மகேஷ்வராஷ்டமியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!

மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஷ்வராஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மகேஷ்வராஷ்டமியான இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!


மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஷ்வராஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும் இதனை காலாஷ்டமி என்றும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. இன்று முழுவதும் அஷ்டமி திதி உள்ள நிலையில் பைரவ வழிபாடு செய்வது சிறந்தது என சாஸ்திரங்கள் கூறுகிறது. 

செவ்வாய்க்கிழமையும் அஷ்டமியும் அனுஷ நக்ஷத்திரமும் இணைந்து வரும் மைத்ர முகூர்த்த நாளில் சனைச்சர பகவானின் குருவான பைரவர் அபய கரம் காட்டி அனைத்து பிரச்னைகளில் இருந்தும் விடுவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப்பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் விருச்சிகமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

இன்றைய கோச்சாரத்தில் தனகாரக குரு பகவான் நின்று ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் சகோதரரும் ராஜ கிரஹமும் ஆன சந்திர பகவான் அனுஷத்தில் குருவோடு இணைந்து இருவரும் கால புருஷ தனஸ்தானமான ரிஷப ராசியைப் பார்க்கும் நிலையில் ஸ்ரீ சொர்ணாகர்ஷன பைரவரை வணங்குவது நமது வறுமைகள் யாவும் நீங்கி செல்வச் செழிப்பு பெருகிட செய்யும் என்பது நிதர்சனம்.

தேய்பிறை, அஷ்டமி திதிகளில் யோக பைரவருக்கு வடைமாலை அணிவித்தால், வேண்டியது உடனே நடக்கும். சத்ரு தொல்லையிலிருந்து விடுதலை அடைய யோக பைரவரை வணங்கினால் நன்மை ஏற்படும். பில்லி சூனியம் கஷ்டங்கள் விலக விரோதிகளின் தொல்லையிலிருந்து விடுதலை பெறவும், திருமணம் நடக்கவும் இந்த யோக பைரவரை வணங்கினால் எல்லாமே வெற்றியாக அமையும். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி நல்லெண்ணெய்யில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். 

பைரவ உபாசனை வீரம் அளிக்க வல்லது. தீராத நோய்களைத் தீர்க்கும். போர்முனையில் வெற்றியினைத் தேடித் தரும். எல்லாவிதமான சத்ருக்களையும் நீக்கி மங்களம் அளிக்கவல்லது. பக்தர்களுக்கு வரும் பகையை அழித்து, உள்ளார்ந்த பயத்தைப் போக்கிக் காப்பவர் பைரவர். மனிதனின் நிம்மதியைப் பாதிப்பவை கடன், வியாதி, எதிரி தரும் துன்பம் இவற்றை முற்றிலும் நீக்கி சந்தோஷத்தை அளிப்பவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com