மாசி மகத்தன்று 7 கடலில் நீராடினால் எண்ணிலடங்கா புண்ணியம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர்.
மாசி மகத்தன்று 7 கடலில் நீராடினால் எண்ணிலடங்கா புண்ணியம்!
Published on
Updated on
2 min read

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர்.

மாடக் கோயில்: இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிறது கருவறை விமானம். இதனை "கைலாய விமானம்' என்றே அழைக்கிறார்கள். இக்கோயில் ஏழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. மாடக் கோயிலாக விளங்குகிறது. கோட்செங்கட் சோழன் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

பஞ்சவர்ணேஸ்வரர்: இக்கோயிலின் வாயிற்படிகள் மேற்கு நோக்கியுள்ளன. இந்தப் படிகள் திருமுறைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இதற்கு ஆண்டு தோறும் படிவிழா நடத்தப்படுகிறது.

கல்யாண சுந்தரேஸ்வரர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். பாணம் என்ன வகை உலோகம் என்று அறிய முடியவில்லை. ஆனால் ஒரு பகல் பொழுதில் 5 விதமான நிறங்களை வெளிப்படுத்துகிறார். இதனால் "பஞ்சவர்ணேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் கிரிசுந்தரி தெற்கு நோக்கி காட்சியளிக்கிறாள். இவளின் சந்நிதியை அடைய 36 படிகள். இது 36 தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறது.

அகத்தியருக்கு திருமணக்கோலம்: கயிலையில் நடந்த சிவபெருமானின் திருமணத்தை காண முடியவில்லையே என்று அகத்தியருக்கு வருத்தம். இதை உணர்ந்த சிவபெருமான் நல்லூரில் அகத்திய முனிவருக்கு தனது திருமணக் காட்சியை அருளினார். அதை இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாக தரிசிக்கலாம்.

அமர்நீதி நாயனார் திருவிழா: சிவனையும் அம்பாளையும் வணங்கிவிட்டு கீழே வந்தால் இரட்டை தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். இங்கு சோமாஸ்கந்தர் தனி சந்நிதியுடன், தனி மண்டபத்தில் அருள்புரிகிறார். அதேபோல் தனி சந்நிதியில் வள்ளி, தேவசேனா சமேதராக முருகன் அருள்கிறார். இங்கே அமர்நீதி நாயனாருக்கும், அவருடைய மனைவிக்கும் திருவுருவங்கள் உள்ளன. ஆண்டுதோறும் அமர்நீதி நாயனார் திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அஷ்டபுஜ மகாகாளி: பிராகாரத்தில் வரப் பிரசாதியாக அஷ்டபுஜ மகாகாளி விளங்குகிறாள். இந்தக் காளிக்கு ஆண்டுதோறும் பால்குட விழா நடத்தி பக்தர்கள் பரவசம் அடைகின்றனர்.

மகம் பிறந்தது: பாண்டவர்களின் தாயான குந்தி தேவி, சிவனிடம் ஒரு வரம் கோரினாள். "மாசி மக நட்சத்திரத்தில் ஏழு தீர்த்தத்தில் குளிக்க வேண்டும்' என்றாள். சிவபெருமானும் ஏழு கடல்களை நல்லூர் திருக்குளத்திற்கு வரச் செய்து, குந்திதேவியை குளிக்கச் செய்து அருள்பாலித்தார்.

"இந்தத் திருக்குளத்தில் குளிக்கும் அனைவருக்கும் எனக்குக் கிடைத்த பலன் கிடைக்க வேண்டும்'' என்று சிவனிடம் வரம் கேட்டாள் குந்திதேவி. சிவனும் அந்த வரத்தைத் தந்தருளினார். எனவே மாசி மகம் பிறந்த இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினால் எண்ணிலடங்கா புண்ணியம் பெறலாம். ஏழு கடல் கலப்பதால் இந்தக் குளத்திற்கு "சப்த சாகரம்'' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

அமைவிடம்: கும்பகோணத்தில் இருந்து பாபநாசம்-குடவாசல் பேருந்தில் ஏறி நல்லூரில் இறங்கலாம். சுந்தர பெருமாள்கோயில், பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com