கோடைக்கால நோய்கள்: அலர்ஜி மற்றும் சரும நோய்கள் பற்றி ஜோதிடத்தில் புதன் கூறும் ரகசியங்கள்!

இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும்..
கோடைக்கால நோய்கள்: அலர்ஜி மற்றும் சரும நோய்கள் பற்றி ஜோதிடத்தில் புதன் கூறும் ரகசியங்கள்!

இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்தே கோடையும் அதிரடியாகத் தொடங்கி இப்போதே வெயில் மண்டையைப் பிளக்க ஆரம்பித்துவிட்டது. போதிய மழை இல்லாமல், வெயில் தலைகாட்ட முடியாத அளவுக்குக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் வறட்சி மிகுந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாட்டோடு கோடைக்கால நோய்களையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளும், வயதானவர்களும், நோயாளிகளும் இப்போதே வெயிலின் கொடுமையால் வதங்கத் தொடங்கிவிட்டார்கள். அதனால் இந்த கோடை வெயில் பாதிக்காத அளவிற்கு எல்லோருமே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வெயில் காலத்தில் ஏற்படும் மிகச் சாதாரணமான சரும நோய் வியர்க்குரு. உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை அதிகமாகச் சுரந்து வெளியேறமுடியாமல் தடைப்படும்போது வியர்க்குரு ஏற்படுகிறது. கோடைக்கால வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு பல உபாதைகளைக் கொண்டுவருகிறது. வியர்வை அழுக்கு, சோர்வு, மயக்கம், கரும்புள்ளிகள், வறட்சி, நிறம் குறைதல் என பல தொல்லைகள். நம் தோலை சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் நேரடியாக தாக்கும் என்பதால், வெயில் அழகுக்கும் உடலுக்கும் ஆபத்தை விளைவிக்கும். அதனால், கோடையின் வெப்பத்திலிருந்து உடலைப் பராமரிப்பது அவசியமாகிறது.

கோடை வெப்பத்தால் நிலம் உஷ்ணம் அடையும்போது குப்பை, கூளங்களில் குடியிருக்கும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்றின் மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் 'வேரிசெல்லா ஜாஸ்டர்' எனும் வைரஸ் கிருமிகள். இந்தக் கிருமியால் நமக்குச் சின்னம்மை ஏற்படுகிறது. அந்நோய் வந்து குணமான பின்னரும் சிலருக்கு இந்த நோய்க் கிருமிகள் நரம்புகளில் தங்கி, பல ஆண்டுகள் கழித்து 'அக்கி அம்மை'யை ஏற்படுத்தும். இதுபோல் மீசில்ஸ் வைரஸ், தட்டம்மை நோயை ஏற்படுத்தும். 

சரும நோய்களுக்கான காரக கிரகங்கள்

சூரியன்
கால புருஷனுக்கு ஆத்ம காரகன் என்பதாலும் உடல் முழுவதிற்கும் சூரியன் காரகமாவதால் தொழுநோய்க்கும் சூரியன் முதன்மை காரகம் வகிக்கிறார். மேலும் வைட்டமின் D குறைபாடும் தோல் நோயிற்கு காரணம் என்கின்றனர் அறிவியலார். வைட்டமின் Dக்கு காரக கிரகம் சூரியனாகும். மேலும் நமக்குத் தேவையான வைட்டமின் D சூரிய வெளிச்சத்திலிருந்துதான் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்
அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாறுகளுக்குப் புதனே காரகமாவார். தோல் நோயின் உச்சக்கட்டமாகத் தொழுநோயைக் கூறலாம். தொழுநோயாளிகளுக்குத் தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துப்போகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

சந்திரன்
நமது ஜாதகத்தில் லக்கினத்தை உயிராகவும் ராசியை உடலாகவும் கூறுவர். ராசி என்பது சந்திரன் இருக்கும் இடம்தான். ஆக உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரன் காரகனாகிறார். மேலும் தொழுநோய் சளி மற்றும் நீர், காற்றினால் பரவுவதால் சந்திரன் காரகனாகிறார்.

செவ்வாய்
காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தொழுநோய் போன்ற தோல் நோய்களுக்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

சுக்கிரன்
சில சரும நோய்கள் சளி மற்றும் நீரினால் பரவுவதால் சுக்கிரனும் காரகமாகிறார். மேலும் உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்துத் தோல் அழுகுதல், சீழ் பிடித்தல் சிரங்கு, கொப்புளங்கள் எனப் பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்கு சுக்கிரன் காரகனாவதால் தொழுநோய் மற்றும் அனைத்து சருமநோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

ராகு/கேது

சூரியன் புதனுக்கு அடுத்தபடியாக தோல் நோய்களுக்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்கச் செய்வதால் தொழுநோய் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுண்ணுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்கு சர்ப்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம வினைகளை ஜாதகத்திலும் தெரிவித்து அதை அனுபவிக்கச் செய்பவர்களும் இவர்களே!

கோடைக் கால சரும நோய்களுக்கான கிரக சேர்க்கைகள்

1. ஆத்ம காரகன் எனப்படும் சூரியன் ஒன்றாம் பாவாதிபதி ஆகிறார். கால புருஷ ஜாதகத்தில் செவ்வாய் முதல் வீட்டு அதிபதி ஆகிறார். எனவே லக்கம், லக்னாதிபதி, சூரியன், செவ்வாய், ஆறாம் பாவாதிபதி, புதன் இவர்களோடு ராகு/கேது தொடர்புகொண்டு தசா புத்தி நடைபெற்றால் அம்மை, வேனல் கட்டிகள் போன்ற உஷ்ணத்தினால் ஏற்படும் தோல் நோய்கள் ஏற்படும். மேலும், அம்மை நோய் ஒரு வெம்மை நோய் என்பதால் உஷ்ண கிரகங்களான சூரியன் மற்றும் செவ்வாய் முக்கிய காரகம் பெறுகின்றனர்.  

2. அம்மை மற்றும் வேனல் கட்டிகள் காற்றில் பரவும் நோய் என்பதால் அதற்குக் காரக கிரகங்கள் புதன் மற்றும் ராகு/ கேது தொடர்பு மற்றும் ஆறாம் பாவ சம்பந்தம் என்கிறது மருத்துவ ஜோதிடம்.

3. சூரியன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் மூவரும் எந்த ராசியிலும் சேர்க்கை பெற்றாலும் கோடைக்கால சரும நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. 

4. லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமே அல்லது சந்திரனும் செவ்வாயுமே எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வெண்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்

5. சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

6. லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரண்டாம் வீட்டில் நிற்பது.

7.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

8. ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6-ம் வீட்டில் இனைந்து நின்று அவர்களுக்கு கோச்சாரக ராகு/கேது சேர்க்கை ஏற்படுவது மற்றும் சூரியன் கோச்சாரத்தில் அவர்களைக் கடப்பது.

9. லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

10. சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

11. ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்புகொள்வது.

மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்து அவற்றை கோச்சார சூரியன் கடக்கும்போது கோடைக்காலத்தில் ஏற்படும் நோய்கள் ஏற்படும்.

நாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்

1. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணெய் மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி, புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்த்துக் குளிப்பது சிறந்த பயனளிக்கும். மேலும் நீண்ட நாட்களாகக் குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

2. செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய் தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களைப் போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய்" வந்ததாகவும் அதனைப் போக்க சிவபெருமானே தானாகத் தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய்க் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது .

3. சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவாரப் பாடல்களை இரண்டாவதாகப் பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்குத் தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார்.

4. திருவெண்காடு புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரியத் தலமாகக் கருதப்படுகிறது. 

5. மாரியம்மனை சீதளாதேவி என அழைக்கப்படுவாள். அம்மை மற்றும் வேனல் கட்டிகள் மற்றும் உடல் சூட்டினால் ஏற்படும் கொப்புளங்கள் குணமாக ஸீதளாஷ்டகம் எனும் ஸ்லோகத்தை காலை மாலை பக்தியுடன் படித்துவர விரைவில் குணமாகும்.

6. கோடைக்கால சரும நோய்களுக்கு காரக கிரகமான சுக்கிரனே அதற்கான தீர்வையும் காட்டுகிறார். கோடை நோய்களைத் தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறையக் குடித்துவந்தாலே பல பல வியாதிகளைத் தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. மேலும் இரண்டுமுறை குளித்து சுத்தமான பருத்தி ஆடைகள் அணிவதும் கோடைக்கால சரும நோய்களைத் தவிர்க்க வழிசெய்கிறது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com