பெண்ணிற்கும் பணத்திற்கும் மரியாதை கொடு! 

ஒவ்வொருவர் ஜாதகத்திலும் தனம் மற்றும் திருமணம் அந்தந்த தசாபுத்தியில் அடையப் பெற்றாலும்
பெண்ணிற்கும் பணத்திற்கும் மரியாதை கொடு! 
Updated on
3 min read

ஒவ்வொருவர் ஜாதகத்திலும் தனம் மற்றும் திருமணம் அந்தந்த தசாபுத்தியில் அடையப் பெற்றாலும் சிலநேரங்களில் அவைகள் நிரந்தரமற்ற நிலையில் நம்மை விட்டு விலகிச்  சென்றுவிடுகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக நாம் பெண்ணிற்கும் பணத்திற்கு எப்படி மரியாதையைக் கொடுப்பது அதற்கான  கிரகங்களான சுக்கிரன், சந்திரன், குரு எவ்வாறெல்லாம் போற்றுவது என்று பார்ப்போம். 

பெண் சாபம்

ஜாததகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் பாதிக்கப்பட்டாலும் 4, 7, 11 இடங்கள் வலுகுன்றிய நிலையிலிருந்தாலும் கேதுவோடு சம்பந்தப்பட்டாலும், கர்ம  பாவத்தில் அடிபட்டிருந்தால் இவர்கள் முற்பிறவி கர்மாவால் தெரிந்தோ தெரியாமலோ பெண்களின் சாபம் பெற்றிருக்கலாம். இவர்களுக்குப் பெண்களால் எந்தவகை  திருப்தியோ நன்மையோ அடையமாட்டார்கள். இந்த பெண் சாபம் என்பது தோஷமாக தன் பரம்பரையாகத் தொடரும். இந்த பிரபஞ்சத்தில் 13 வகையான சாபங்கள் உள்ளன  அவற்றில் முக்கியமானது பெண்களின் சாபம் ஆகும். இந்த வகை சாபம் அவர்கள் முற்பிறவியில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப்படுத்துவது,  மனைவியை துன்பப்படுத்துவது, பெண்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வது, தாயாரைக் கவனிக்காமல் இருப்பது, ஒரு பெண்ணை ஏமாற்றி மறுமணம் செய்வது,  காரணமில்லாமல் விவாகரத்து செய்வது, மருமகளைக் கொடுமைப்படுத்துவது, சகோதரிகளை இழிவுப்படுத்துவதும், பெண்களுக்குத் துர்மரணம் ஏற்படுத்துவது என்று இருந்தால்  அவர்களுக்கு இந்த கலியுகத்தில் தங்கள் குடும்பத்தினரைத் தாக்கும். 

ஒரு சில குடும்பத்தில் பார்த்தால் அப்பா, அம்மா திருமணம் ஆனபிறகு பிரிந்து இருப்பார்கள். மகன் அல்லது மகள் திருமணம் செய்தாலும் திருமண முறிவில் இருப்பார்கள்  அல்லது சிறு வயது துர்மரணம் ஏற்பட்டிருக்கும். பெண்களால் சாபம் பெற்ற ஜாதகத்தை பார்த்தால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கால புருஷ தத்துவப்படி ஏழாம் இடம்,  ஏழாம் வீட்டு அதிபதி கேதுவோடு சேர்க்கை, பெண் கிரகங்கள் சுக்கிரன் சந்திரன் பலமற்ற தன்மையில் இருக்கும், சுக்கிரன் பாவ கிரகங்களோடு சிக்கி இருப்பதும், குரு பலம்  பெறாமல் இருப்பதும், அயனம் என்று சொல்லும் 12-ம் இடத்தில் உஷ்ண கிரகங்கள் பாதிப்பு மற்றும் சுக்கிரனால் ஏற்படும் தோஷங்கள் என்று தொடர்ந்து அவர்கள்  குடும்பத்தில் தொல்லைகளை ஏற்படுத்தும். இது முற்பிறவி சாபம் நான் என்ன செய்யமுடியும் என்று கேட்பது என்காதில் விழுகிறது. அந்த சாபத்தினால் குறைக்க  இப்பிறவியில் முற்படவேண்டும் அதற்கான பரிகாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணத்தால் ஏற்படும் சாபம்

ஒரு சிலர் நம்மை எல்லாரும் மதிக்கவேண்டும் என்பதற்காக பணத்தை பாக்கெட்டில் தெரியும் மாதிரி வைப்பது. மற்றவர்களிடம் பேசும்பொழுது பணம் எனக்கு ஒரு தூசு  என்று கூறுவது. சிலர் அதனை பணத்தை மாலையாக மற்றவர் கழுத்தில் அல்லது தன் கழுத்தில் போட்டுக்கொள்வது என்று செய்வார்கள். இந்த வகை செயல் பணத்தை  கேவலபடுத்துவதாக அர்த்தம். என்னுடைய வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை மதிக்காத ஒரு செல்வந்தராக இருந்தார். தன்னை பாராட்டவிக்கும் அளவிற்கு, எந்தவித  விசேஷம் இல்லாத காலங்களில் பணம் இருப்பவர்களிடம் இனமாகக் கொடுப்பது, யார்கேட்டாலும் பணத்தைத் தூக்கி எறிவது, தினமும் வீட்டில் சமைத்த அன்னத்தை  குப்பையில் போட்டுவிட்டு வெளியில் வாங்கி சாப்பிடுவது என்று இருந்தார். அவர் இறக்கும் தறுவாயில் ஒருவேளை உணவு இல்லாமல், பணம் இல்லாமல் மிகவும்  கஷ்டமான நிலையில் இறந்து போனார். இன்று அவர்கள் குழந்தைகள் ஆதரவில்லாமல் கஷ்டமான நிலையில் இருந்து வருகிறார்கள். பணத்தைக் கஞ்சமாகச் செலவு  செய்யவேண்டும் என்று கூறவில்லை தேவைக்கு ஏற்ப பணத்தை மதித்து செலவு செய்யவேண்டும். ஜாதகத்தில் இவர்களுக்கு ஒன்று, இரண்டாம், பதினோராம் பாவம்  கெட்டிருக்கும், சுக்கிரன் சேர்க்கை பாவரோடு குருபலம் அற்று இருக்கும்.

சாபம் தீர இப்பிறவியில் பின்பற்ற வேண்டிய பரிகாரம்

எங்கெல்லாம் சொட்டு தண்ணீராவது வீணாகிறதோ அங்கெல்லாம் பணம் தங்காது தரித்திரம் உண்டாக்கும். இவற்றைத் தவிர்க்கவேண்டும். மனைவி மற்றும் குடும்பத்தில் உள்ள பெண்களின் அழுகை சத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக என்ன வழி என்று முடிந்தவரைத் தீர்வு காணல் வேண்டும்.

தன் கடைசிக் காலம் வரை தாய் தந்தையாருக்கு முடிந்தவரை உதவியாக இருந்து, மதித்து வணங்கவேண்டும். இவற்றில் தாய் என்பவள் கணவன்/மனைவியின் மாமியாரும்  அடங்கும். பணம் காரணமாக திருமணம் செய்ய முடியாத ஏழைப் பெண்ணுக்கு மாங்கல்யத்திற்குப் புடவைக்கு என்று பணஉதவி செய்யலாம்.

ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்ட பெண்களின் ஆசிகளைப் பெறச் சுமங்கலிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது ஒருசில விசேஷங்களுக்கு முன்பாக அல்லது  வருடத்திற்கு ஒருமுறை என்று செய்வது வழக்கம். இந்த  சுமங்கலிப் பிரார்த்தனை அல்லது மங்கலப் பெண்கள் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள்  பார்த்து ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்களை மற்றும் சிறு பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு தாம்பூலம் வழங்கி அவர்களை நாம்  மூதாதையர் ரூபமாக நினைத்து நமஸ்கரிக்க வேண்டும். இந்த பரிகாரம் அவரவர் தகுதிக்கேற்ப மதத்திற்கேற்ப செய்யலாம்.   

பணத்தைச் சுருட்டி வைப்பது, காசை அங்கங்கே தூர எறிவது என்று வைக்கக்கூடாது. பணத்திற்கென்று ஒரு ஒழுங்குமுறை உள்ளது. பணத்தை மாலையாக மனித உடலில் போட்டுக்கொள்வது. இதை ஒருபோதும் செய்யக்கூடாது. பணம் எண்ணும்போதும் எச்சில் தொட்டு என்னவோ புரட்டவோ கூடாது. ரூபாய் நோட்டுகளை அடுக்கி வரிசையாக பர்சில் வைக்க வேண்டும். 

பணத்தை மற்றவர்களிடம் கொடுக்கும்பொழுதும் வாங்கும்பொழுது ஒருவித பணிவு வேண்டும். யாரிடம் இருந்து பணம் வாங்கினாலும் கொடுத்தாலும் வலது கையை  உபயோகப்படுத்த வேண்டும். பணத்தை மதித்தால் தான் நம் பணம் எப்போதும் நம்மிடமே இருக்கும்.

அக்காலங்களில் வீட்டுக்கு முன்பு ஒரு கணக்குப் பிள்ளை இருப்பார். அவர் ஓரனா காசு வாங்கினாலும் கணக்கு எழுதிக் கொள்வர். அங்கு எப்பொழுதும் மஹாலக்ஷ்மி  குடியிருப்பாள். வாழ்க்கையில் ஒரு வரைமுறை வைத்து பணத்தை கையாண்டால் மிகவும் நல்லது.

தரித்திரம் ஏற்படாமல் இருக்க நிறைய விஷயங்கள் உண்டு. ஆனால் நான் சிலவற்றைக் கூறுகிறேன். வீட்டில் எந்த உடைந்த கண்ணாடி பொருள்களை வைத்திருக்கக் கூடாது.  முக்கியமாக கைபேசியில் கண்ணாடி பாகம் உடைந்ததும் வைத்திருக்கக் கூடாது. நல்ல நாட்களில் மற்றும் அந்தி சாயும் நேரம் சீட்டு மற்றும் தாயம் விளையாடுவது கூடாது.  அப்படி இருந்தால் தரித்திரம் உண்டாகும்.

மேலே கூறிய அனைத்தும் நம் குடும்பத்தில் அனைவருக்கும் சொல்லிக்கொடுத்து கடைப்பிடிக்க வேண்டும். நாம் வாழ ஓரளவு பணமும் திருப்தியான குடும்ப வாழ்க்கையும்  அவசியம் தேவை.

குருவே சரணம்

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com