காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில்

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் ஆத்மநாதர் கோயில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி
காசிக்கு இணையாகக் கருதப்படும் திருவிடைமருதூர் ஆத்மநாதர் கோயில்
Published on
Updated on
2 min read

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் ஆத்மநாதர் கோயில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 30-வது சிவதலமாகும். மேலும், கருவூர்த் தேவர், மாணிக்கவாசகர், பட்டினத்தார் ஆகியோரும் இத்தலத்தில் பாடியுள்ளனர். காசிக்கு இணையாகக் கருதப்படுகின்ற தலங்களில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும்.

இந்த திருவிடைமருதூர் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. இப்போது நாம் இந்த பஞ்ச லிங்கங்களில் தென்வீதியில் உள்ள ஆத்மநாதரை காண்போம்.

பெரிய கோயிலின் தெற்கு வீதியில் உள்ளது இந்த ஆத்மநாதர் கோயில். இக்கோயில் இருப்பது பல உள்ளூர் வாசிகளுக்கே தெரியாது என்பது ஓர் வருத்தத்துக்குரிய விஷயம். தென் வீதியில் Lord Krishna Nursary school உள்ளது. அதன் நேர் எதிரில் இரும்பு கம்பி கதவிட்ட ஒரு காலி மனைக்கட்டு ஒன்றுள்ளது அதில் சென்றால் சிதைவடைந்த இக்கோயில் தென்படும். இக்கோயில் ஒரு தனி சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.

இவ்வூர் பெருமான் மாணிக்கவாசகராலும் பாடப்பெற்றவர், இவர்தன் அடியார் கூட்டத்துடன் தென் தமிழகத்திலிருந்து வந்த போது இவ்விடத்தில் தங்கி குடிலமைத்து இத்தல இறைவனை வழிபட்டு வந்திருக்கிறார். பின்னர் பல தலங்கள் செல்ல கிளம்பியபோது இத்தல இறைவனை பிரிய விரும்பாத ஓர் அடியார் கூட்டம் இங்கேயே தங்கியது. அவர்கள் அஞ்சு கொத்து பரம்பரை என வழங்கப்பட்டனர்.

இந்த ஐந்து கிளை உறவினர் அனைவரும் சேர்ந்து தன் குருநாதர் வடிவமைத்த ஆத்மநாதர் கோயில் போன்றே தம் சமூகத்தினர் வழிபட ஓர் கோயிலை எழுப்பியுள்ளனர். இங்கு இறைவனும் இறைவியும் அருவுருவமாக இருக்கின்றனர். சிவன் இங்கு ஆவுடையாராக மட்டும் உள்ளவராகக் கருவறையில் இருக்கின்றார். இந்த பீடத்தில் அறிவொளி வடிவாக நமது ஆத்மநாதனை தியானித்து வழிபட வேண்டும்.

ஆத்மலிங்க வடிவில் இறைவன் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை

"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்

பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்

பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது

பரம ரகசியம் என்று கொள்ளே" 

என்று மாணிக்கவாசக விலாசம் நூல் கூறுகிறது.

ஆவுடையார் கோயில் போன்றே இங்கு இறைவன் ஆத்மநாதர் எனவும் இறைவி யோகாம்பாள் எனவும் அழைக்கப்படுகின்றனர். நிவேதனங்கள், பூஜைகள் யாவும் திருப்பெருந்துறை கோயில் போன்றே செய்யப்படுகிறது.

இக்கோயில் மாணிக்கவாசகர் வருகையின் பின்னர் எழுப்பப்பட்டது என்பதால் இக்கோயில் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த கோயிலாகும். கோயில் கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் இருக்கின்றனர். இறைவியின் எதிரில் ஓர் சிறிய சன்னதியில் மாணிக்கவாசகர் கற்சிலை ஒன்றிருந்தது - ஆம் இருந்தது. சில காலம் முன்னர் களவாடப்பட்டுவிட்டது.

ஆரம்ப கால கட்டத்தில் இம்மக்கள் ஓதுவார் திருக்கூட்டமாக இருந்துள்ளனர் பின்னர் காலப்போக்கில் பிற தொழில் சார்ந்து இயங்க ஆரம்பித்துள்ளனர். அதனால் வெளியூர் சென்று விட, இங்குக் கோயில் பழுதடைந்து நிற்கிறது. தென்புறம் வழி உள்ளே செல்லும்போது முகப்பில் ஒரு சிறிய கோபுரம் இருந்துள்ளது. காலப்போக்கில் சிதைந்து வாயில் முகப்பு மட்டும் எஞ்சியுள்ளது. கோயில் கருவறை முகப்பில் நந்தி ஒன்று அழகாகக் காட்சியளிக்கிறது. அதனருகில் கிழக்கு நோக்கிய ஒரு பெரிய விநாயகர் சிலை உள்ளது. பிரகாரத்திலிருந்த சிலையாம் இது. காலை மாலை விளக்கேற்றுதல் எளிமையான பூஜைகள் எனக் காலம் நகர்கிறது.

தற்போது அஞ்சு கொத்து சமூகத்தினை சார்ந்த திரு. ரமேஷ் (மடத்து பள்ளி ஆசிரியர்) இக்கோயிலைப் பார்த்துக்கொள்கிறார். அவரது வீடு இந்த கோயில் அருகில் இரண்டு வீடுகள் தள்ளி உள்ளது. சென்று அழைத்தால் உங்களுக்குத் தரிசனம் செய்ய உதவுவார். கோயிலைத் திருப்பணி செய்ய உதவிகள் கிடைத்தால் பணிகள் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- கடம்பூர் விஜயன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com