பது பித்ரு கடன்களை ஆரம்பித்து செய்ய தகுதியாக்கிக்கொள்ளும் ஒரு நிகழ்வேயன்றி ஒருமுறை தில ஹோமம் செய்துவிட்டு பித்ரு தோஷம் நீங்கிவிட்டதாக நினைத்துக்கொள்வது  தங்களை தாங்களே ஏமாற்றிகொள்வது போலாகும். பித்ரு தோஷம் நீங்க தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பனம்,  ஸ்ரார்தம் செய்து

தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" என்றும் 

யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்த"வ: | தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: என்றும் 

கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும். பித்ருக்களுக்கு உணவாவது எள் கலந்த நீரே. இதனை மந்த்ர பூர்வமாக அவரவர் பெயர் சொல்லி அளிப்பதன்  மூலம் அவர்களது ப்ரீதிக்குப் பாத்திரமாகிறோம். இறந்தவர்கள் எங்கோ மறுபடி பிறந்திருப்பார்களே பின் எதற்கு இவை என்று ஒரு கேள்வி வரும்.அவ்வாறு பிறந்தாலும், மீண்டும் பிறந்த அந்த ஜீவனுக்கு  அந்த நேரத்தில் வேண்டிய பொருளாக நாம் அளிக்கும் எள்ளும்-நீரும் மாறிவிடும்.

பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் இந்த மத்யாஷ்டமி தினத்தில் தில ஹோமம் செய்யப்பட வேண்டும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com