

இன்று ஷட்திலா ஏகாதசி எனும் மோட்ச ஏகாதசி! மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு பதினோராம் நாள் ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஏகாதசி ஒவ்வொரு மாதத்திலும் 2 முறை வரும். ஒன்று கிருஷ்ணபக்ஷத்திலும், மற்றொன்று சுக்லபக்ஷத்திலும் வரும். சுக்லபக்ஷம் என்பது அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கு முன்தினம் வரை உள்ள 15 நாட்கள். கிருஷ்ணபக்ஷம் என்பது பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கு முன்தினம் வரையிலான 15 நாட்கள்.
ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக்கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். அதாவது சூரியனிடமிருந்து சந்திரனுக்கு இருக்கும் இடைவெளியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நாட்கள் பொதுவாக "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அந்தவிதத்தில் அமாவாசை அல்லது பௌர்ணமி நாளிலிருந்து பதினோராவது நாளை ஏகாதசி எனும் பெயரில் ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறது.
ஷட் திலா ஏகாதசி
மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ஷட்திலா (ஷட் என்றால் ஆறு, திலா என்றால் எள்) ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்னதானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும் கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.
ஷட்திலா ஏகாதசியின் மகிமை
ஒரு சமயம் தாலப்ய ரிஷி புலஸ்திய முனிவரிடம், முனிசிரேஷ்டரே! பூமியில் மக்கள் அறியாமையின் காரணமாக கொலை, கொள்ளை, அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், போன்ற மகாபாபமான செயல்களில் ஈடுபடுகின்றனர். பின்னர் அதனை எண்ணி சிலர் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நரகத்திலிருந்து மீள வழி இருக்கிறதா என்று வினவினார். பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம் அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!" என வேண்டினார்.
புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங்கினார்.. தால்ப்யரே! முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பல தர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள். சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை.
ஒருவன் அன்னதானம் செய்யாமல் அவனால் தேவலோகத்தில் ஜீவிப்பதுகூட கடினம். எனவே அவளது இக்குறையைத் தீர்க்க எண்ணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பிச்சைக்காரன் வடிவில் சென்று அவளிடம் அன்னபிக்ஷை வேண்டினார். அதைக் கேட்டவள் ஆத்திரத்தில் மணலால் ஆனதொரு பிண்டத்தை அவருக்கு தானமளித்தாள். அதனை எடுத்துக் கொண்டு நானும் வந்துவிட்டேன்.
அதனைக்கொண்டு சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை ஸ்ரீ கிருஷ்ணர் அமைத்தார். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவள் வாழ்வு முடிந்து சுவர்க்கம் வந்தபோது மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் வீட்டினுள் தனம், தானியம், இருக்கைகள் ஏதுமின்றி அவள் அளித்த மண்ணைப் போலவே இருந்தது. அதனைக் கண்டவள் மிகவும் பயத்துடனும், கோபத்துடனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து பூவுலகில் இத்தனை விரதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் எனது வீட்டில் ஏதும் இல்லாததற்கான காரணம் என்ன இறைவா? என்றாள்.
அவளிடம் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான காரணத்தைக் கூறிய போது, அதிலிருந்து மீள வழி என்ன என்று கேட்டாள். அப்போது அவளிடம், இப்போது உன் இல்லத்திற்கு உன்னைக் காண தேவஸ்த்ரீகள் வருவர். அவர்கள் வரும் வேளையில் கதவை அடைத்து, அவர்களிடம் இந்த ஷட்திலா ஏகாதசி மகாத்மியதைக் கேள். அவர்கள் கூறும் வரை கதவைத் திறக்காதே என்றார். அவளும் அப்படியே செய்தாள். அதனைக் கேட்ட அனைத்துப் பெண்களும் சென்றுவிட்டனர்.
சற்று நேரத்தில் அவளைக் காணும் ஆவலில் திரும்பி வந்த தேவஸ்த்ரீகள், அவளிடம் ஷட்திலா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கூறினர். பிறகு அதனைக் கேட்டு, கதவைத் திறந்தாள். அந்த வீட்டில் இருப்பது ஒரு கந்தர்வியோ, நாகரோ, இல்லாமல் ஒரு மானுடப்பெண் நிற்பது கண்டு வியந்து சென்றனர்.
அதன் பின்னர், அந்த பிராமணஸ்திரீ ஷட்திலா ஏகாதசி விரதத்தை நியமம் தவறாது கடைப்பிடித்தாள். அதன் பலனாக அவளது உடல் தேவஸ்த்ரீகளைப் போன்று ஜொலித்தது. அவளது இல்லம் முழுவதும் தனம், தானியங்களால் நிரம்பி வழிந்தது. அவளது வீடு ஸ்வர்ணமயமான மாளிகையாக மாறி பேரொளியோடு மின்னியது. எனவே, பகட்டுக்காக இல்லாமல் பக்தியுடன் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் இறுதியில் சுவர்க்கமும், எல்லாப் பிறவிகளிலும் ஆரோக்கியமும், இறுதியில் முக்தியும் கிடைக்கும். எவரொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் அவருடைய பாவங்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் இந்த விரதத்தினால் அவரை எந்தவொரு தீய சக்தியும், தீய சகுனங்களும் பின்தொடராது என்றும் அவரது இல்லத்தில் வறுமை என்ற பேச்சுக்கே இடமின்றி தனம், தானியங்களால் நிரம்பி வழியும்.
"தால்ப்யரே! மாசி மாத ஆரம்பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் மற்றும் பருத்திக்கொட்டை ஆகியவற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப்பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகும்!" என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறையைப் பற்றியும் கூறினார்.
பூசனிக்காய், தேங்காய், கொய்யாப்பழம், கொட்டைப்பாக்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றால் ஸ்வாமியைப் பூஜை செய்ய வேண்டும். வேத வல்லுநர் ஒருவரை மகா விஷ்ணுவாக பாவித்து, அவருக்குத் தண்ணீர்ச் சொம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், கறுப்புப் பசு ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்க வேண்டும். எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொள்வது, அரைத்த அதே எள்ளுடன் நீராடுவது, எள்ளைத் தானமாகக் கொடுப்பது, எள்ளை வைத்து ஹோமம் செய்வது, எள்ளையும் நீரையும் சேர்த்து தானமாகக் கொடுப்பது, எள் கலந்த உணவை உண்பது என ஆறு வகையாக எள்ளை உபயோகிப்பதால், இது 'ஷட் திலா' எனப்படுகிறது. இந்த பூஜையை முறைப்படி செய்தால், நீங்கள் சொன்ன பாவங்கள் எல்லாம் விலகும்!" என்றார் புலஸ்தியர்.
அதுமட்டுமின்றி, இந்த விரதத்தினை தான, தர்மங்களோடு கடைப்பிடிப்பவருக்கு என்றும் உணவுப் பஞ்சமே வராது என்றும் அவர்கள் பல பிறவிகளிலும் நித்ய ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு இறுதியில் அவர்கள் முக்தி அடைவர் என்று புலஸ்திய முனிவர் தாலப்ய முனிவருக்குக் கூறி முடித்தார் என்றும் புலஸ்திய மகரிஷி தாலப்ய மகரிஷியிடம் கூறியதாகப் புராணக் கதைகளில் காணப்படுகின்றது.
இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஆறு விதமாகப் பயன்படுத்துவார்கள்.
1. எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.
2. எள் தானம் செய்வது.
3. எள்ளால் ஹோமம் செய்வது (தில ஹோமம்)
4. எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.
5. எள் அன்னம் உண்பது.
6. எள் தானம் பெறுவது.
இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. இதனால் அநேகப் பாவங்கள் விலகுகின்றன என்றும் எள்தானம் செய்த அளவிற்கேற்ப அத்தனை 1௦௦௦ வருடகாலம் சுவர்க்கத்தில் வசிக்கும் பேறுபெறுவர்.
தில ஹோமம்
தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது பிரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது. இறந்தபின் பிரேதத்தை எரித்து அதன் அஸ்தியைக் கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்துவிட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு பிரேதத்திற்குச் சரியான முறையில் அந்திம கிரியை எனும் பிரேத ஸம்ஸ்காரங்கள் சரியாகச் செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் எலும்பைச் சுற்றி வரும்.
விபத்துகளில் மரணம் நேரும்போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்யத் தகுதியற்ற நிலையே அடைந்துவிடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்காரங்கள் செய்யப்படுவதில்லை. அத்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாகச் சுற்றிவருகின்றன. மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும் (நியமனங்களை கடைப்பிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், ஆக்ஸிடென்ட் போன்ற செயற்கை மரணத்தால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிகாரம் செய்யாததால்) திருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல், வருஷா வருஷம் முறையாகச் சிராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் சிராத்தத்தை முறைதவறிச் செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.
இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு
சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாகக் கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு சிரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது. நமது வேதங்கள். மேலும் எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது நமது வேதம்.
பிரேதத்தின் கடைசி நிலை அஸ்தி எனும் எலும்பாகும். எலும்பின் காரகர் சனைஸ்வர பகவானாவார். எலும்பில் இருக்கும் சுண்ணாம்புச் சத்து எனும் கால்ஷியத்திற்கும் காரகர் சனைஸ்வர பகவானாவார். எள்ளில் 95% கால்ஷியம் நிறைந்திருப்பதாக அறிவியல் கூறுகிறது. எள்ளின் காரகரும் சனைஸ்வர பகவானாவர். எனவே பிரேத சமஸ்காரம் செய்து அஸ்தி விஸர்ஜனம் செய்ய இயலாமல் போகும்போது தில ஹோமம் செய்வது அந்த தோஷத்தை போக்குகிறது.
பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில் பிரேத ஸ்வரூபியாக "ஆயாது பிதர" எனக் கூறி ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்யக் கூடாது.
ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்க பட்டினம் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களில் பஜனை மடம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும். ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு பிரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள்.
ஜோதிட ரீதியாக தில ஹோமம் யார் செய்ய வேண்டும்
1. ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை சூரியன் மற்றும் சந்திரனோடு ராகு கேது சேர்க்கை, 1-5-9 ஆகிய வீடுகளில் ராகு மற்றும் கேது நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை குறிக்கும்.
2. ஜெனன ஜாதகத்திலோ அல்லது பிரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து பிரேத தோஷத்தை அறியமுடியும். மேலும் மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்மந்த உறவினால் பிரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும்.
3. ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்திர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை - இருந்தாலோ குழந்தை பாக்கியம் இருக்காது. அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் செய்வது சிறந்ததாகும்.
4. தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாசை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷாவருஷம் சிராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத்தரும்.
5. சிலர் தில ஹோமம் செய்த பிறகு ஒழிவு பார்த்தல் எனும் வழக்கப்படி தோஷம் நீங்கியதாக விட்டுவிடுவர். ஒழிவு பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட பிரேதம் முக்தி அடைந்ததை மட்டுமே அறியமுடியும்.
பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நட்சத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், சிராத்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
சனிநாளில் வந்திருக்கும் இந்த ஷ்ட்திலா ஏகாதசி நாளில் கருப்பு எள்ளை உபயோகித்து விரதம் இருந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தால் துர்மரணம் அடைந்தவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி நிம்மதி ஏற்படும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.