மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்

நீதி என்பது சட்டப்படியும். கரும நியாயப் படியும் முறையாக நடப்பது என்று பொருள்.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
Updated on
2 min read

"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்பது ஒரு புராண வாழ்த்து. 

நீதி என்பது சட்டப்படியும், கரும நியாயப்படியும் முறையாக நடப்பது என்று பொருள். மனிதன் தர்மம் இது, அதர்மம் இது என்ற வேறுபாட்டை அறியக்கூடியவன். 

சைவ நெறியைச் சேர்ந்தவன் உலகம் மனிதனுக்காக மட்டுமே படைக்கப்பட்டது என எண்ணுவதில்லை. உயிருடையன. உயிரல்லாதன என்ற அண்ட சராசரங்கள் அனைத்துக்குமாகவே படைக்கப்பட்டவை என்று கருதுபவன். ஆதலால் நீதி மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குகள், மரங்கள், மலைகள், நதிகள் என உலகத்தில் உள்ள மற்றும் அனைத்துக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. தமிழில் பல நீதி நூல்கள் இப்படித்தான் சொல்லுகின்றன.

ஒரு மன்னனுக்கு ஒரே ஒரு புதல்வன். அந்த இளவரசன் தேரோட்டிச் செல்லுகையில் ஒரு பசுவின் கன்று தேர் சக்கரத்தில் சிக்குப்பட்டு மாண்டது. கன்றையிழந்த பசு அரசன் அரண்மனைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது. மணியோசை கேட்ட மன்னன் அங்கு வந்து பார்த்தான். பசுவின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்டான். விசாரித்து உண்மை அறிந்தான். குற்றவாளியான தன் ஓரே மகன் மீது தேரோட்டச் செய்தான். மனுநீதி கண்ட சோழன். உண்மையான இறையருளால் மன்னனின் மகன் உயிர்பெற்று எழுந்ததுடன். பசுவின் கன்றும் உயிர்பெற்று எழுந்தது என்பது ஒரு நீதிக்கதை. 

மனிதனுக்கு மட்டுமல்ல உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் கூட நீதி வழங்குவதே உண்மையான சைவ நீதியாகும் ."மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்" என்பதே சைவர்களின் பிரார்த்தனையுமாகும்.

சைவநீதியின் மாண்பு அவ்விதம் இருக்கையில் இன்று நம் சமூகத்தில் உள்ள நியாயமென்ன? விளக்கம் தேவையில்லை.

சிவம் என்றால் அன்பு. சைவநீதி என்றால் அன்பு நெறியாகும். மக்களிடம் மட்டுமன்றி எல்லா உயிர்களிடத்தும் கூட நாம் அன்பு காட்டுவதாயின் நாம் காணும் உலகம் எவ்வளவு இன்பமயமாக இருக்கும். 

இன்றுள்ள உலக நிலையில் இது நடவாத காரியம் என்று தோன்றக்கூடும். ஆனால் அந்த அன்பு நெறியை, சைவநீதியை ஒரு குறிக்கோளாகக் கொண்டு நாம் வாழ முற்பட முடியாதா!?

உலகத்திலேயே "மேன்மை கொள் சைவநீதி" தொடர்ந்து நிலைக்க திறந்த மனத்தோடு உள்ளன்போடு நம்மால் ஆன பணிகளைச் செய்வோமேயானால் அது நிச்சயம் தழைத்தோங்கும் என்பது எனது நம்பிக்கை.

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com