மனமின்றி கண்ணீருடன் விடை தருகிறோம் அத்திவரதா..!

நாற்பதாண்டு துயில் களைந்து நீரிலிருந்து எழுந்து 48 நாட்கள் ஆனந்தமாய் பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.
மனமின்றி கண்ணீருடன் விடை தருகிறோம் அத்திவரதா..!
Published on
Updated on
2 min read

நாற்பதாண்டு துயில் களைந்து நீரிலிருந்து எழுந்து 48 நாட்கள் ஆனந்தமாய் பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார் ஆதி அத்திவரதர். ஆம், கடந்த 48 நாட்களாக டிவி, மீடியா,  வாட்ஸ் ஆப், டிவிட்டர் என உலக மக்களால் தினமும் பேசப்பட்டுவந்த ஒரு விஷயம் தான் இந்த அத்திவரத பெருமாள். 

காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோயிலில் ஜூலை 1 முதல் தினமும் விதவித பட்டாடையில் 31 நாட்கள் சயன கோலத்திலும், இன்றுடன் 16 நாட்களாக நின்ற  கோலத்திலும் அருளாளன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

எம்பிரானைக் காண கண்கள் இரண்டும் போதாது. அந்தளவுக்கு அழகோ அழகு என் அத்திவரதர்..!!! அதை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. 

இதற்கு முன்னதாக கடந்த 1979-ம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான்  இந்த பெருமாளை தரிசிக்க முடியும். ஆனால் மூன்று முறை தரிசித்த பாக்கியவான்களும் இருக்கின்றனர். 

மிகவும் தொன்மையான இந்த அத்திவரதர் உற்சவத்தில், திருவிழா வழிபாட்டுடன் சேர்த்து மொத்தம் 48 நாள்களுக்கு அத்திவரதரைக் கண்குளிரத் தரிசனம் செய்யலாம் என  ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களுக்கு இந்தாண்டு(2019) இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளுவார் என்பதால், இந்த அருளாளன் திருவுருவத்தைக் காணப் பல ஊர்களிலிருந்தும்  கைக்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் எனக் கூட்டம் அலை அலையாய் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்தனர்.  கடந்த 48 நாட்களாக காஞ்சிபுரம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது. 

அத்திவரதர் பெருவிழாவின் 47-வது நாளான இன்று மஞ்சள் மற்றும் ரோஜா நிறப் பட்டாடையில் பல வண்ண மலர் மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கடந்த 46  நாட்களில் சுமார் 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.

மேலும், 48 நாட்களுக்கு அத்திவரதர் தரிசனத்தை நீடிக்க சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். ஆனால், ஆகம விதிப்படி எம்பிரானை 48 நாட்கள் மட்டும் தான் வெளியில் வைக்கமுடியும் இதில் யாரும் தலையிட முடியாது என்ற தீர்ப்பே வெளியானது. 

அருளாளன் அத்திவரதர் தரிசனம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நள்ளிரவு முதல் தற்போது வரை 1.5 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.  மேலும் ஒரு லட்சம் பக்தர்கள் 5 கி.மீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) ஆகமவிதிகளின்படி அத்திவரதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, கோயிலில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில் அத்திவரதர் வைக்கப்படவுள்ளார்.  குளத்தில் வைக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

என்ன ஒரு அதிசயம் என்றால், அனந்தசரஸ் திருக்குளம் இதுவரை வற்றினதே இல்லையாம். அத்திவரதரை குளத்தில் வைக்கப்பட்டவுடன் பொற்றாமரை குளத்தில் உள்ள நீரை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் மாற்ற உள்ளனர்.

இனி, உன்னைக் காண 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமா? அத்திவரதா..! ஆதி அத்திவரதரை அடுத்து நாம் 2059-ல் தான் காண முடியும். 

மனமின்றி விடை தருகிறோம் எம்பிரானே...! நீரின்றி நீயில்லை, நீயின்றி நாங்களில்லை அத்திவரதா.. அத்திவரதா.. ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் உமக்கு..!!!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com