
மகத்துவம் நிறைந்த மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் மூல நட்சத்திரமும் சேர்ந்த நாளை ஸ்ரீ அனுமத்ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். இந்த ஆஞ்சனேய ஜெயந்தி நாளில் அனைத்து ஆஞ்சனேயர் சன்னதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதோடு ஆஞ்சனேயர் பக்தர்கள் சாற்றும் வடை மாலையைத் தாங்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அந்த வடைமாலையின் ரகசியம்தான் என்ன? அதற்குக் காஞ்சி பெரியவர் கூறிய விளக்கங்களை தெரிந்துகொள்ள புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்துகிறோம் தெரியுமா?
ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்வி இழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார். ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்துவிட்டார்.
“ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…” இழுத்தார் அன்பர்.
“வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்” என்றார் ஸ்வாமிகள்.
“ஸ்வாமி.. ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார். எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள். ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மௌனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார். "அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமான மிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள். ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலை சாற்றுகிறார்கள். ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது?” பதிலுக்காக மஹா பெரியவாளையே பார்த்துக்கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு, பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.
கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்குக் கூடி இருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார்.
“பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்து, ‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவைச் சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவைச் சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும். உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு நிலா விளையாட்டுப்பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது. அதுவும் எப்படி? பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனை அடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது அனுமனுக்கு.
அனுமன் கைக்குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்தபோது வானத்தில் செக்கச்செவேல் என்று ஒரு பழம் போல் ‘ஜிவுஜிவு’ என்று தோற்றமளித்த சூரியன், அவரை மிகவும் கவர்ந்து விட்டது. மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து விட்டார் அனுமன். வாயுபுத்திரன் அல்லவா? அடுத்த கணமே அது தன் கையில் வந்து விட வேண்டும் என்று விரும்பினார். வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப்பிடித்து கிரஹண காலத்தை உண்டு பண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப்பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப்போனார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ, அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். இந்த உணவுப்பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைத்தான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்குச் சமர்ப்பிக்கிறோம். ஆக, ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகிவிடும் என்பது இதில் இருந்து தெரிகிறது.
இப்போது மிளகு வடை மற்றும் ஜாங்கிரி விஷயத்துக்கு வருகிறேன். வடையாகட்டும்… ஜாங்கிரி ஆகட்டும். இரண்டுமே உளுந்தினால் செய்யப்பட்டவை தான். தென்னிந்தியாவில் இருப்பவர்கள் அனுமனுக்கு உளுந்து வடை மாலை சாற்றுகிறார்கள். இங்கே உப்பளங்கள் அதிகம் உள்ளன. இங்கிருந்து பல வெளி நாடுகளுக்கும் உப்பு அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. ஆகவே, உப்பும் உளுந்தும் கலந்து கூடவே மிளகும் சேர்த்து பாம்பின் உடல் போல் மாலையாகத் தயாரித்து, அனுமனுக்குச் சார்த்தி வழிபடும் வழக்கம் நம்மூரில் அதிகம் உண்டு. வட இந்தியாவில் பல மாநிலங்களில் கரும்பு விளைச்சல் அமோகமாக இருக்கிறது. சர்க்கரை பெருமளவில் அங்கு உற்பத்தி ஆகி, வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி ஆகிறது.
தவிர, வட இந்தியர்கள் இனிப்புப் பண்டங்களை அதிகம் விரும்பிச் சாப்பிடுபவர்கள். அதுவும், அவர்களுக்குக் காலை நேரத்திலேயே, அதாவது பிரேக் ஃபாஸ்ட் வேளையில் இனிப்புப் பண்டங்களையும் ரெகுலர் டிஃபனோடு சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் இனிப்பு விரும்பிகள். எனவேதான், அவர்கள் உளுந்தினால் ஆன ஜாங்கிரி மாலையை அனுமனுக்குச் சார்த்தி வழிபடுகிறார்கள். எது எப்படியோ… அனுமனிடம் ராகு பகவான் கேட்டுக் கொண்டபடி உளுந்து மாலைகள். அனுமனுக்கு விழுந்து கொண்டே இருக்கின்றன. அது உப்பாக இருந்தால் என்ன… சர்க்கரையாக இருந்தால் என்ன.. மாலை சார்த்தி வழிபடும். பக்தர்களுக்கு ராகு தோஷம் தொலைந்து போனால் சரி” என்று சொல்லி விட்டு, இடி இடியெனச் சிரித்தார் மஹா பெரியவா.
பெரியவாளின் விளக்கமான இந்த பதிலைக் கேட்ட வட நாட்டு அன்பர் முகத்தில் பரவசம். சடாரென மகானின் திருப்பாதங்களுக்கு ஒரு நமஸ்காரம் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். கூடி இருந்த அநேக பக்தர்களும் பெரியவாளின் விளக்கத்தால் நெகிழ்ந்து போனார்கள்.
ராகு-கேது அம்சங்கள்
ராகு-கேது இருவரும் அவர்கள் எந்தக் கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்தக் கிரகத்தின் தன்மையைப் பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்தக் கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பலாபலன்களை தருவார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள்.
இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களத்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு தரும் ராகு-கேது
'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்று முன்னோர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள், 'உத்தியோகம் புருஷ லட்சணம்' என்பதற்காக, 'உள்ளூரில் பணம் சம்பாதிக்க முடியாமல் போனால், கடல் கடந்து வெளிநாடு சென்றாவது பணத்தைச் சம்பாதி' என்பதுதான். ஆனால், எல்லோருக்குமே வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கும் யோகம் இருப்பதில்லை. ஒருவர் வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கவேண்டும் என்றால், அதற்கு உரிய ஜாதக அமைப்பு பெற்று கோச்சாரத்தில் ராகு-கேது தொடர்பு ஏற்படும்போது வெளிநாட்டு வாய்ப்பு ஏற்படும்.
வெளிநாட்டில் வேலை செய்யும் கிரஹ அமைப்பு யாருக்கு?
ஒருவர் வெளிநாடு செல்லவேண்டும் என்றால் முதலில் அவருடைய லக்னம்/ராசி சர ராசி+நீர் ராசியாக அல்லது சர ராசி+காற்று ராசியாக இருக்க வேண்டும். சர ராசி மற்றும் நீர் ராசியான கடகத்தை லக்னமாகவோ சந்திர ராசியாகவோ கொண்டவர்களுக்கும் சர ராசி மற்றும் காற்று ராசியான துலா ராசியை லக்னமாகவோ சந்திர ராசியாகவோ கொண்டவர்களுக்கும் வெளிநாட்டுப் பயணம் எளிதில் அமை
ந்துவிடும். அப்படியென்றால் மற்றவர்களுக்கு வாய்ப்பு இல்லையா எனக் கேட்டால், கண்டிப்பாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் கடக துலா ராசிக்காரர்களுக்கு சற்று வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் குறிப்பிட விரும்புகிறேன்.
ஒருவருக்கு ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் இருந்துவிட்டாலும் தற்போது விசா கிடைப்பதில் உள்ள நெருக்கடி பலருக்கும் வெளிநாடு செல்ல தடை ஏற்படுத்திவிடுகிறது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் காலை வேலையில் சென்று பார்த்தால் விசாவிற்காக எவ்வளவு பேர் காத்திருக்கி|றார்கள் என்பது விசா கிடைப்பது எவ்வளவு பிரச்னை என்பதும் நன்கு உணர முடியும். இப்படி விசா கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் நீங்கி விரும்பும் நாட்டிற்கு விரைவில் செல்ல வேண்டும் என்றால் வாயு மைந்தனுக்கு வடைமாலை சாற்றி வழிபடுவதுதான் சிறந்த வழி!
யாரெல்லாம் ஆஞ்சனேயரை வடைமாலை சாற்றி வழிபட வேண்டும்?
1. ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமையப் பெற்றவர்கள்.
2. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமையப் பெற்றவர்கள்.
3. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்.
4. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்.
5. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்.
6. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள் மற்றும் களத்திர காரகன் சுக்கிரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்.
7. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்.
8. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்.
9. ஜெனன ஜாதகத்தில் கர்மகாரகன் சனைச்சர பகவானுடன் ராகு/கேது சேர்க்கை பெற்று நிரந்தர வேலை அமையப்பெறாதவர்கள்.
10. ஜெனன ஜாதகத்தில் கர்மகாரகன் சனைச்சர பகவானுக்கு முன் ராகு நின்று தனது பணியில் மேலதிகாரிகளால் அவஸ்தைபடுபவர்கள் மற்றும் கேது நின்று உடன் பணிபுரிபவர்களால் பெரும் துன்பத்திற்கு ஆளானவர்கள்.
11. ஜெனன ஜாதகத்தில் கர்ம காரகன் சனைச்சர பகவானுடன் செவ்வாய் சேர்க்கை பெற்று அடிக்கடி வேலையை விட்டுவிடுபவர்கள்.
வடைமாலை எப்போது சாற்றி வழிபட வேண்டும்?
காற்று ராசியாகிய கும்பத்தின் அதிபதி மற்றும் வாயு கிரஹமாகிய சனியின் நாளில் ராகு கால நேரத்தில் வாயு மைந்தனாகிய ஆஞ்சனேயருக்கு ராகுவின் தானியமான உளுந்தில் செய்த வடையை மகாபெரியவர் கூறியதுபோல் மாலையாகக் கட்டி சாற்றி வணங்கிவர வெளிநாடு செல்வதில் உள்ள பிரச்னைகள் நீங்கிவிடும் என்பது திண்ணம். வடைமாலை சாற்றமுடியாத நேரத்தில் உளுந்தில் செய்த ஜாங்கிரியை நிவேதனம் செய்து அனைவருக்கும் அளித்துவர அதே பலன் கிடைக்கும். இது ஒரு அனுபவ பூர்வமான சூக்ஷ்ம வழிபாடாகும். இந்த ஆண்டு ஆஞ்சனேய ஜெயந்தியே சனிக்கிழமையில் அமைந்திருப்பது வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.