

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் அருள்பாலித்துவரும் அத்திவரதரை இன்று முதல் நள்ளிரவு வரை தரிசிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த 31 நாளாக சயன கோலத்திலும், இன்றுடன் 5-வது நாளாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா, நீலம் கலந்த பட்டாடையில் செண்பக பூ மற்றும் மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அத்திவரதரை காண தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 35 நாள்களில் 50 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். இன்று காலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
சயன கோலத்தைத் தரிசித்தவர்கள் நின்ற கோலத்தையும் தரிசிக்க வேண்டும் என்று இரண்டாவது முறை தரிசனம் செய்பவர்களும் உள்ளனர். இந்நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இதன் காரணமாக இன்று முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒரே நாளில் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.