மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பிட்டுத் திருவிழா ஆக. 9-இல் கொடியேற்றம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் பிட்டுத் திருவிழா எனப்படும் ஆவணி மூலத் திருவிழா வரும் 9ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பிட்டுத் திருவிழா ஆக. 9-இல் கொடியேற்றம்
Updated on
1 min read


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் பிட்டுத் திருவிழா எனப்படும் ஆவணி மூலத் திருவிழா வரும் 9ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் அம்மன், சுவாமிக்கு தனித்தனி முக்கியத்துவம் கொடுத்து திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்குரிய ஆடிமுளைக் கொட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது சுவாமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிட்டுத் திருவிழா எனப்படும் ஆவணி மூலத் திருவிழா வரும் 9ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி சுவாமி, பிரியாவிடையுடன் தினமும் ஆவணி மூல வீதிகளில் காலை, மாலை வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், வரும் 13ஆம் தேதி திங்கள்கிழமை ஏத்தி இறக்கும் விழா அம்மன் சன்னதி வளாகத்தில் நடைபெறுகிறது.
ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 15ஆம் தேதி புதன்கிழமை கருங்குருவிக்கு உபதேசம், 16ஆம் தேதி நாரைக்கு முக்தி அளித்தல், 17ஆம் தேதி மாணிக்கம் விற்ற லீலை ஆகியவை நடைபெறுகின்றன. வரும் 18ஆம் தேதி சிவபக்தரான தருமிக்கு (புலவர்) அருளும் வகையில் சுந்தரேசுவரர் பாடல் எழுதி தந்த திருவிளையாடல் பூஜைகள் நடைபெறும். வரும் 20ஆம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலையும், 21ஆம் தேதி வளையல் விற்ற லீலையும், அன்று மாலை சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. அன்றிலிருந்து சுந்தரேசுவரர் ஆட்சி மதுரையில் நடைபெறும் என்பது ஐதீகம்.
வரும் 22ஆம் தேதி மாணிக்கவாசகருக்காக நரியை பரியாக்கிய லீலையும், 23ஆம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலையும் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி, அம்மன் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக பொன்னகரம் பகுதியில் உள்ள வைகையாற்று பிட்டுத் தோப்பு மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு ஏழை பக்தையான வந்தியக் கிழவிக்காக உதவி செய்து, சுந்தரேசுவரர் பிட்டுக்காக பிரம்படி படும் பூஜைகள் நடைபெறும். வரும் 25ஆம் தேதி சனிக்கிழமை ஆவணி மூல உற்சவ தேரோட்டம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com