

திருத்தணி திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழாவையொட்டி, அருகில் உள்ள முருக்கம்பட்டு கிராமத்தில் வெள்ளிக்கிழமை திரெளபதி அம்மன் வீதியுலா நடைபெற்றது.
திருத்தணி காந்தி நகரில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வரும் ஏப். 7-ஆம் தேதி தீமிதித் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக, கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய உற்சவத்தின் ஒரு பகுதியாக நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. பிற்பகல் மகாபாரதச் சொற்பொழிவு, இரவு தெருக்கூத்து, கலை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதனிடையே, இக்கோயிலுக்கு வேண்டிக் கொண்ட முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்தனர். அவர்கள் உடலெங்கும் அலகு குத்தி, திருத்தணியில் இருந்து டிராக்டரில் அம்மனை கிராமத்துக்கு வியாழக்கிழமை கொண்டு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு இங்குள்ள பெருமாள் கோயிலில் பால், பன்னீர் மற்றும் வாசனை திரவியங்களுடன் அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன. அக்கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து பம்பை, உடுக்கை முழங்க அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவை முன்னிட்டு கிராமம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த உற்சவத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.