சியாமளா நவராத்திரி: அனைத்துத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

நாளை (5/2/2019) முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும்..
சியாமளா நவராத்திரி: அனைத்துத் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண் பெற ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

நாளை (5/2/2019) முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்ஷிக்கு சியாமளா நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது.  

சியாமளா நவராத்திரி பூஜை

தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை (05.01.2019 - 14.02.2019) அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் ச்யாமளா நவராத்திரி தினங்களாகும்.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு.‘கச்சபி’ என்பது சரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகத்தில்,சரஸ்வதியானவள் அம்பிகையின் ஸந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.

சங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர் கூறுவார்கள். இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். சரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கருப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர்.

சாக்தமும் நவராத்திரிகளும்

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்ப்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது.   

இந்து மதத்தின் சிறப்புமிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்பு மிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி). (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

சியாமளா தேவி

சியாமளா என்றும், 'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம். 

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது. 

கவி காளிதாசர் அருளிய ஸ்ரீ ச்யாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். 

கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

ஜோதிடத்தில் சரஸ்வதி யோகம்

தனகாரகன் குரு களத்திரகாரகன் சுக்கிரன் வித்யாகாரகன் புதன் ஆகிய மூவரும் லக்ன கேந்திரம், திரிகோணம் அல்லது இரண்டாமிடம் (1,2,4,5,7,9,10) ஆகிய இடங்களில் இருந்தால் சரஸ்வதி யோகம் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. இந்த யோகம் பெற்றவர்கள் ஆயகலைகள் 64ல் குறைந்தது 6,7 கலைகளிலாவது பாண்டித்தியம் பெற்று இருப்பார்கள். மேலும் சுக்கிரன், குரு, புதன் ஆகிய கிரகங்கள் கேந்திர திரிகோணத்திலோ அல்லது 2ம் வீட்டிலோ அமைந்து, குருபகவானும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ நட்பு வீட்டிலோ அமையப் பெற்றால், சரஸ்வதி யோகம் உண்டாகிறது.  பெயரிலேயே சரஸ்வதியிருப்பதால் இந்த யோகத்தால் நல்ல கல்வியாற்றல் தேவைக்கேற்ற செல்வம், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலை யாவும் உண்டாகும். 

கல்வி தரும் பிற யோகங்கள்

பத்ர யோகம்:

வித்யாகாரகன், கல்விகாரகன், அறிவுகாரகன் எனப் போற்றப்படும் புதன் பகவான் ஒருவர் ஜாதகத்தில் ஆட்சியோ, உச்சிமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானங்களில் அமைந்திருந்தால் பத்திர யோகம் உண்டாகிறது. பத்திர யோகம் அமைந்துள்ள ஜாதகருக்கு நல்ல அறிவாற்றல், சிறப்பான ஞாபக சக்தி, புக்தி கூர்மை யாவும் அமையும். கற்றவர்களின் சபையில் ஒரு முக்கியமான பங்கு  வகிப்பவராக இருப்பார். பலருக்கு ஆலோசனை வழங்கும் திறன் இருக்கும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார், கல்வி அறிவு மிகச் சிறப்பாக இருக்கும், கணிதத்தில் மேதையாக இருப்பார். பேச்சால், வாக்கால் முன்னேற்றம் ஏற்படும். வக்கீல் பணியில் திறமைசாலியாக இருப்பார். சமுதாயத்தில் மற்றவர்களால் மதிக்கப்படக்கூடிய அளவிற்கு உன்னதமான நிலை உண்டாகும். சகல கலைகளையும் கற்றுத் தேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். வாக்கு சாதுரியமும், கற்பனை திறனும் உண்டாகும் என்பதால் கலைத்துறையில் பெரிய இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு  அமையும். 

வித்யாகாரகனின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்‌ஷி அம்மன் ராஜ மாதங்கி எனும் ச்யாமளாவாகவும் திகழ்கிறாள். மதுரை மீனாக்‌ஷியை வணங்கிவந்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதோடு சிறந்த கல்வி மற்றும் கலை ஞானமும் பெருகும்.

புத ஆதித்ய யோகம்

ஒருவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து அமையப் பெறுவது புதாத்திய யோகமாகும். இந்த யோகம் அமையப் பெற்றவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு, பல கலைகளை கற்றுத் தேறும் வாய்ப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் உண்டாகும். அரசு வழியில் அனுகூலம், வியாபாரத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதன் சூரியனுக்கு பின் அஸ்தங்கமாகாமல் ஏற்படும் புத ஆதித்ய யோகமே சிறந்த பலனளிக்கிறது. மேலும் சூரியனை கடந்து புதன் நிற்கும்போது அது சுபவெசி யோகமாகவும் ஆகிறது.

நாளை முதல் ஆரம்பிக்கும் ச்யாமளா நவராத்திரி  நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com