
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி சென்னையில் உள்ள முக்கிய கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை புத்தாண்டு வழிபாட்டுக்கு பக்தர்கள் திரண்டிருந்தனர். அதிகாலை 4 மணி முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்ட கோயில் நிர்வாகம் இலவசமாக துணிப்பைகளைக் கொடுத்தது. கோயில் வளாகத்தில் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிளாஸ்டிக்கின் தீமைகளை விளக்கி விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
மயிலாப்பூர் முண்டகக் கண்ணியம்மன் கோயில், அஷ்ட லட்சுமி கோயில், வடபழனி முருகன் கோயில், தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதலே ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் குவிந்தனர். புத்தாண்டு பிறந்ததும் கடற்கரையில் கூடியிருந்தவர்கள் "ஹேப்பி நியூ இயர்' என்று கூட்டாக உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பட்டாசுகளை வெடித்தும், பலூன்களைப் பறக்க விட்டும், கேக் வெட்டியும் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை முற்பகல் வரை தொடர்ந்தது.
இதேபோன்று வேளச்சேரி, ராயப்பேட்டை, வடபழனி என முக்கிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், மயிலாப்பூர் லஸ் சர்ச், ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், பிராட்வே புனித அந்தோணியார் ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் புத்தாண்டு வழிபாடும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றன.
ஆலயங்களுக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.