வீட்டில் தங்கம் நிறையனுமா? லக்ஷ்மி கடாக்ஷம் பெருகனுமா? அனுஷ நக்ஷத்திரத்தில் சொர்ணாகர்ஷன பைரவரை வணங்குங்க!

வீட்டில் தங்கம் நிறையனுமா? லக்ஷ்மி கடாக்ஷம் பெருகனுமா? அனுஷ நக்ஷத்திரத்தில் சொர்ணாகர்ஷன பைரவரை வணங்குங்க!


நாளை 26/2/2019 செவ்வாய்க்கிழமை மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஷ்வராஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் இதனை காலாஷ்டமி என்றும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. நாளை முழுவதும் அஷ்டமி திதி உள்ள நிலையில் பைரவ வழிபாடு செய்வது சிறப்பு என சாஸ்திரங்கள் கூறுகிறது. சீர்காழி சட்டநாதர், சென்னை கபாலீஸ்வரர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், திருச்சி திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் கோயில், பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி, காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைகுடி, தருமபுரியில் தகடூர் பைரவர் போன்ற ஸ்தலங்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகிறது.  

செவ்வாய்க்கிழமையும் அஷ்டமியும் அனுஷ நக்ஷத்திரமும் இணைந்து வரும் மைத்ர முகூர்த்த நாளில் சனைச்சர பகவானின் குருவான பைரவர் அபய கரம் காட்டி அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

பைரவ மூர்த்தி

ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சன்னிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும் உண்டு. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

பைரவர் தோன்றிய வரலாறு

சிவனின் ஆதி அந்தம் காண முடியாத பிரம்மா, தோல்வியை ஒப்புக்கொள்ள மனமின்றி திருமுடியைக் கண்டதாகப் பொய்யுரைத்து திருமுடியில் இருந்து வீழ்ந்ததாகத் தாழம்பூவையும் பொய்யுரைக்க வைத்தார். குறிப்பாக பிரமனின் ஐந்தாம் தலை இப்பொய்யை திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருக்க சினம் கொண்ட சிவனார், தனது புருவ மத்தியிலிருந்து பைரவ மூர்த்தத்தை உண்டு செய்தார். "பைரவனே! பொய்யுரைத்த பிரமனின் தலைகளை அறுத்தெறி" என உத்தரவிட, உச்சந்தலையை அறுத்தெறிந்த பைரவர் பின் மற்ற தலைகளையும் அறுக்க முற்பட அங்கு தோன்றிய திருமால், "முன்னர் பிரமன் செய்த தவத்தில் மகிழ்ந்து அவனுக்கு ஐந்து முகங்கள் அருளினீர், இப்போது அவனை நீரே நான்முகனாக்கிவிடீர், எனவே அவனை மன்னியுங்கள்! " என்றார். இதையடுத்து பிரம்மாவும் மன்னிப்புக் கேட்டார்.

ஈசன் சினம் தனிந்து, “வேதம் ஓதுபவருக்கு இனி நீரே அரசன், அனைத்து வேள்விகளுக்கும் நீயே குரு, யாக யக்ஞங்களின் பலனை அனைவருக்கும் நீ வழங்கு" என அருளினார். பைரவரையும், வீரபத்திரரையும் சிவனின் மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுகின்றன.

அஷ்டமியும் பைரவ வழிபாடும்

திதிகளில் அஷ்டமி நாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார். ஆயுதம் எடுத்தல், அரண் அமைத்தல், போர் மற்றும் தற்காப்புக் கலை கற்றல் ஆகியவை செய்ய உகந்ததாகப் போற்றப்படுகின்றது. அஷ்டமி திதியில் தான் பராசக்தியான அம்பாள் ஆயுதம் தரித்த நாளாகும். இந்த நாளில் பரிகார பூஜைகள் செய்வது சிறப்பாகும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது. அதிலும் லக்ஷ்மி அவதரித்த அனுஷ நக்ஷத்திரமும் இணைந்து வருவது சிறப்பிலும் சிறப்பாகும்.

சனைச்சரனின் குரு பைரவர்

ஒருமுறை சனிஸ்வரரை அவரது சகோதரரும் சூரிய புத்திரருமான யமதர்மராஜன் மிகவும் அவமானப்படுத்திவிடுகிறார். இதனால் மனம் வருந்தி தன் தாய் சாயாதேவியிடம் முறையிடுகிறார் சனி. "கலங்காதே. சிங்கத்துக்கு நேரம் கெட்டால் நரி கூட நீதிபதியாகும். இது இயற்கை. அதனால் நீ யமனை வெற்றி பெற பைரவரை வணங்கு. எல்லாம் நன்மையாக அமையும்." என்றாள். தாய் கூறியது போல் சனிபகவான் பைரவரை வணங்கினார். பைரவரின் ஆசியை பரிபூரணமாக பெற்ற பிறகு யமதர்மராஜானே சனி பகவானை பார்த்து மரியாதை செலுத்தும் படியாக உயர்ந்தார். 

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். மேலும் பிரம்ம, விஷ்ணு, சிவன் உட்பட மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார். அதன்படி சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்யவேண்டும் என்பதாகும். இதன் பிறகு சில காலம் கழித்து ஈஸ்வரரை பிடிக்க முயன்ற சனி, சனிஸ்வர பட்டமும் பெற்றார். பைரவரை தன் நண்பராகவும் குருவாகவும் மதித்தார் சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே. 

ஜோதிடத்தில் காலபைரவர்

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்புத் துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாகத் திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம்.  சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.

கால புருஷனுக்கு எட்டாம் பாவமான விருச்சிகம் ஆயுள், மறைந்திருக்கும் எதிரி, பரம்பரை நோய் ஆகியவற்றை குறிக்கும்.  நீர் ராசியான விருச்சிகம் விஷஜெந்துக்கள் நிறைந்த கடலை குறிப்பதால் இது மருத்துவம், மருந்துகள், விஷம், ரத்தத்தில் கண்டுபிடிக்க முடியாத வியாதிகள்,  புற்றுநோய் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை குறிக்குமிடமாகும். கால பைரவ மூர்த்தி காலனை வென்றவர். மேலும் ஜோதிடத்தில் ஆயுள் காரகர் எனும் சனைஸ்வர பகவானுக்கே குருவானதால் பைரவரை வணங்குவோர்க்கு எமபயம் இருக்காது.  மேலும் காலபைரவர் நாகபரணம் பூண்டு விளங்குவதால் அவரை வணங்குவோர்களுக்கு விஷ ஜெந்துக்கள் மற்றும் நோய்களால் உபாதைகள் ஏற்படாது.

காலபுருஷ தத்துவம்

ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புண்ணியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்கப் போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

கால புருஷ தத்துவம் என்பது ஜோதிட கலையில் பொதுவான ராசி அமைப்பைப் பற்றி சொல்வது , இதன்படி மேஷம் முதல் வீடாகவும் , மீனம் 12 ம் வீடாகவும்

அமையும் , சுய ஜாதக அமைப்பிற்கு பலன் காணும்பொழுது , இந்த காலபுருஷ தத்துவ ராசிகளுடன் தொடர்புப் படுத்தி பலன் காண வேண்டும் அப்பொழுதுதான் பலன் 100 சதவிகிதம் சரியாக இருக்கும்.

காலபுருஷனும் கால பைரவரும்

சிவ ஸ்வருபமான கால பைரவரை ”மஹா கால’ என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ என்றும் ஸ்ரீ ருத்ரம் எனும்  மந்திரம் போற்றுகிறது. அதாவது பைரவ மூர்த்தியே மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவர், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும். அவரது அருளால் மீண்டும் மறுசுழற்சியில் ஜீவன் உருவாகிறது. அதாவது கால பைரவர் குணத்தையும் காலத்தையும் கடந்தவர். அவர் காலத்திற்கு கட்டுப்படாத தன்மையால் அவரை கால பைரவர் என வேதம் போற்றுகிறது.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும்,  தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கால புருஷ சக்கரம்

பூமி 360 சுழற்சி பாகையில் தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதால், ஜோதிடம் பற்றிய அனைத்து முக்கிய விதிகளும் பூமியின் சுழற்சியால் உருவாகும் 'கால புருஷ சக்கரம்' என்ற தத்துவம் கொண்டு வரையறுக்கப்பட்டது. இந்த கால புருஷ சக்கரம் என்பது பூமி சுற்றி வரும் வட்டப்பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கொண்டு வரையறுக்கப்பட்டது. நட்சத்திர கூட்டங்களை 12 ராசி மண்டலங்களாக பிரித்து அதில் சஞ்சரிக்கும் கிரகங்களைக் கொண்டு ஜோதிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

புதன் கிழமை தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதாரம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார் . இவரை வணங்கி தனக்கு அருளும் ,ஆசியும் வேண்டும் என்று ஆயுளை  அழிவில்லா பொருளை, ஆன்ம சாந்தியை, தரும் சனி தேவர் பணிந்தார். ஜோதிடத்தில் சனியும் புதனும் நண்பர்கள் என்றும் புதன் கிழமை வரும் அஷ்டமி அன்று செய்யும் காரியங்கள் அனைத்தும் மேன்மை தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ஜாதகத்தில் செவ்வாயின் நக்ஷத்திரங்கள் புதனின் வீடுகளிலும் சனியின் வீடுகளிலும் வருவது குறிப்பிடத்தக்கது. மிதுனம் கால புருஷனுக்கு மூன்றாம் பாவமாகும். மூன்றாம் பாவம் என்பது தைரியம் மற்றும் செய்யும் முயற்சியினை குறிக்குமிடமாகும். மூன்றாம் பாவம் என்பது பாவாத்பாவபடி எட்டுக்கு எட்டாமிடமாகும். எனவே மூன்றாம் பாவம் என்பது தீவிரமான பிரச்சனைகளை குறிக்குமிடமாகும். புதனின் மற்றொரு வீடான கன்னி கால புருஷனுக்கு ஆறாம் பாவமாக வருகிறது. ஆறாம் பாவம் என்பது நோய், கடன், சத்ரு ஆகியவற்றி குறிக்குமிடம் ஆகும்.

நான்கு வேதங்களும் நாய் உருவில் வாகனமாக பைரவருக்கு அமைந்திருப்பதால் கல்வியில் ஏற்படும்  தடையை நீக்கி இடைவிடாது தொடரும் கல்வி யோகத்தைத் தருபவர் என்பது நம்பிக்கை. செவ்வாயின் காரகத்தை தன்னுள்ளே கொண்ட பைரவர் சிவபெருமானின் அம்சம் மற்றும் ஸ்வரூபம் என்பதால் சூரியன் மற்றும் தக்‌ஷிணாமூர்த்தியின் காரகத்தையும் கொண்டிருக்கின்றார்.

ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்சனைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர்க் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.

ஜோதிடத்தில் ஹஸ்த நக்ஷத்திரம்

27 நட்சத்திரங்களில் பதினேழாவது நக்ஷத்திரமாக வருவது அனுஷம் ஆகும். இது கால புருஷ இராசியான மேஷத்திற்கு எட்டாம் இராசி மற்றும் செவ்வாயின் ஆட்சி வீடாகிய விருச்சிக இராசியில் இடம் பெறும் நட்சத்திரமாகும். இதன் நக்ஷத்திராதிபதி செவ்வாய்  பகவான் ஆவார். அனுஷ  நக்ஷத்திரத்தின் அதிதேவதை 12 ஆதித்தர்களில் ஒருவராகிய மித்ரா எனும் மித்ரன் என நக்ஷத்திர சிந்தாமணியும் மற்றும் நக்ஷத்திர சூக்தமும் லக்ஷ்மி என வருஷாதி நூல்களும்  கூறுகிறது.  

சனைச்சர பகவானின் ஆதிக்கம் பெற்ற ஹஸ்த நட்சத்திரம் வானத்தில் ஒரு  மலர்ந்த தாமரை போன்றும் குடை போன்றும் காட்சியளிக்கிறது. சனி பகவானின் இரண்டாவது பெரிய நட்சத்திரம் இது. செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலக்ஷ்மி பிறந்த நட்சத்திரமான இதை, இரண்டு ஆற்றல் மிக்க கிரகங்களான செவ்வாயும் சனியும் ஆள்கின்றன.  ஜாதக அலங்காரம் எனும் நூல்,  இந்த நட்சத்திரத்தில் பிறந்த இவர்கள் குணவானாக,  தாம்பூலப் பிரியர்களாக, பக்தி உள்ளவர்களாக, அரசர்களால் பாராட்டப்படுபவர்களாக, பெண்களுக்கு இனியவர்களாக,  கூந்தல் அழகு, விசால மார்பு ஆகியவை உடையவர்களாக, பெற்றோரைக் காப்பாற்றுபவராக, அனைவராலும் பாராட்டப்படுபவராகவும் உலகம் புகழும் நீதிமானாகவும் இருப்பார்கள் என்று கூறுகிறது. பிருகத் ஜாதகம் எனும் நூல், செல்வந்தராகவும் வெளிநாட்டில் வசிப்பவராகவும் இடைவிடாது பயணம் செய்பவராகவும் விளங்குவார்கள் என்கிறது.

மனுஷ்ய தெய்வமான காஞ்சி மகா பெரியவா ஆன்மீகத்தில் சூரியனைப் போல் பிரகாசித்ததற்க்கு மித்திரனையும் லக்ஷ்மியையும் அதிதேவதையாகக் கொண்ட அனுஷ நக்ஷத்திரமும் ஒரு காரணமாக அமைந்து புகழ் தேடிக்கொண்டது போலும்!

சிதம்பர ரகசியம்

பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகவும் உள்ள சிதம்பரம் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவருமாகவும் அருள்பாலிக்கிறார். சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயில் திரை அகற்றப்பெற்று, ஆரத்தியும் காட்டப்படும். அதற்குள் உருவம் ஏதும் இருக்காது. தங்கத்தால் செய்யப்பட்ட வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். அதாவது, உருவம் ஏதும் இல்லாமல் வில்வதளம் தொங்குவதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கிறார் என்பதாகும். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. அவனை உணர மட்டுமே முடியும் என்பதே அதன் அர்த்தம். சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்குரிய சிவசக்ரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் ஐக்கியமாகி, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, மறைத்து, அழித்து, அருளிக் கொண்டிருப்பதாகவும் ஐதீகம். 

தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமான் அருகிலேயே உள்ளார். இவரை அனுஷ நக்ஷத்திர பைரவராக புராணங்கள் கூறுகிறது. சிதம்பரம் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பைரவர், ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். திகம்பரராக, டமருகம், சூலம், பாசம் மற்றும் கபாலம் ஏந்தியவராக நின்ற கோலத்தில் அருள்கிறார். அருகில், நாய் வாகனமும் உள்ளது. ஸ்ரீதத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைர வரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும். ஐஸ்வரியம் பெருகும் என்பர். 

முற்காலத்தில், தில்லை கோயிலில் சேவை செய்யும் அந்தணர்கள், பூஜை முடிந்ததும் செம்பினால் ஆன தாமரையை பைரவரின் பாதத்தில் வைத்து வணங்கிச் செல்வார்களாம். மறுநாள், ஸ்வாமியைப் பணிந்து அந்த மலரை எடுத்துக் கொள்வர். அது, அவர்களுடைய பணிகளுக்கேற்ப, பொன்னாக மாறியிருக்கும் என்றொரு (செவிவழி) தகவல் உண்டு! இன்றும் தன்னை வணங்கும் அன்பர்களின் மனப்பூர்வமான கோரிக்கைகளை ஏற்று, அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீபைரவமூர்த்தி!

நாளைய கோச்சாரத்தில் தன காரக குரு பகவான் நின்று ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் சகோதரரும் ராஜ கிரஹமும் ஆன சந்திர பகவான் அனுஷத்தில் குருவோடு இணைந்து இருவரும் கால புருஷ தனஸ்தானமான ரிஷப ராசியை பார்க்கும் நிலையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரை வணங்குவது நமது வறுமைகள் யாவும் நீங்கி செல்வ செழிப்பு பெருகிட செய்யும் என்பது நிதர்சனம். 

தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையிலிருந்து விடுதலை அடைய யோக பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையிலிருந்து விடுதலை பெறவும், திருமணம் நடக்கவும் இந்த யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணெய்யில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் விலகும்.  

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்க வல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com