பாவங்களைப் போக்கும் இரதசப்தமி திருநாள்! (விடியோ)

சூரியனை நாம் தினந்தோறும் வழிபடுகிறோம் ஆனாலும் ரதசப்தமியன்று சூரியனை வழிபடுவது..
பாவங்களைப் போக்கும் இரதசப்தமி திருநாள்! (விடியோ)
Published on
Updated on
1 min read

சூரியனை நாம் தினந்தோறும் வழிபடுகிறோம் ஆனாலும் ரதசப்தமியன்று சூரியனை வழிபடுவது மேலும் சிறப்பானது. தை மாதத்தில் வளர்பிறை சப்தமி நாளை இரதசப்தமி என்று அழைக்கிறோம். சூரியத்தேர் வடக்கு நோக்கி பயணத்தைத் தொடங்கும் நாள் என்றும், பாரதயுத்தத்தின்பொழுது, பீஷ்மர் அம்புப் படுக்கையில் காத்திருந்து முக்தி எய்திய நாள் என்றும் கூறுவர்.

யாரெல்லாம் இந்த ரதசப்தமியை கடைப்பிடிக்கலாம்? 

ஆரோக்கியமான வாழ்வு முக்கியமாக நோய் நோடியில்லாத வாழ்வு, புத்திரபேறு, நீண்ட ஆயுள், எடுத்த காரியத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள் அனைவரும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். 

ரதசப்தமியில் எப்படி ஸ்நானம் செய்தால் சிறப்பு?

ரத ஸப்தமியன்று காலையில் எழுந்து ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்வதால் பாவங்கள் நீங்கும். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். பாவங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஸப்த ஸப்த ப்ரியே தேவி

ஸப்த லோக ப்ரதீயிகே

ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன

மம பாபம் வ்யபோஹய”

ஸ்ரீ சூரிய காயத்ரி 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ

திவாக்ராய நம: இதமர்க்யம்

திவாக்ராய நம: இதமர்க்யம்

திவாக்ராய நம: இதமர்க்யம்

என்று மூன்று முறை சொல்லி சூரிய பகவானை வழிபட வேண்டும். மேலும், சூரிய நமஸ்காரம், ஆத்திய ஹிருதயம், கோளாறு பதிகம் ஆகியவை சொல்லி சூரியனை வழிபடலாம். சூரியனுக்கு உகந்த சர்க்கரை பொங்கலும், கோதுமையில் செய்து பண்டங்களையும் நிவேதனம் செய்யலாம். 

ரதசப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும். அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரதசப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது. ரதசப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காகப் பிதுர் பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com