திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 1 

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டில் அமைந்துள்ள இரண்டாவது தலம் இது.
திருகோணேஸ்வரர் திருக்கோயில், திருகோணமலை தொடர் - 1 

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டில் அமைந்துள்ள இரண்டாவது தலம் இது.

இறைவன் - திருக்கோணேஸ்வரர்

இறைவி - மாதுமையாள்

தல மரம் - கல்லால மரம்

தீர்த்தம் - பாவநாசம்

வழிபட்டோர் - இராவணன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்.

தல பெருமை

இக்கோயில் மூவாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் பழமை வாய்ந்ததாகும். இதற்கு "திரிகூடம்" என்றும் பெயருண்டு. சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்துத் திரி செய்தார்கள். அந்த ஊர் இன்றும் "திரிதாய்" என்று அழைக்கப்பட்டு வருகிறது. 

போர்த்துக்கீசியர் இத்திருக்கோயிலை மிக மிக மோசமாக பாழ்செய்து போயினர். சுதந்திரம் பெற்றபின் கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டபோது, காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள். அக்காலத்தில் நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி ஆழம் வரை தோண்டியபோது, அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானும், சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், மற்றும் அஸ்திரதேவர் முதலான தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.

முன்னொரு காலத்திலேயே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோணமலையிலே உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலுமாக மூன்று பெருங்கோயில்கள் இருந்தன என்பார்கள். ஆகையால் என்னமோ, இத்தலத்தைத் திரிகூடம் என்று அழைத்தார்கள் போல.

கோயிலை பறங்கியர்கள் பாழ்படுத்திய வேளையில், பக்தர்களாகிய பாசுபதவிரதிகளும் பணியாளரும் பதைத்துருகித் திருக்கோயில் இருந்த திருவுருவங்களை எடுத்துச் சென்று மாற்றிடங்களிலும் கிணறுகளிலும், குளங்களிலும் பாதுகாப்புக்காக வைத்தார்கள்.

அவர்கள் ஒரு திருவுருவத்தை அயலூரான தம்பலகாமம் என்னும் மருதவளம் நிறைந்த ஊரில் மறைத்து வைத்து மிகவும் இரகசியமாக வழிபாடு செய்து வந்தவர்கள். அந்த இடத்தை "ஆதிகோணநாயகர் கோயில்" என வழங்கி வணங்கியிருக்கிறார்கள். அது ஆதி கோணநாயகர் ஆலயமாகவே பழைய கோணேசுவரர் ஆலயத்துக்குச் சொந்தமான மானியங்களில் பெரும்பகுதி தம்பலகாமத்திற்கு சேர்ந்தன. முதற்பராந்தக சோழனுக்கு அஞ்சிய பாண்டியன், இலங்கையில் பாதுகாப்புக்காக புகுந்திருந்த காலத்தில் தம்பலகாமத்தில் திருப்பணிகள் செய்ததாக வரலாறு கூறுகிறது.

தல அருமை

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். அதுவே தென் கயிலையிலும் ஒரு முறை நடந்தது. திருகோணீஸ்வரர் மலை. இது தக்ஷினக் கைலாயம் என்ற பெயரையும் பெற்று, சிவபெருமான் மற்றும் உமையவள் தங்கும் இடமாகவும் இருந்தது. ஆனால் இதில் ஒரு குறையும் உள்ளது எனப் பிரம்மாவிடம் நாரதர் வினா எழுப்பி... இதை எப்படிக் கவனிக்காமல் விட்டீர்கள்? எனக் கேட்டார்.

பிரம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவர் நாரதரிடமே, தான் படைத்த கைலாய மலையில் என்னக் குறை இருக்க முடியும்?  என்று கேட்டார். அதற்கு நாரதர்,..... என்னைப் படைத்த பிரம்மனே, 'கைலாயம் என்றாலே கங்கை உற்பத்தியாகி ஓடும் இடம்தானே!, நீங்கள் படைத்த தென் இமய மலையில் கங்கை எங்கே உள்ளது? கங்கை இல்லாத இடம் கைலாயம் ஆகுமா? என்று கேட்டார்.

பிரம்மாவுக்குத் தான் செய்திருந்த தவறு இப்போது புரிந்தது. ஆனால் இதை எப்படி சிவபெருமானிடம் சென்று இப்போது கூறுவது? இங்குக் கங்கையின் கிளையைக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? என நாரதருடன் யோசனை செய்தார்.

முடிவில், விஷ்ணுவிடம் சென்று இதற்கான யோசனையைக் கேட்டார்கள். விஷ்ணு, இவர்களிடம் கவலைப்படாமல் செல்லுங்கள். இதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன்’ என்று கூறி அவர்களை அனுப்பினார். பின், கங்காதேவியை அழைத்து அவளிடம் ஒரு காரியத்தை செய்யுமாறு கூறினார்.

பகீரதன் தவத்தினால் ஏற்பட்ட கங்கையின் பிரவாகத்தை அடக்க, அவளைத் தனது முடியில் முடித்து வைத்துக் கொண்டார் சிவபெருமான் என்றாலும், அவர் முடியில் அவர் வைத்திருந்தது கங்கை நதியின் பிரவாகத்தை மட்டுமே. ஆனால் சில நேரங்களில் கங்கா தேவியும் அங்கு அவர் முடியில் வந்து தங்குவாள். ஆனால் உமையுடன் அவர் தனிமையில் இருக்கும்போது, கங்கா தேவி அங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது உமையின் கண்டிப்பான கட்டளை.

இதற்குக் காரணம் தனிமையில் சிவபெருமானுடன் உமை இருக்கும்போது அவர்களை அந்தக் கோலத்தில் வேறு எந்தப் பெண்ணுமே பார்க்கக் கூடாது, அவர்களால் அவர்களுக்கு எந்தத் தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதே.

விஷ்ணு செய்திருந்த ஏற்பாட்டின்படி திருகோணீஸ்வரர் மலையில் ஒரு நாள் சிவனும் பார்வதியும் தனிமையில் இருந்தபோது கங்கா தேவியானவள், அவர் முடியில் சென்று அமர்ந்து கொண்டு ஒரு பெண்ணின் குரலில் கலகலவென சிரிப்பது போல சப்தம் செய்தாள்.

இதென்ன சப்தம்? உங்கள் முடியில் இருந்து எதோ சப்தம் வருகிறது’ எனப் பார்வதி கேட்க, அப்போது தன் முடியில் கங்கை அமர்ந்திருப்பதை உணர்ந்த சிவனார் ‘ஒன்றும் இல்லையே, கங்கை நதியல்லவா பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன் சப்தமே இது‘ என்று கூறி விட்டு, பார்வதிக்கு தெரியாதபடி தன் தலையில் இருந்த கங்கா தேவியை நீர் திவலைகளாக்கி அதைத் தலையில் இருந்து துடைத்து ஏறிய அந்த நீர்த் திவலைகள் சிவனாரின் பாதத்தில் சென்று விழ, நீர் திவலைகளாக இருந்த கங்கா தேவி சிவனார் பாதத்தில் இருந்து வெளிக் கிளம்பி திருகோணீஸ்வரர் மலையில் இருந்து பெரும் பிரவாகமாகப் பாய்ந்து அந்த மலையைச் சுற்றி ஓடியபடி கடலுடன் கலந்தாள்.

அப்படி அவள் மலையைச் சுற்றி ஓடியபோது, அவள் உடலில் இருந்து வழிந்த நீர் இன்னும் சில இடங்களில் கிளை நதியாகப் பாய்ந்து ஓடியது. இப்படியாக அந்தத் தென் கயிலையிலும் சிவபெருமானின் அருளினால் கங்கை நதி பிறந்தது. இதைக் கண்டு மகிழ்ந்த நாரத முனிவர் பிரம்மாவுடன் ஓடி வந்து விஷ்ணுவிற்கு நன்றி கூற, அவர்களை அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்றார் விஷ்ணு. விஷ்ணுவும், கங்கா தேவியும் சிவபெருமானையும் உமையும் தரிசித்து நடந்ததைக் கூறி அவர்களது ஆசிகளை வேண்டி நின்றார்கள்.

சிவபெருமானும் புன்னகைப் புரிந்து அவர்களுக்கு ஆசி கூறி அனுப்பிய பின் தன் பாதத்தில் இருந்து வெளிச்சென்ற அந்தக் கங்கை நதியில் குளித்தால் ஏற்படும் பலவிதமான புண்ணியங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இமயமலைப் பர்வதத்தில் தன் முடியில் இருந்து வெளியான கங்கை, தென் பகுதியில், அதாவது இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள தென்பகுதியில், தனது பாதத்தில் இருந்து வெளியேறியதன் மூலம், தனது தலை முதல் பாதம் வரை தன்னை அபிஷேகம் செய்த பலனுடன் கங்கை அங்கு இருக்கிறாள் என்பதினால் அது விசேஷமான கங்கை நதியாக கருதப்படும் என்றும் இதில் ஸ்நானம் செய்பவர்கள் அடைய உள்ள பெரும் பயன்களையும் விலாவரியாக எடுத்துரைத்தார்.

இந்தக் கிளை நதியில் உற்பத்தி ஆன ஒன்றுதான் கதிர்காமனில் ஓடுகின்ற மணிக்கங்கை நதியாகும். திருகோணீஸ்வரர் மலை உச்சியில் உலக அன்னையான உமைக்கு கங்கையின் சிரிப்பு மிக அதிகமான மன வேதனையைத் தந்ததினால்..... திருகோணீஸ்வரர் மலையில் உற்பத்தியான அந்தக் கங்கையின் பெயர் "மஹா வலி" தந்த கங்கை என்பதைக் குறிக்கும் வகையில் "மாவலிகங்கை" என்ற பெயரைப் பெற்றுள்ளது என்று சிலர் கருத்துக் கூறுவர்.

- கோவை.கு.கருப்பசாமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com