காவடியின் தத்துவம் தெரியுமா? 

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு (பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும்..
காவடியின் தத்துவம் தெரியுமா? 
Updated on
2 min read

கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் முருகன். அஞ்சு (பயம்) முகம் தோன்றில் ஆறு முகம் தோன்றும் என்று சொல் வழக்கும் உண்டு. ஆறுமுகனுக்கு வேண்டிக்கொள்ளப்படும் பிரார்த்தனைகளில் காவடி எடுப்பது விசேஷமான ஒன்றாகும். காவடி எடுப்பதற்கும் காரணமும் இருக்கிறது. 

மிகுந்த பக்திமானான இடும்பன், சூரபத்மனுக்கு போர்க்கலையை போதிக்கும் ஆசானாக இருந்தான். ஆனால் சூரபத்மன் அநேக கொடுமைகள் புரியவே அவனை விட்டகன்று அகத்தியரிடம் வந்து சேர்ந்தான். 

அகத்தியர் பொதிகை மலைக்கு வந்து தங்கிய பொழுது தன் சிஷ்யனான இடும்பனை அழைத்தார். தன்னுடைய வழிபாட்டிற்காக, கயிலையில் சிவ சக்தி ஸ்வரூபமாக விளங்கும் கந்தனுக்குரிய சிவகிரி, சக்திகிரி எனப்படும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார். 

அகத்தியரின் கட்டளையை சிரமேற்கொண்டு இடும்பன் கயிலாய மலைக்குச் சென்றான். அவர் குறிப்பிட்ட சிவகிரி சக்திகிரி இரண்டையும் தூக்கியெடுத்து காவடி போல் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு பயணிக்கலானான். 

ஆனால் முருகப்பெருமானின் விருப்பமோ வேறுவிதமாக இருந்தது. அவ்விரு சிகரங்களும் திருவாவினன்குடியில் நிலைப்பெற்று இருக்க வேண்டும் என்பதற்காக அவர் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். 

இடும்பன் தான் வந்த பாதை தடம் தெரியாமல் தயங்கிய சமயம், வேலனானவன் ஒரு அரசனைப்போல் வேடம் கொண்டு, குதிரையின் மீது பவனி வந்தார். எதிரில் வந்த இடும்பனைப் பார்த்து, திருவாவினன்குடிக்கு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு பயணத்தைத் தொடரும்படி பணித்தார்.  

அரச கட்டளை என்று ஏற்ற இடும்பன், இரு சிகரங்களையும் கீழே வைத்துவிட்டு சற்று ஓய்வெடுத்துக் கொண்டான். கிளம்ப வேண்டிய தருணம் வந்தவுடன், தான் இறக்கி வைத்த சிகரங்களைத் தூக்க முற்பட்டான். ஆனால் அவையிரண்டும் அசைந்து கூடக்கொடுக்கவில்லை. 

தன் குருபக்திக்குக் களங்கம் வந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டான். அப்பொழுது சிவகிரியின் மேல் ஒரு சிறு பாலகன் கோவணத்துடன் நிற்பதைக் கண்டான். பாலகனை சிகரத்திலிருந்து இறங்கி விடும்படி இறைஞ்சினான். ஆனால் பாலகன் அச்சிகரம் தனக்குண்டானது என்று கூறி இறங்கி வர மறுத்து விட்டான். எத்தனை கெஞ்சியும் பாலகன் இடும்பனுக்கு பணிய மறுத்து விட்டான். 

இடும்பனுக்கு அளவிடமுடியாத கோபம் உண்டானது அதனால் அச்சிறுவனைத் தாக்க முற்பட்டான். ஆனால் முற்பட்ட கணமே வேரற்ற மரம் போல் பூமியில் சாய்ந்தான். சிஷ்யன் வராததைக் கண்ட அகத்தியர், ஞான திருஷ்டியில் நடந்ததை அறிந்து கொண்டார். தன் சீடனைக் காக்கும்படி முருகப்பெருமானிடத்தில் வேண்டி நின்றார். அழகனும் இடும்பனின் பக்தியை மெச்சி அருளாசி புரிந்தார். மேலும் அவனை, தன் காவல் தெய்வமாக அமர்த்திக் கொண்டார். இடும்பனைப் போல் காவடி எடுத்து வரும் பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதாகவும் அருள் வாக்கினை அளித்தார் அதன் பிறகுதான் முருகப்பெருமானுக்குக் காவடி எடுக்கும் பழக்கம் புழக்கத்தில் வந்தது. 

பழனி மலைப்பாதையின் தொடக்கதிலேயே தனியாக ஒரு பாதை செல்கிறது. அதில் சென்றால் காவடி தூக்கிவரும் இடும்பன் சிற்பமும், அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம், வடிவேலர் சந்நிதியும் இருக்கிறது. இவையே தாத்பர்யத்தை விளக்கும் ஆதாரக் கதையாக அமைகிறது. 

ஞானப்பண்டிதனுக்கு என்னென்ன காவடிகள் எடுக்கப்படுகின்றன? பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி (முருகனுக்கு பூ மிதித்தல்), சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, இளநீர் காவடி, வேல் காவடி (அலகு குத்திக் கொள்ளுதல்), கரும்புத் தூளி காவடி (தவம் இருந்து குழந்தை பெற்றல்) போன்றவையாகும். 

பக்தர்களுக்கு அருள் புரிவதற்காகவே பகவான் அர்ச்சாவதாரியாக எழுந்தருளி உள்ளான். மனமாகிய குகையில் இருக்கும் குகனை நித்தமும் தொழுது, அவன் தொண்டாற்றி பேரின்பம் பெறுவோம். 

ஸ்ரீ சுப்ரமண்ய காயத்ரி 

தத் புருஷாய வித்மஹே 
மஹா சேனாய தீமஹி 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத். 

- மாலதி சந்திரசேகரன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com