காளஹஸ்தி கோயிலுக்குச் செல்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி எனும் ஊரில் உள்ளது ஸ்ரீ காளஹஸ்திஸ்வர திருக்கோயில்.
காளஹஸ்தி கோயிலுக்குச் செல்பவர்கள் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

ஆந்திர மாநிலம், காளஹஸ்தி என்னும் ஊரில் உள்ளது ஸ்ரீ காளஹஸ்திஸ்வரர் திருக்கோயில். இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்கம் மிகவும் பழமையானதும், சிறப்பு வாய்ந்ததும். 

இத்தலத்தில் உள்ள அர்ச்சகர்கள் கூட இந்த சிவலிங்கத்தை கைகளால் தொடாமல் பூஜை சடங்குகள் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தோஷங்களை நீக்கும் பரிகார தலமாக இது விளங்குகிறது. 

நிழல் கிரகங்களான ராகு கேது ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையைக் கோசாரத்தில் பெறும்போது மிகுந்த துன்பங்களை அந்த நபர் அடைவர். அந்த நிலையில் இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து பரிகார பூஜைகளைச் செய்யலாம். 

யாரெல்லாம் பரிகாரப்பூஜை செய்யலாம்? 

ராகு கேது தோஷம், திருமணத்தடை, பாதிக்கப்பட்டவரும், குழந்தையின்மை,  புத்திர தோஷம், தொழிலில் அபிவிருத்தி, பணப்பிரச்னை, வேலையின்மை போன்ற அனைத்துவித பிரச்னைகளுக்கும் இத்தலத்திற்கு வந்து பரிகாரப்பூஜை செய்யலாம். 

பரிகாரப்பூஜை செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம்? 

• அன்றைய தினம் தலைக்குக் குளித்துவிட்டு பரிகாரப்பூஜை செய்யத் துவங்கலாம்.

•  பெண்கள் மாதவிடாய் காலம் முழுமையாக முடிந்தப்பின், அதாவது எட்டு நாட்களுக்குப் பின்னர் தான்  பரிகாரப் பூஜை செய்ய வேண்டும். 

• பரிகாரப்பூஜை செய்வதற்கு முன்னதாக வீட்டு அருகில் உள்ள அம்மன் கோயிலில் நாகம் பிரதிஷ்டை செய்திருந்தால் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமையில் அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்ற வேண்டும். பின்னர், ஒன்பதாவது வாரம் காளஹஸ்திக்குச் சென்று ராகு - கேது பூஜை செய்து வந்தால் சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முழுமையாக விலகும் என்பது ஐதீகம். 

• கடுமையான ராகு - கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வருடத்தில் இரண்டு  முறை பரிகாரப் பூஜை செய்வது நல்லது. 

• ஜாதகப்படி எந்த நாட்களில் பரிகாரப்பூஜை செய்ய வேண்டும் (அதாவது சாதாரண நாட்களில், ஜென்ம நட்சத்திரத்தில், கிரகண காலத்தில், ராகு காலத்தில்) என்பதைப் பற்றி நல்ல ஜோதிடரை அணுகிக் கேட்டுக்கொள்ளலாம். 

• வசதியுள்ளவர்கள் பசு மாடு, சிவலிங்கத்திற்கு நாக ஆபரணம் போன்றவை தானமாக வழங்கலாம். 

• பரிகாரப்பூஜை செய்த பின்னர், கோயிலின் வெளியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை எளியோருக்கு உணவு பொட்டலங்களைத் தானமாக வழங்கலாம்.

பரிகாரப்பூஜை செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது? 

• பூஜை செய்யும் முன் மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் கூடாது. அது மேலும் தோஷத்தை உண்டுபண்ணும். 

• ராகு - கேது நிவர்த்தி தோஷம் செய்தவர்கள் நேராக வீட்டிற்குச் செல்ல வேண்டுமே தவிர இடையில் உள்ள நண்பர்களின் வீட்டிற்கோ, உறவினர்களின் வீட்டிற்கோ செல்லக்கூடாது. 

• பேறு காலத்தில் உள்ள பெண்கள் ராகு-கேது பரிகாரப்பூஜைகளை செய்யக்கூடாது. முடிந்தவரை ராகு-கேது தோஷம் பரிகாரத் தலங்களுக்குச் செல்வதைத் தவிப்பதும் நல்லது. 

• ராகு-கேது பரிகாரத் தோஷம் செய்பவர்கள் கோயிலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தல் கூடாது. 

இவ்வாறு இதையெல்லாம் முழுமையாகக் கடைப்பிடித்து வந்தால் ராகு - கேது தோஷத்திலிருந்து முற்றிலுமாக நிவர்த்தியடையலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com