மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு தரும் அவிதவா நவமி!

நாளை 03.10.2018 தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷ புண்ணியகாலத்தின்...
மாங்கல்ய தோஷமும் களத்திர தோஷமும் நீங்கி மங்கள வாழ்வு தரும் அவிதவா நவமி!
Updated on
5 min read

நாளை 03.10.2018 தக்ஷிணாயனத்தில் வரும் பித்ரு பக்ஷம் எனப்படும் மஹாளய பக்ஷ புண்ணியகாலத்தின் முக்கிய தினமான அவிதவா நவமி நாளாகும். கடந்த எட்டு நாட்களாக மஹாளய பக்ஷம் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில் இந்தப் பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்பது நம்பிக்கை. மாஹாளைய பக்ஷத்தில் ஒன்பதாம் நாளான அவிதவா நவமியிலும் சுமங்கலி பிரார்த்தனை செய்யலாம். இந்தச் சுமங்கலி பிரார்த்தனை சிராத்தத்திற்கு சமமானது.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

சுமங்கலி பிரார்த்தனை

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது. நல்ல குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் வளர்க்கப்பட்டு நல்ல கணவரை அடைந்து கணவரின் கோபதாபங்களையும் குழந்தைகளின் கஷ்ட நஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு குடும்பத்தைத் தூணாக நின்று காப்பாற்றி அனைவரையும் ஒன்றிணைத்து, முக்கியமாக நமது கலாசாரத்தையும், வைதீக தர்மங்களையும், ஸம்ப்ரதாயங்களையும் கடைப்பிடித்து வாழும் பெண்மணியே பதிவ்ரதை என்று அழைக்கப்படுகிறாள்.

இப்படிப்பட்ட பெண்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் தான் தனது கணவனுக்கு முன்னால் பூவும் பொட்டுமாகப் பரமபதம் அடைவது. இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஸுமங்கலியாக இறந்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு சிராத்தத்திற்கு மறுநாள் ஒவ்வொரு வருடமும் கட்டாயம் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்யப்பட வேண்டும். பிராமண குடும்பங்களில் இன்றளவும் "மங்கலிப் பொண்டுகள்" என்றழைக்கப்படும் சுமங்கலி ப்ரார்தனையை குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்கள் முன்னர் செய்வது வழக்கம். சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள்.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஏற்றதாக இருந்தாலும் அன்றைய தினம் யோகம், திதி போன்றவையும் நல்லதாக இருக்க வேண்டும். மாசாமாசம் வரும் கரிநாளாக இருக்கக் கூடாது. இதில், ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவதால், இதற்கு, “மங்கலிப் பெண்கள்” என்றும் பெயர் உண்டு. இது தற்காலத்தில் மருவி, “மங்கிலிப் பொண்டுகள்” என்று வழங்கப்படுகிறது. வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும், மகனுக்கு செய்யும்போது, வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். சுமங்கலிப் பிரார்த்தனைக்கு, ஒற்றைப் படையில் பெண்களை வைத்துச் செய்ய வேண்டும்.

வீட்டுப் பெண்கள், அதாவது, இதைச் செய்யும் பெண்ணின் நாத்தனார், மகள் போன்ற உறவுகளை முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது. இவர்களைத் தவிர, சொந்தமல்லாதவேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். அல்லது கன்யா பெண்கள் என்றழைக்கப்படும் திருமணமாகாத இளம்பெண்களாகவும் இருக்கலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் உட்காரலாம். ஒரு சிறு வயது (ஏழு அல்லது எட்டு வயது) பெண் குழந்தை இருப்பது நலம். இந்த சுமங்கலிப் பிரார்த்தனையும் பிராமணர்களில் மூன்று விதமாக நடைபெறும்.

அதில் எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள். இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள். இரண்டு புடைவைகள் வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான். இதெல்லாம் அவரவர் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். 

இவர்களுக்கு, அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து,மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும்.இதை அந்த வீட்டு மருமகள் தான் செய்ய வேண்டும். அவர் அதற்குப் பிறகுதான் குளிக்க வேண்டும். சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். கண்டிப்பாக, மஞ்சள் பொங்கல், வாழைக்காய், இவை இரண்டும் இருக்க வேண்டும். குளித்து வந்த பெண்களுக்கு, பின் பக்கத்தில் அழைத்துச் சென்று, காலில் மஞ்சள் பூசி, ஜலம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும்.

பெண்கள் குளித்து விட்டு வந்த பிறகு, செய்பவரின் மாமியார், சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால், அவரின் படத்தை, பூஜை அறையில் வைத்து, அதற்கு முன், ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்கும சிமிழ், பூ, கண்மை, சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில், மற்றவர்களுக்கு வாங்கி உள்ளதை அப்படியே வைக்கலாம்.

அவற்றின் மீதும் தாம்பூலங்களை வைக்கவும். பிறகு, அன்றைக்கு செய்துள்ள சமையல் பதார்த்தங்களில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்து ஒரு நுனி இலையில் வைத்து, அந்தப் புடவையின் முன் வைத்து விடவும். இதற்குப் பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, முதலில் மகன், மருமகள் என்று வயதில் பெரியவரிலிருந்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். இதே கிரமத்தில் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு, மங்கலி பொண்டுகள் எனப்படும் பெண்கள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து பெரியவர்களாக இருந்தால், வீட்டில் உள்ள மகனும், மருமகளும், அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும். பொதுவாக, சுமங்கலிப் பிரார்த்தனையை, புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் செய்ய வேண்டும்.

அவிதவா நவமி

இது போலவே பெண்களைக் குறித்து மஹாளய பக்ஷத்திலும் ஒரு நாள் சுமங்கலியாக இறந்தவர்களுக்காக வஸ்த்ரம் கொடுத்து சாப்பாடு போட்டு அவர்களிடம் ஆசி பெற வேண்டும். தனது கணவருக்கு முன்போ அல்லது தனது கணவருடன் சேர்ந்தோ இறந்து போன சுமங்கலிகளின் திருப்திக்காக சுவாஸினி பெண்களை வீட்டிற்கு வரவழைத்து வஸ்த்ரம் தந்து சாப்பாடு போட்டு ஆசீர்வாதம் பெற வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். யாரெல்லாம் சுமங்கலி பூஜை எனப்படும் சுமங்கலி பிரார்த்தனை கண்டிப்பாக செய்யவேண்டும்.

மாங்கல்ய தோஷம்

இந்தத் தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

களத்திர தோஷம்

கால புருஷனுக்கு ஏழாம் வீடான துலா ராசிக்கு அதிபதியான சுக்கிரன் களத்திரகாரகன் என்றழைக்கப்படுகிறார். அவர் 6/8/12 அதிபதிகளாகப் பெற்றவர்கள். களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது, கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும்.

ஜாதகத்தில் களத்திர தோஷமும் மாங்கல்ய தோஷமும் கொண்ட பெண்கள் சுமங்கலி பிரார்த்தனை வருடத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாம் வீடுதான் களத்திர ஸ்தானம் ஆகும். இந்த இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை பெற்று இருப்பது, ஏழாம் வீட்டில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருப்பது, 7-க்கு உடைய கிரகம் 6, 8, 12 போன்ற இடங்களில் தனித்தோ அல்லது பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருப்பது, ராகு அல்லது கேது 7-ல் இருப்பது களத்திர தோஷத்தைக் குறிப்பிடும். ஏழாவது வீட்டுக்குரிய கிரகமோ அல்லது சுக்கிரனோ, பாவ கிரகங்களின் பார்வை பெற்று இருந்தாலோ அல்லது 6, 8-க்குரிய கிரகத்துடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலோ களத்திர தோஷம் என்று அர்த்தம். 

பொதுவாக, லக்னத்துக்கு ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்களைக் கொண்டுதான், ஒருவருக்குக் களத்திர தோஷம் இருக்கிறதா, இல்லையா என்று முடிவு செய்யப்படுகிறது. பெண் சாபத்தை குறிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். பெண் சாபம் பெற்றவர்களுக்குக் களத்திர ஸ்தானம் பழுதடைந்தோ அல்லது களத்திர ஸ்தானாதிபதி பலமிழந்த நிலை மற்றும் சுக்கிரன் கெட்டுப் போன நிலையில் ஜாதக அமைப்பு இருக்கும். இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

இத்தகைய அமைப்பு பெற்றவர்கள் சுக்கிரனுக்குப் பரிகாரம் செய்வது, தாய், சகோதரி மற்றும் பெண்களுக்கு சீர் செய்தல், சுமங்கலி பிரார்த்தனை செய்வது மற்றும் அவிதவா நவமியில் சுமங்கலியாக இறந்த முன்னோர்களை நினைத்து ஆசி பெறுவது போன்றவை சிறந்த பரிகாரங்களாகும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com