சகல சௌபாக்கியங்களும் அருளும் கூரத்தாழ்வார் சாற்றுமுறை வைபவம்!

ஸ்ரீமத் ராமானுஜர் திருவரங்க கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்த முற்பட்டபோது, கோயில் சாவிகள் திருவரங்கத்தமுதனாரிடம் இருந்தன. ரஜோ
சகல சௌபாக்கியங்களும் அருளும் கூரத்தாழ்வார் சாற்றுமுறை வைபவம்!
Published on
Updated on
3 min read

கூரத்தாழ்வான் சௌம்ய ஆண்டு தை மாதம் - 1009-ஆம் ஆண்டு - ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த ஆண்டுக்கான அவரது திருஅவதார நட்சத்திரம் வரும் சனிக்கிழமை (26.1.19) அன்று வருவதால், அவர் அவதரித்த கூரம் என்கிற சிற்றூரில் சாற்றுமுறை சம்பிரதாயமாகக் கொண்டாடப்படுகிறது.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான கூரத்தாழ்வார், இராமானுஜரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் பிறந்து வாழ்ந்தவர். இவரது மனைவியின் பெயர் ஆண்டாள். ஞானத்தில் சிறந்தவர். பாரதத்தின் பிறப்பகுதியான காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய் செய்துவந்தவர் கூரத்தாழ்வார். 

இராமாநுச நூற்றந்தாதி - 7
மொழியைக்கடக்கும் பெரும்புகழான்* வஞ்சமுக்குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்*
பழியைக்கடத்து மிராமாநுசன் புகழ்பாடி அல்லா
வழியைக்கடத்தல்* எனக்கினி யாதும் வருத்தமன்றே

வாய்கொண்டு வருணிக்க முடியாதபடி வாசாமகோசரமான, பெரிய புகழையுடையவரும், கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு, குலச்செருக்கு என்னும் மூவகைக் குறும்புகளாகிற படுகுழியைக் கடந்திருப்பவரும், நமக்கு நாதருமான, கூரத்தாழ்வானுடைய திருவடிகளை நான் ஆச்ரயித்த பின்பு ஸர்வபாப நிவர்த்தகரான எம்பெருமானாருடைய நற்குணங்களைப்பாடி ஸ்வரூபத்திற்குச் சேராத தீயவழிகளைத் தப்பிப் பிழைக்கயானது ஸ்வரூபத்திற்குச் சேராத தீயவழிகளைத் தப்பிப் பிழைக்கயானது இனிமேலுள்ள காலமெல்லாம் ஈஷத்தும் ப்ராயஸ ஸாத்யமன்றுல் [எளிதேயாம்].

ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் - லட்சுமிதேவியான பெருந்தேவித் தாயார் கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட, அவர்கள் உரையாடியதைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சி தன்னுடைய பெருத்த செல்வங்கள் அனைத்தும் அறச்செயல்களுக்கு தானமாக வழங்கி, தன் குருவாகிய இராமானுஜரிடம் அடிப்பணிந்தார். கூரத்தாழ்வார், இராமானுஜரைவிட 8 வயது மூத்தவர். வியாசப்பட்டர், பராசரப்பட்டர் எனும் இவருடைய இரண்டு திருக்குமாரர்களில் பராசரப்பட்டர் பிற்காலத்தில் புகழ்பெற்ற வைணவ ஆச்சாரியனாகி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு இன்றும் புகழப்படும்படியான ஓர் உரை எழுதியுள்ளார். புகழ்ப்பெற்ற இராமானுச நூற்றந்தாதி இயற்றிய திருவரங்கத்தமுதனார் கூரத்தாழ்வாரின் மாணாக்கருள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவரங்கத்தில் இருந்த இராமானுஜருக்கு சீடராகும் பொருட்டு, கூரத்திலிருந்து தன் மனைவியை அழைத்துக்கொண்டு திருவரங்கம் செல்லும் வழியில் காட்டில் திருடர் பற்றிய அச்சத்தில் வர, மனையாளை நோக்கி "மடியில் கனம் இருந்தாலன்றோ வழியில் பயம். ஏதாவது வைத்திருக்கிறாயா" என்றார். அதற்கு சிறுவயது முதலே கூரத்தாழ்வார் உண்பதற்கு பயன்படுத்திய தங்கவட்டிலை தங்களுக்காக (கூரத்தாழ்வாருக்காக) பயன்படுத்துவதற்கு வைத்திருப்பதாகச் சொல்லவே அதனை வாங்கி விட்டெறிந்துவிட்டுச் சென்றாராம்.

திருவரங்கத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வார் தம்பதியர், ஒருநாள் உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்க நேர்ந்தது. மனைவி ஆண்டாள் இறைவன் அரங்கநாதனிடம் வேண்டிட, அரங்கநாதன் கோயில் ஊழியர்கள் மூலம் உணவு தந்தருளினாராம்.

நாலூரான் என்னும் அமைச்சரின் தந்திரத்தால் மதியிழந்த உறையூர்ச் சோழன், இராமானுஜரை கைது செய்ய ஆணையிட்டான். கூரத்தாழ்வார் தம் குருவைப்போல் வேடம் தரித்துக்கொண்டு அரசனிடம் செல்ல, முடிவில் அரசன் ஆணையால் கூரத்தாழ்வாரின் கண்கள் தோண்டப்பட்டன. 12 ஆண்டுகள் இதே நிலையிலேயே திருமாலிருஞ்சோலை மலையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.

ஸ்ரீ அதிமாநுஷ ஸ்தவம், சுந்தரபாஹூ ஸ்தவம், வரதராஜ ஸ்தவம், வைகுண்ட ஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம், தாடீபஞ்சகம் மற்றும் ப்ரார்தனபஞ்சகம் என ஏழு வடமொழி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவரின் உதவியினாலேயே எத்திராஜர் என்று அழைக்கப்படும் இராமானுஜர், தன் குருவாகிய ஆளவந்தாருக்கு செய்துகொடுத்த மூன்று சபதங்களை நிறைவேற்றினார். அன்னமிடுவதோடு நில்லாது, தன் குரு இராமானுஜருக்காகவும் வைணவத்திற்காகவும் தன் இரு கண்களையும் இழந்தார்.

ஸ்ரீமத் ராமானுஜர் திருவரங்க கோயில் வழிபாட்டு முறையினை ஒழுங்குபடுத்த முற்பட்டபோது, கோயில் சாவிகள் திருவரங்கத்தமுதனாரிடம் இருந்தன. ரஜோ குணத்தவரான திருவரங்கத்தமுதனார் யாருக்கும் கீழ்ப்படியாதவராய்,ராமானுஜரிடம் சாவிகளையும் நிர்வாகத்தையும் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தினார். அந்த சமயத்தில் திருவரங்கத் தமுதனாரின் தாயார் பரமபதம் அடைந்தார். அப்பொழுது 11-ம் நாள் காரியங்களைச் செய்யத் தமது சீடர்களில் சிறந்த ஒரு பிராமணரை அனுப்பி அருளுமாறு ராமானுஜரிடம் அவர் விண்ணப்பித்தார்.

ராமானுஜரும் அவரின் அணுக்கச் சீடரான கூரத்தாழ்வாரை அனுப்பிவைத்தார். சிரார்த்தம் முடிந்து அமுது செய்த பின், “திருப்தியா” என்று திருவரங்கத்தமுதனார் கேட்க, கூரத்தாழ்வார் “திருப்தி இல்லை” என்று பதிலளித்தார். சிரார்த்தம் நிறைவு அடையாதோ என்று பதற்றத்தில் வேறு என்ன வேண்டும் என்று கேட்டார். கூரத்தாழ்வாரோ, திருவரங்கத்துக் கோயில் சாவிகளையும் கோவில் நிர்வாக உரிமையையும் புராண படனத்தையும் மிக நயமாகக் கோரினார். வேறு வழியின்றி கேட்டவற்றை அவரும் தர, கூரத்தாழ்வார் அதைக் கொண்டுவந்து, ஸ்ரீராமானுஜரின் பாதங்களில் சமர்ப்பித்தார்.

 தன் மீது சினம் கொண்டிருந்த சோழன் மறைவுக்குப் பின் திருவரங்கம் திரும்பிய இராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க, காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் இழந்த கண்ணை தெரியச் செய்யும்படி வேண்ட, பெருமாள் அவ்வாறே அருளினார். அதன் பின் மகிழ்ச்சியோடு திருவரங்கம் திரும்பி, மீண்டும் ஆசாரியன் கைங்கர்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கூரத்தாழ்வார் தன்னுடைய 123-ஆம் அகவையில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். இதைக் கண்டு வருத்தமுற்ற இராமானுஜருக்கு, ஆசாரியனை வரவேற்கவே முன்னரே திருநாட்டுக்குச் செல்வதாக முகமன் கூறிச் சென்றாராம் கூரத்தாழ்வான். 

கூரத்தாழ்வானுடைய ஜென்ம நட்சத்திரமானது வருகிற சனிக்கிழமை 26.1.2019 அன்று வருகிறது. அவர் அவதரித்த ஸ்தலமான காஞ்சிபுரம் அடுத்த கூரம் என்ற சிற்றூரில் வெகுவிமரிசையாக சாற்றுமுறை சம்பிரதாயமாகக் கொண்டாடப்படுகிறது. இரவு 11 மணிக்கு வெளியில் எழுந்தருளும் கூரத்தாழ்வான், கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் சகல சௌபாக்கியங்களுக்கும் அருள் பாலிக்க இருக்கிறார். நாமும் செல்வோம், அவன் தாள் பணிவோம், அருள் பெறுவோம்.

கூரம்: அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பகலில் பேருந்து வசதிகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com