தேவஸ்தான கோயில்களில் பங்குனி உத்திர உற்சவம்

திருப்பதி தேவஸ்தான கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள்
Updated on
1 min read


திருப்பதி தேவஸ்தான கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை பங்குனி உத்திரம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெற உள்ளன.
தேவஸ்தானம் நிர்வகிக்கும் நாராயணவனம் கோயிலில் உள்ள பத்மாவதி தாயார், திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உள்ள புண்டரீகவல்லித் தாயார் உள்ளிட்டோருக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 15-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை உற்சவங்கள் நடைபெற உள்ளன. தினந்தோறும் அவர்களுக்கு சுப்ரபாத சேவை, ஊஞ்சல் சேவை, திருமஞ்சனம், ஏகாந்த சேவை உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன. இந்த நாள்களில் ஏழுமலையானுடன் தாயார்கள் தனிமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் பங்குனி உத்திர உற்சவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதை முன்னிட்டு கோயில்களில் தினந்தோறும் மாலை வேளைகளில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.


இன்று கடிகாரங்கள் ஏலம்
திருப்பதியில் உள்ள சந்தைப் பொருள்கள் விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) கடிகாரங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அனைத்து வகை கடிகாரங்களும் மார்ச் 15ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள எம்.எஸ்.டி.சி. நிறுவனம் சார்பில் இணையதளம் வாயிலாக ஏலம் விடப்பட உள்ளன. இதில் காசியோ, ஆல்வின், டைமெக்ஸ், சொனாட்டா, டிஸாட், ஃபாஸ்ட் டிராக் உள்ளிட்ட நிறுவனங்களின் கடிகாரங்கள் அடங்கும். அதே வேளையில் திருப்பதியிலும் கடிகாரங்கள் ஏலத்தில் விடப்படும். மற்ற விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள சந்தைப் பொருள்கள் விற்பனையகத்தை 0877-2264429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு  w‌w‌w.‌t‌i‌r‌u‌m​a‌l​a.‌o‌r‌g, ‌w‌w‌w.‌m‌s‌t​c‌e​c‌o‌m‌m‌e‌r​c‌e.​c‌o‌m, ‌w‌w‌w.‌m‌s‌t​c‌i‌n‌d‌i​a.​c‌o என்ற இணையதளங்களில் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.34 கோடி
 திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.3.34 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி புதன்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.34 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


66,078 பேர் தரிசனம்
ஏழுமலையானை புதன்கிழமை 66,078 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,589 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 4 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்துக்கு 8 மணிநேரம் ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com