சித்த மருத்துவமும், ஜோதிடமும்..!

நமது உடலானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளினால் ஆன கலவை
சித்த மருத்துவமும், ஜோதிடமும்..!
Published on
Updated on
1 min read

நமது உடலானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்கிற ஐந்து கூறுகளினால் ஆன கலவை. இவற்றில் வாதம் என்கிற காற்று, பித்தம் என்கிற நெருப்பு, கபம் அல்லது சிலேத்துமன் என்கிற நீரின் விகிதங்கள் ஒவ்வொரு உடலிலும் மாறுபடும். 

காற்றின் விகிதம் உடலில் அதிகமிருப்பின் அதனை வாத உடம்பு என்றும், நெருப்பின் விகிதம் அதிகமிருந்தால் அதனைப் பித்த உடலென்றும், நீரின் அளவு மிகுந்திருந்தால் கப உடலென்றும் நமது முன்னோர்கள் பகுத்துக் கூறியிருக்கின்றனர்.

முக்குற்றம் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் விகிதங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் போதே நமது உடலில் நோய் உருவாகிறது. வாதம் என்கிற காற்றின் தொடர்பாய் என்பது நோய்களும், பித்தம் என்கிற நெருப்பின் தொடர்பாய் நாற்பது நோய்களும், கபம் என்கிற நீர் தொடர்பாய் தொன்னூற்றியாறு நோய்களும் இருப்பதாக சித்தர் பெருமக்கள் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

சித்த மருத்துவமே இந்த அடிப்படையில்தான் இயங்குகிறது. இந்த விவரங்களைப் பல பதிவுகளின் ஊடே முன்னரே எழுதியிருந்தாலும் கூட, நமது மருத்துவத்தின் அடிப்படையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இத்தகைய உடலில் தங்கியிருக்கும் உயிரைக் காத்து வளர்க்கும் மருந்தே நாம் உட்கொள்ளும் உணவு. எனவேதான் உணவே மருந்து, மருந்தே உணவு என்கிற விதி இன்றளவும் சித்த மருத்துவத்தின் அடிநாதமாய் இருக்கிறது. 

நோய்க்கு மருந்து தருவதை விடவும் நோய்க்கான காரணம் அறிந்து மருத்துவம் செய்வதும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளில் ஒன்று.

எல்லாம் சரிதான்!, நோயை எப்படி அறிவது?

நவீன மருத்துவம் நோயைக் கண்டறிய இரண்டு அடிப்படை உத்திகளைக் கொண்டிருக்கிறது. அவை பொதுவான அறிகுறிகள் (signs) மற்றும் உணர் குறிகள் (symptoms) என்பனவாகும். 

சித்த மருத்துவத்திலும் இவை கையாளப்படுகிறது. ஆனால் இதைத் தாண்டிய மூன்றாவது ஒரு வழியும் சித்த மருத்துவத்தில் இருப்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அதைப் பற்றியதே இந்த தொடர். நோயைக் கண்டறியவும், அதற்கான தீர்வுகளைக் காண மூன்றாவது வழியாக ஜோதிடம் பழந்தமிழரின் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா!!. 

சித்த மருத்துவத்தில் ஜோதிடம் என்பது மூலிகைகளைப் பறிக்க வேண்டிய நேரத்தைக் கணிப்பது முதல் நோய் ஆரம்பித்த நேரத்தைக் கணக்கில் கொண்டு நோய் குணமாகும் கால அளவை தீர்மானிப்பது வரை நீண்டிருக்கிறது. இதனை சித்தர் பெருமக்கள் "சகுன சாத்திரம்" என்கின்றனர்.

நன்றி - சித்தர்கள் இராச்சியம்

ஆரோக்கிய வாழ்வுக்குப் பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்கிய பாரதத்தை உருவாக்குவோம்.....!

- கோவை பாலகிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com