மே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! மே மாதம் முதல் நாளான இன்று
மே தினம்: உழைப்பாளர்களின் சிறப்பைப் பற்றி சனைச்சர பகவான் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
Updated on
5 min read

அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! மே மாதம் முதல் நாளான இன்று 01/05/2019 (புதன் கிழமை) தொழிலாளர் தினமாக உலகம்  முழுவதும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்குப் பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், பல தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துக்  கூறியபடி இருக்கின்றனர். உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை  வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தின திருநாள் கொண்டாடப்படுகிறது.

உழைப்பாளர்கள் தினம்

தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு நாளை  தங்களுடைய உரிமையாகப் போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது!

உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஒழித்துக்கட்டி தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்துவிதமான  துன்பங்களும் தீரும் என்றும், முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருகின்றனர் என்றும், இதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை  தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்றும் கூறி இதையெல்லாம் செய்வதற்கு, "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்றும் கூறினார் ஒப்பற்ற  பொதுவுடைமைக் கொள்கையை உலகுக்குத் தந்த ஆசான் காரல் மார்க்ஸ். இவ்வாறு அவர் கூறி 42 ஆண்டுகள், உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத  போராட்டத்தால் இந்த வெற்றி நிலைநாட்டப்பட்டது.

உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர். தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின்  கோரிக்கையை 1890-ஆம் ஆண்டு ஏற்றது. தொழிலாளர்களின் இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக மே தினம் என்று உலகெங்கும்  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் சென்னையில்தான் முதன் முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதி ம.சிங்கார வேலர் 1923-ஆம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினர்.

ஜோதிட சாஸ்திரத்தில் உழைப்பாளர் தினத்தின் சிறப்பு

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது கிரகங்களில் எட்டாம் எண்ணைக் குறிக்கும் கிரகமாக சனி பகவான் திகழ்கிறார். பொதுவாக இந்த எட்டாம் எண் பெயரில்  வந்தால் அதிர்ஷ்டம் இல்லாத எண்ணாகவே கருதப்படுகிறது. எட்டாம் எண்ணைக் கண்டால் கெட்டது சனி என்று பயப்படுகிறார்கள். 

தசாவதாரங்களில் ஸ்ரீ கிருஷ்ணன் பிறந்த தினம் எட்டு. திருமாலின் திருநாமம் (ஓம் நமோ நாராயணாய) என்பது எட்டெழுத்து. செல்வத்தைக் குறிக்கும் லக்ஷமி அஷ்ட  லக்ஷமிகளாக விளங்குகின்றனர். திக்குகள் எட்டு. அஷ்ட திக் பாலகர்கள் அஷ்ட வசுக்கள், சிவஸ்வரூபங்கள் எட்டு என இப்படி எட்டுக்கு ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கின்றன.  ஆனால் அந்த எட்டிற்காக உலகெங்கும் பல போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் தினமாக அமைந்தது தான் இன்று கொண்டாடும் "உழைப்பாளர் தினம்"  ஆகும்.

அது என்னங்க எட்டிற்கான போராட்டம்? 

"எட்டு மணி நேர வேலை - எட்டு மணி நேர ஓய்வு - எட்டு மணி நேரத் தூக்கம்" ஒருவருக்கு எட்டு மணி நேரம் தூக்கம் இல்லை என்றால் அவருக்குப் பைத்தியமே  பிடித்துவிடும். எட்டு மணிநேர தூக்கம் அவசியம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. ஆக ஒருவரின் உழைப்பையும் ஓய்வையும் தீர்மானிப்பவர் உழைப்பின் நாயகனான.  சனீஸ்வர பகவான் ஆவார்.

சிறு தொழிலோ அல்லது பெருந்தொழிலோ! உயர்ந்த பதவியோ அல்லது அடிமைத்தொழிலோ! அனைத்து வேலைகளுக்கும் காரகர் சனைஸ்வர பகவான் ஆவார். எனவேதான்  அவரை 'கர்ம காரகன்' என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. காலபுருஷ ராசியில் கர்ம காரகனாக விளங்கும் சனைச்சர பகவானே சகலவிதமான கர்மங்களுக்கும்  காரகராகிறார். முக்கியமாக உலக இயக்கமே சனைச்சர பகவானின் அருளால்தான் நடைபெறுகிறது என்றால் மிகையாகாது. பொதுவாக கர்மாவை மூன்று விதமாகப் பிரிக்கலாம். 

ஒருவர் தனக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டும் என்று குருவிடம் வேண்டினால் அவர் சனியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுவார். சனி தனது ஆதிக்க காலமான  இரண்டரை ஆண்டுக் காலத்தில் அவரை எவ்வளவு கடினமான உழைப்பைக் கொடுக்கமுடியுமோ கொடுத்து விடுவார். உழைப்பின் மறுபக்கம் வெற்றிதானே. இரண்டரை ஆண்டு  உழைப்புக்குப் பிறகு குரு பகவான் அவருக்கு தேவையான வெற்றி மற்றும் முன்னேற்றத்தைத் தந்து புகழின் உச்சத்தை எட்ட வைத்துவிடுவார். ஆகக் கஷ்டப்பட்டு தேன் எடுக்கிறவன் (சனி), ஒருவன் நோகாமல் புறங்கையை நக்கரவன் (குரு) மற்றொருவன். சனீஸ்வர பகவான் பேர் புகழுக்கெல்லாம் ஆசைப் படுவதில்லை. அவருக்கு  தெரிந்ததெல்லாம் "உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என்பதுதான். உழைப்பவர்கள் எல்லாம் சனி ஆதிக்கம் நிறைந்தவர்கள். உழைப்பவர்களைத்தான் சனீஸ்வர பகவானுக்கும்  பிடிக்கும்.

கடின உழைப்பாளிகள் எல்லோரும் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவை பாதிப்பதில்லை. சனி உழைப்பின் பிரியர் என்பதால் அவர்களை ஒன்றும்  செய்வதில்லை என்பதுதான் உண்மை.

ஜோதிடத்தில் கடின உழைப்பாளிகள் யார்?

1. கால புருஷ ராசியான மேஷத்திற்கு சனீஸ்வர பகவான் கர்மஸ்தானாதிபதியாகிறார். எனவே, மேஷ ராசி/லக்னக்காரர்கள் பொதுவாகவே கடுமையான உழைப்பாளிகளாக  விளங்குவர்.

2. துலா லக்னத்தில் சனி உச்சம் பெறுவதால் துலா ராசி/லக்னக்காரர்கள் எப்போதும் ஓடி ஓடி அடுத்தவர்களுக்காக உழைத்து உழைத்து ஓடாகும் ராசிக்காரர்கள் ஆவர்.

3. மகர கும்ப ராசிகளுக்கு சனீஸ்வர பகவான் அதிபதி ஆவதால் மகர கும்ப ராசி லக்னக்காரர்கள் கடும் உழைப்பாளிகள் ஆவார்கள்.

4. ஒருவர் ஜாதகத்தில் 10ல் சனி நின்றுவிட்டால் அவர்கள் உழைப்பால் முன்னேறிய உத்தமர்களாக இருப்பார்கள்.

5. ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவத்தில் சனி நின்றுவிட்டால் அவர்கள் "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" என உழைக்கும் வர்க்கமாகும்.

6. இந்த உலகத்தில் பேரும் புகழும் அடைந்த அத்தனை பேரின் ஜாதகத்திலும் சனியின் ஆதிக்கம் நிறைந்திருக்கும்.

7. இயக்கம் என கூறினாலே அது சனீஸ்வர பகவானையே குறிக்கும். எனவே அண்டம் முதல் பிண்டம் வரை அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து பொருட்களின்  இயக்கத்தையும் தீர்மானிப்பவர் சனீஸ்வர பகவான் ஆகும். 

8. ஜாதகத்தில் எட்டாம் வீடு என்பது ஆயுள் ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் சனீஸ்வரரை தவிர எந்த கிரகம் நின்றாலும் அந்த கிரகமும் பாதிப்புக்குண்டாகி  ஆயுளுக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவர். ஆனால், சனீஸ்வர பகவான் எட்டில் நின்றால் ஆயுளைக் கூட்டுவதோடு காரகோ பாவநாஸ்தி எனும் தோஷத்திலிருந்தும் விதிவிலக்கு  பெறுகிறார்.

9. சனீஸ்வர பகவான் கர்ம ஸ்தானாதிபதி என்றாலும் பாவாத்பாவத்தில் பத்துக்கு பத்தான ஏழாம் பாவத்தில் திக்பலம் பெறுகிறார். சனீஸ்வர பகவான் அல்ப விஷயங்களை  சுருக்கி அற்புத விஷயங்களைப் பெருக்குபவர் ஆவார். எனவே எட்டாம் வீட்டின் 12ம் வீடான ஏழாம் வீட்டின் காரகங்களைக் குறைத்தால் எட்டாம் வீட்டின் மூலமாக ஆயுள்  கூடும். பத்தாம் வீட்டிற்கு ஏழாம் வீடான சுகஸ்தானத்தின் காரகங்களை குறைத்தால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். மொத்தத்தில் கேந்திர வீடுகளான 1-4-7-10-ல் சனி  நின்றுவிட்டால் அவர்களுக்கு திரிகோண வீடுகளான 1-5-9 சிறப்பாக அமைந்துவிடும்.

உழைப்பாளர்களின் வயிற்றில் அடிப்பவர்கள் எல்லாம் ஆரம்பத்தில் சந்தோஷமாக இருப்பது போல் தான் தோன்றும். ஆனால் அவர்கள் சனைச்சர பகவானின் சாபத்திற்கு  ஆளாகி வாழ்வில் பல இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்பதே சத்தியம். எந்த ஒரு நிறுவனத்திலும் தங்கள் கீழ் வேலை செய்பவர்களை அழித்து முன்னேறுபவர்கள் ஒரு  நேரத்தில் முற்றிலும் வேலை இழந்து இன்னல் படுவதைக் கண்கூடாகக் காண முடியும்! நல்ல வேலை கிடைப்பது அவரவர் கர்ம நிலை அடிப்படையிலேயே அமைந்துவிடுகிறது.  எல்லோரும் ஏறக்குறைய ஒரே மாதிரி கல்வித் தகுதி பெற்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வேலை அமைந்துவிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நமது கீழ்  பணிபுரியும் ஊழியர்களின் முன்னேற்றம் பாதிக்காத வகையில் நடந்துகொள்வது அவசியம்.

அனைத்து விதமான உடல் உழைப்பு மற்றும் அதனால் ஏற்படும் வலிகளின் காரகர் செவ்வாய் மற்றும் சனைச்சரன் ஆகும். நமக்காக லேபர் வார்டு சென்று பிரசவ வலியை  அனுபவித்த அன்னையரையும் இந்நாளில் போற்றுவது சிறப்பாகும். என்றோ ஒரு நாள் அன்னையர் தினமாகக் கொண்டாடுவதை விட உழைப்பாளர் தினத்தில்  கொண்டாடுவதே சிறப்பாகும். இப்ப சொல்லுங்க. சனீஸ்வரர் நல்லவரா இல்லை கெட்டவரா? நல்லவருக்கு நல்லவர் என்பதுதான் உண்மை. 

குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர், செக்கில் எண்ணை ஆட்டுபவர்கள் போன்ற கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே  மண்பாண்டங்களுக்கும் செக்கில் ஆட்டிய எண்ணெய்க்கும் செய்யும் செலவு சனீஸ்வர பகவானுக்குச் செய்யும் பரிகாரம் என்பதால் ஆயுள் காரகனின் அருள் கிட்டுவதோடு  ஆரோக்கியம் கூடி ஆயுள் வளரும்.

அடிமை தொழில் செய்வோர், கடின உழைப்பாளிகளான வண்டி, ரிக்ஷா, வீடுகளில் பணி புரிபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு சம்பள பேரம், சம்பள  நிலுவை போன்றவை செய்யாமல் சரியான சம்பளத்தை வழங்குவது மற்றும் இயன்ற உதவிகளைச் செய்வது உழைப்பாளர் தினத்தில் சனைச்சர பகவானை மகிழ்விக்கும்  பரிகாரங்களாகும். 

சனைச்சர பகவானை ராஜாவாகக் கொண்டு அமைந்த விகாரி வருஷ ஆரம்பத்திலேயா சனைச்சர பகவானின் பிரியத்திற்குரியவர்களான உழைப்பாளர்களைச் சிறப்பிக்கும்  விதமாக உழைப்பாளர் தினத்தில் உழைப்பின் நாயகனாகிய சனீஸ்வர பகவானை வணங்கி "எட்டு மணிநேர வேலை- எட்டு மணிநேர ஓய்வு - எட்டு மணிநேர உறக்கம்"  என்ற ஆரோக்கிய வாழ்வைப் பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com