புதிது என்றாலே உற்சாகம் தானே!

புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், எனப் புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம்.


புதிது என்றாலே உற்சாகம்தான், புது உடை, புது உறவுகள், எனப் புதிது கிடைத்தாலே உற்சாகம் அடைகிறது மனம். அதுபோலத்தான் 12 மாதங்கள் முடிந்து புதிதாய் ஒரு ஆண்டு பிறக்க தொடங்கினாலே அனைவருமே அதைக் கொண்டாட தொடங்கிவிடுகின்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி தொடங்கி இரண்டு வாரங்களுக்காவது உறவினர்கள், நண்பர்களிடையே புத்தாண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். இத்தனை மகிழ்ச்சி தரும் இந்த ஆங்கில புத்தாண்டு பிறந்தது எங்கு, எப்போது, யாரால் உருவானது என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.      

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் துவங்குகிறதா? அல்லது சித்திரை மாதம் துவங்குகிறதா? என்ற விவாதம் அனைத்து இடங்களிலும் நடப்பதைக் கண்டு வருகிறோம். அதே நேரம் ஆங்கிலப் புத்தாண்டு என்றால் அது ஜனவரி மாதம் முதல் தேதி என்று அனைவரும் எந்தப் பேதமும் இன்றிக் கொண்டாடுகிறோம்.

எல்லையற்ற காலம். ஆயினும் உலகில் வாழும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டு வாழ வேண்டியுள்ளது. அதற்காகவே காலக் கணக்கீடுகள் உருவாக்கப்பட்டன. அதன் படி பாரத காலக் கணக்கீடு. காலத்தைக் கணக்கிடும் முறைகள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியதற்கு இந்தியாவின் பண்டைய இலக்கியமான வேதங்களில் சான்றுகள் உள்ளன. இந்தியாவில் காலத்தை கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு, அயனம், ருது, மாதம், வாரம், நாள், மணி, நாழிகை, விநாடி என்று பல கூறுகளாக நமது முன்னோர் வகுத்திருந்தனர்.

நாடு நெடுக்கிலும் இப்போதும் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கத்தின் வயது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஞ்சாங்கமே நமது நாட்டில் நாள்காட்டியாக இருந்து  வந்துள்ளது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே வாய்மொழி மனன [செவி வழி] முறையில் பஞ்சாங்கத் தகவல்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது பாரதத்தின் புராண வரலாறு ஆகும். 

பாபிலோனில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

பாபிலோன் நாட்டில் கி.மு 2000-மாவது ஆண்டில் வசந்த காலத்தின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாகப் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இலையுதிர்காலம் முடிந்து பூமியில் புதிய இலைகள் பசுமையை மலரச்செய்யும் வசந்தத்தை வரவேற்கும் விதமாக பாபிலோனிய மக்கள் 11 நாட்கள் புத்தாண்டினை கொண்டாடி மகிழ்வார்களாம்   

ரோமானியர்களின்  நாட்காட்டி

ரோமப் பேரரசு காலத்தையே ரோமன் காலண்டரின் துவக்கம் கி.மு. 700 மட்டுமே. அதற்குப்பின் ஜூலியஸ் சீஸரால் சீர்திருத்தப்பட்ட ஜூலியன் காலண்டரின் துவக்க ஆண்டு கி.மு.45 அதற்கு இணையான விக்கிரமாதித்திய சகாப்தம் (கி.மு. 57), சாலிவாகன சகாப்தம் (கி.பி. 78) போன்றவை இந்தியாவிலும் இருந்துள்ளன. இந்து வானவியலின்படி கலியுகம் துவங்கி இதுவரை 5,116 ஆண்டுகள் (கி.மு. 3102) ஆகியுள்ளதாக நமது பஞ்சாங்கங்கள் கூறுகின்றன.

கிரிகோரியன் காலண்டர் பிறப்பு  

1582-இல் கத்தோலிக்க மதகுருவாக இருந்த போப் 13-வது கிரிகோரியால் அறிமுகப்படுத்தப்பட்டதே தற்போது வழக்கத்தில் உள்ள ஆங்கில நாள்காட்டி ஆகும். அவரது பெயரே புதிய காலண்டருக்கு சூட்டப்பட்டது.

இதனை வடிவமைத்தவர் ஜெர்மனியைச் சேர்ந்த ஜெசூட் பாதிரியாரான வானியல் மேதை கிறிஸ்டோபர் கிளாவியஸ். இதில் தான் ஜனவரி 1 முதல் துவங்கும் தற்போதைய நாள்காட்டி முறை அறிமுகமானது.

உலகளவில்

ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது கிரிகேரியன் நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகளும் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றுக்கு இந்த  நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.

இந்த கிரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிக்கர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிக்கக் குழுக்களாலேயே  நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.

இயேசு கிறிஸ்துவிற்கு பின், கிறிஸ்தவர்களால் புத்தாண்டிற்கு ஒரு பொலிவு ஏற்பட்டது. கிருஸ்துமஸ், புனித வெள்ளி, ஈஸ்டர் என வரிசையாக விழாக்கள் வருவதை ஒட்டி கிருஸ்துவ பெருமக்கள் புத்தாண்டினை உற்சாகமாக கொண்டாடத் தொடங்கினர். அன்றைய தினம் தேவாலயத்திற்குச் சென்று பாடல்களைப் பாடி பிரார்த்தனைகள் செய்கின்றனர். இன்றைக்கு உலக மக்கள் அனைவருமே மொழி, இன, மத பாகுபாடு இன்றி, ஜனவரி 1-ம் தேதியைப் புத்தாண்டு தினமாகக் கருதி, உற்சாகத்தோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் கதிரவன் மறைந்து மீண்டும் உதிக்கும் போது உருவாகும் ஒவ்வொரு நாளும் நமக்கு புதிய நாளே. உண்மையில், நமது காலம் ஒவ்வொரு நாளும் கழிவதைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறது நாள்காட்டி. எனவே, வரும் நாட்களை வாழும் நாட்களை மதிப்புள்ளதாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். அதனை நிறைவாக ஏற்றுக்கொண்டு புத்தாண்டை வரவேற்போம்.  

- குடந்தை.ப.சரவணன் (9443171383)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com